நமீபியாவிற்கு எதிரான வெற்றியுடன் T20 உலகக் கிண்ணத்தினை ஆரம்பிக்குமா இலங்கை???

163
Sri Lanka vs Namibia

இலங்கை கிரிக்கெட் அணி, 2021ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியினை நமீபியாவிற்கு எதிரான போட்டியுடன் ஆரம்பம் செய்கின்றது. 

T20 உலகக் கிண்ணத்திற்கான ஆரம்ப சுற்றில் குழு A இல் நமீபியா, அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுடன் போட்டியிடவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, எதிர்வரும் திங்கட்கிழமை (18) மாலை அபுதாபியில் நமீபியாவுடன் ஆரம்பாகும் மோதலில் இருந்தே சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் காணப்படுகின்றது. 

>> T20 உலகக் கிண்ணம்; தகுதி சுற்றில் இலங்கைக்கு எதிரான சவால்கள்

மறுமுனையில் பபுவா நியூ கினியா போன்று, நமீபியாவிற்கும் நடக்கவிருக்கும் T20 உலகக் கிண்ணத்தொடர் கன்னி T20 உலகக் கிண்ணமாக அமைகின்ற நிலையில், அவ்வணிக்கு முன்னாள் T20 உலகக் கிண்ண சம்பியன்களாக இருக்கும் இலங்கைக்கு எதிரான போட்டி மிகப் பெரிய தடை தாண்டலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

வரலாறு

18 வருடங்களின் பின்னர், அதாவது 2003ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கு பின்னர் நமீபியா அணி ஐ.சி.சி. இன் உலகக் கிண்ண தொடர் ஒன்றில் விளையாடுவது இதுவே முதல் தடவையாகும். எனினும், ஐ.சி.சி. இன் அனைத்து வகையான உலகக் கிண்ணத் தொடர்களிலும் ஆடியிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி, T20 உலகக் கிண்ணத் தொடரில் ஒரு தடவை சம்பியன் பட்டம் வென்றிருப்பதோடு, இரண்டு தடவைகள் T20 உலகக் கிண்ணத் தொடர்களில் இரண்டாம் இடத்தினையும் பெற்றிருக்கின்றது. 

இதேநேரம், இந்த T20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை – நமீபியா அணிகள் இடையே நடைபெறும் T20 போட்டியே, இரு அணிகளும் சர்வதேச அரங்கில் விளையாடும் முதல் T20 போட்டி என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். 

இலங்கை அணி 

T20 உலகக் கிண்ணத்திற்கு முன்னர் நடைபெற்ற ஓமான் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டிகள் மற்றும் T20 உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் மற்றும் பபுவா நியூ கினியா ஆகிய நாடுகளுடன் நடைபெற்ற பயிற்சிப் போட்டிகள் என அனைத்திலும் வெற்றி பெற்று, சிறந்த ஆரம்பம் ஒன்றினையே இலங்கை காட்டியிருக்கின்றது. 

>> T20 உலகக்கிண்ணத்தில் சாதித்து காட்டுமா இலங்கை?

எனினும் இலங்கை கிரிக்கெட் அணி, தமது முதல் பதினொருவர் குழாத்தில் எந்த வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் என்பதில் ஒரு ஸ்திரமான நிலையில் இல்லை என்றே கூற முடியும். ஏனெனில் ஓமான் – T20 உலகக் கிண்ண பயிற்சிப் போட்டிகளில் இலங்கை அணி வித்தியாசமான துடுப்பாட்ட வரிசைகளை பரிசீலித்ததனை அவதானிக்க முடியுமாக இருந்தது. 

எனினும் இருக்கும் வீரர்களினை நோக்கும் போது அவிஷ்க பெர்னாண்டோ அணியின் முன்னணி துடுப்பாட்டவீரராக இருக்க அவருக்கு குசல் ஜனித் பெரேரா, பெதும் நிஸ்ஸங்க, தனன்ஜய டி சில்வா, பானுக்க ராஜபக்ஷ மற்றும் சரித் அசலன்க ஆகிய வீரர்களின் பங்களிப்பும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இவர்கள் தவிர அணித்தலைவர் தசுன் ஷானக்க, சாமிக்க கருணாரட்ன மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகிய வீரர்கள் இலங்கை கிரிக்கெட் அணியின் மத்திய வரிசைக்கு சகலதுறை வீரர்களாக தங்களது பங்களிப்பினை வழங்க முடியும். 

இதேநேரம் பந்துவீச்சாளர்களாக காணப்படும் துஷ்மன்த சமீர, லஹிரு குமார மற்றும் இளம் சுழல்பந்துவீச்சாளரான மஹீஷ் தீக்ஷன போன்றோரின் பங்களிப்பும் இலங்கை அணியின் பந்துவீச்சுத்துறைக்கு பக்க பலமாக காணப்படுகின்றது.

எதிர்பார்ப்பு வீரர்

அவிஷ்க பெர்னாண்டோ – தான் அறிமுகமாகிய காலப்பகுதியில் ஒருநாள் போட்டிகள் போன்று T20 போட்டிகளில் பெரிய ஓட்டங்கள் குவிக்காது போயினும், ஓமான் மற்றும் இலங்கை T20 உலகக் கிண்ணப் பயிற்சிப் போட்டிகள் அனைத்திலும் அசத்தியிருக்கும், அவிஷ்க பெர்னாண்டோ நடைபெறப்போகும் T20 உலகக் கிண்ணப் போட்டிகளிலும் அதே ஆட்டத்தினை வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றார்.  

