T20 உலகக் கிண்ண முதல் போட்டியில் ஓமான் அபார வெற்றி

ICC T20 World Cup – 2021

393
Getty Image

பப்புவா நியூ கினியா அணிக்கெதிரான T20 உலகக் கிண்ணத் தொடரின் தகுதிகாண் சுற்றின் முதல் போட்டியில் ஓமான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியீட்டியது.

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் நாடுகளில் நடத்தப்படும் 16 நாடுகள் பங்குபற்றுகின்ற  T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று (17) அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகியது.

இதன்படி, இந்த ஆண்டு T20 உலகக் கிண்ணத்தின் ஆரம்பப் போட்டியில் ஓமான் – பப்புவா நியூ கினியா அணிகள் மோதின.

ஓமானின் அல் அமரத் நகரில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஓமான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய பப்புவா நியூ கினியா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் விதமாக போட்டியின் 2ஆவது ஓவரில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான டொனி உரா மற்றும் லெகா சிஎகா ஆகிய இருவரும் ஓட்டமின்றி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து 3ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த அணித்தலைவர் அசாத் வாலா – சார்லஸ் அமினி ஆகிய இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.

இதில் சார்ள்ஸ் எமினி, 37 ஓட்டங்களுடன் ரன்-அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேற, அணித்தலைவர் அசாத் வாலா அரைச் சதம் கடந்து 57 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

எனினும், அடுத்த வந்த வீரர்களும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஒற்றை இலக்க ஓட்டத்துடன் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 100 ஓட்டங்களை எடுத்திருந்த பப்புவா நியூகினியா அணி, அடுத்த 3.1 ஓவரில் 116 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இறுதியில் அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களை எடுத்தது.

ஓமான் அணி தரப்பில் அணித்தலைவர் ஷீஸான் மக்சூத், 4 ஓவர்கள் பந்துவீசி 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஓமான் அணிக்காக T20 போட்டிகளில் அதிசிறந்த பந்துவீச்சுப் பிரதியைப் பதிவுசெய்த வீரராக இடம்பிடித்தார்.

மறுபுறத்தில் பிலால் கான் மற்றும் கலீமுல்லாஹ் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட் வீதம் கைப்பற்றினர்.

இதையடுத்து 130 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஓமான் அணி களமிறங்கியது.

ஓமான் அணிக்கு அகிப் இல்யாஸ் – ஜதிந்தர் சிங் ஜோடி அதிரடியான ஆரம்பத்தைக் கொடுத்தது. இதில் இருவரும் அரைச் சதம் கடந்தது மட்டுமல்லாமல் அணியை வெற்றிப் பாதைக்குச் அழைத்துச் சென்றனர்.

இதன்மூலம் ஓமான் அணி 13.4 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினியாவை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜதிந்தர் சிங் 42 பந்துகளில் 73 ஓட்டங்களையும், ஆகிப் இல்யாஸ் 43 பந்துகளில் 50 ஓட்டங்களையும் எடுத்தனர்.

போட்டியின் ஆட்டநாயகன் விருதை பந்துவீச்சில் மிரட்டிய ஓமான் அணித்தலைவர் ஷீஸான் மக்சூத் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, ஓமான் அணி தமது 2ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணியையும், பப்புவா நியூகினியா அணி தமது 2ஆவது போட்டியில் ஸ்கொட்லாந்து அணியையும் எதிர்வரும் 19ஆம் திகதி சந்திக்கவுள்ளன.

போட்டியின் சுருக்கம்

பப்புவா நியூ கினியா அணி – 129/9 (20) – அசாத் வாலா 59, சார்ள்ஸ் எமினி 37, ஷீஸான் மக்சூத் 20/4, பிலால் கான் 16/2, கலீமுல்லாஹ் 19/2

ஓமான் அணி – 131/0 (13.4) – ஜதிந்தர் சிங் 73, அகிப் இல்யாஸ் 50

முடிவு – ஓமான் அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…