திலகரட்ன டில்சானின் அணிக்கு வெற்றி

885

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட, லெஜன்ட்ஸ் லீக் T20 (LCC) தொடரில் திலகரட்ன டில்ஷானின் ஆசிய லயன்ஸ் அணி  நேற்று (14) வேர்ல்ட் ஜயன்ட்ஸ் அணியை 35 ஓட்டங்களால் வீழ்த்தியிருக்கின்றது.

மனைவியின் நெகிழ்ச்சியான பதிவால் பலர் மனதை வென்ற கோஹ்லி

கட்டாரின் டோஹா நகரில் லெஜன்ட்ஸ் லீக் T20 தொடர் நடைபெறுகின்றது. மொத்தம் மூன்று அணிகள் பங்கெடுக்கும் இந்த தொடரின் மூன்றாவது போட்டியில் வேர்ல்ட் ஜயன்ட்ஸ் அணியினை டில்ஷானின் ஆசிய லயன்ஸ் அணி எதிர்கொண்டது.

மழையின் காரணமாக அணிக்கு 10 ஓவர்களாக போட்டி நடைபெற்றதோடு, வேர்ல்ட் ஜயன்ஸ் வீரர்களால் முதலில் துடுப்பாடப் பணிக்கப்பட்ட ஆசிய லயன்ஸ் மிஸ்பா உல் ஹக் மற்றும் திலகரட்ன டில்ஷானின் துடுப்பாட்ட உதவிகளோடு 3 விக்கெட்டுக்களை இழந்து 99 ஓட்டங்களை எடுத்தது.

ஆசிய லயன்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் மிஸ்பா உல் ஹக் 19 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 44 ஓட்டங்களைப் பெற்றிருக்க, திலகரட்ன டில்ஷான் ஒரு சிக்ஸர் மற்றும் 3 பௌண்டரிகள் உடன் 32 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 100 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய வேர்ல்ட் ஜயன்ட்ஸ் அணி 10 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 64 ஓட்டங்களையே பெற்றது.

கேன் வில்லியம்சனின் அபார சதத்தோடு நியூசிலாந்து வெற்றி

வேரல்ட் ஜயன்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் கிறிஸ் கெயில் அதிகபட்சமாக 16 பந்துகளில் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 23 ஓட்டங்கள் பெற்றார்.

ஆசிய லயன்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் சஹீட் அப்ரிடி மற்றும் அப்துல் ரசாக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பின் வெற்றியினை உறுதி செய்தனர்.

அதேவேளைஇப்போட்டியின் வெற்றியோடு திலகரட்ன டில்ஷானின் ஆசிய லயன்ஸ் அணி, லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் புள்ளிகள் அட்டவணையில் முதல் இடத்தினைப் பெறுகின்றது. அதேநேரம் ஆசிய லயன்ஸ் அணி இன்று (14) லெஜன்ட்ஸ் லீக் தொடரில் இந்திய மஹாராஜாஸ் வீரர்களை எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

ஆசிய லயன்ஸ் – 99/3 (10) மிஸ்பா-உல்-ஹக் 44(19)*, திலகரட்ன டில்ஷான் 32(24)*

வேர்ல்ட் ஜயன்ட்ஸ் – 64/5 (10) கிறிஸ் கெய்ல் 23(16)

முடிவு – ஆசிய லயன்ஸ் 35 ஓட்டங்களால் வெற்றி