பொதுவாக ஆரம்பவீரராக களமிறங்கும் அவிஷ்க பெர்னாண்டோ தற்போது நான்காம் இலக்கத்தில் துடுப்பாடி ஓட்டங்கள் பெறுவதனை அவதானிக்க கூடியதாக காணப்படுகின்றது. எனவே, அண்மைக்காலமாக T20 போட்டிகளில் துடுப்பாட்டத்தில் தடுமாற்றம் காட்டும் இலங்கை அணிக்கு இந்த உலகக் கிண்ணத் தொடரில் அவிஷ்க பெர்னாண்டோவின் துடுப்பாட்டமே கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை குழாம் 

தசுன் ஷானக (தலைவர்), தனன்ஜய டி சில்வா (உப தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, குசல் பெரேரா, தினேஷ் சந்திமால், பானுக ராஜபக்ஷ, பெதும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க, வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரத்ன, துஷ்மன்த சமீர, அகில தனன்ஜய, மஹீஷ் தீக்ஷன, பினுர பெர்னாண்டோ, லஹிரு குமார

நமீபியா அணி  

நீண்ட காலம் சர்வதேச கிரிக்கெட்டில் பிரகாசிக்காததை அடுத்து தமது அணியினை மீண்டும் கட்டமைக்க ஆரம்பித்திருக்கும் நமீபியா கிரிக்கெட் அணி, இங்கிலாந்தின் கவுண்டி அணி பயிற்றுவிப்பாளரான பியர் டி பிரய்ன், தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் அல்பி மோர்கல் போன்ற வீரர்களை தமது பயிற்றுவிப்புக்குழாத்தில் உள்ளடக்கியவாறு காணப்படுகின்றது. 

>> 2022 T20 உலகக் கிண்ணத்திற்கு நேரடி தகுதியை பெறுமா இலங்கை?

இளம் வீரர்கள் கொண்ட தொகுதியாக இந்த T20 உலகக் கிண்ணத்தில் களமிறங்கும் நமீபியா, T20 உலகக் கிண்ண பயிற்சிப் போட்டிகள் எதிலும் வெற்றி பெறாத போதும் எந்த அணிக்கும் சவால் கொடுக்கும் வீரர்களை தங்களிடம் தொடர்ந்து வைத்திருக்கின்றது. 

குறிப்பாக, அணியின் தலைவராக காணப்படும் கெர்ஹாட் எரஸ்மஸ் 2019ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில், அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர்களில் ஒருவராக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இவர் தவிர நமீபிய அணியின் துடுப்பாட்டம் JJ ஸ்மிட், கிரைக் வில்லியம்ஸ் மற்றும் ஸ்டிபன் பார்ட் போன்ற வீரர்களின் மூலம் பலப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

மறுமுனையில் அணியின் பந்துவீச்சுத்துறையினை நோக்கும் போது வேகப் பந்துவீச்சாளரான ஜேன் பிரைலிங், சுழல்பந்துவீச்சாளர் பெர்னாட் ஸ்கொல்ட்ஸ் போன்ற வீரர்கள் நமீபிய அணிக்கு பலம் சேர்க்கின்றனர். 

அதேநேரம், தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி சகலதுறை வீரரான டேவிட் வியேஸ் உம், நமீபிய அணிக்குழாத்தில் இடம்பிடித்திருக்கின்றார். இவரின் சேர்க்கையும் நமீபிய அணியினை மேலும் பலப்படுத்துகின்றது. 

எதிர்பார்ப்பு வீரர்

டேவிட் வியெஸ் – 2016ஆம் ஆண்டில் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்காக அறிமுகம் பெற்ற டேவிட் வியெஸ், அண்மைக்காலங்களில் T20 போட்டிகளில் தொடர்ச்சியான திறமையினை வெளிப்படுத்தியிருந்தார். இதுவரை 20 T20 போட்டிகளில் ஆடியிருக்கும் டேவிட் வியெஸ் 24 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருப்பதோடு, அதிரடியான முறையில் நமீபிய அணியின் ஓட்டங்களை அதிகரிக்க கூடிய வல்லமையினையும் கொண்டிருக்கின்றார். எனவே, டேவிட் வியெஸின் பங்களிப்பு நமீபிய அணிக்கு T20 உலகக் கிண்ணத்தில் மிகப் பெரிய பக்கபலமாக காணப்படும்.

நமீபியக் குழாம் 

கெர்ஹாட் எரஸ்மஸ் (அணித்தலைவர்), ஸ்டீபன் பார்ட், கார்ல் பிர்கன்ஸ்டொக், மிக்காவு டு ப்ரீஸ், ஜேன் பிரைலிங், ஷேன் கிரீன், நிக்கோல் லோபி ஈட்டோன், பெர்னாட் ஸ்கொல்ட்ஸ், பென் சிக்கோங்கொ, JJ ஸ்மிட், ருபென் ட்ரம்பல்மன், மைக்கல் வான் லின்ஜன், டேவிட் வியெஸ், கிரைக் வில்லியம்ஸ், பிக்கி யா பிரான்ஸ்

இறுதியாக 

முடிவுகள் எதனையும் இலகுவில் தீர்மானிக்க முடியாத T20 போட்டிகளில் இலங்கை – நமீபியா என இரண்டு அணிகளும் எதிர்பார்ப்புக்களுடனேயே களமிறங்குகின்றன. இரு அணிகளும் திறமையான வீரர்களை கொண்டிருந்த போதும் குறித்த நாளில் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தும் அணிக்கே போட்டியின் வெற்றி சாத்தியமாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

அனாலும், முன்னாள் சம்பியன்களான இலங்கை அணிக்கு நமீபியாவை விடவும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத் தேவை உள்ளது. அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை அதிகரிக்க வெற்றியுடன் இந்த தொடரை இலங்கை ஆரம்பிக்கும் நோக்குடன் முதல் போட்டியில் களம் காணவுள்ளது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<