இங்கிலாந்துடனான தொடரில் முக்கிய சுழல் பந்துவீச்சாளரை இழந்துள்ள பாகிஸ்தான்

102
Sky Sports

இங்கிலாந்து அணியுடனான தொடரிலிருந்து வைரஸ் தாக்கம் காரணமாக சுழல் பந்துவீச்சாளர் சதாப் கான் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் அவரின் வெற்றிடத்துக்காக மற்றுமொரு சுழல் பந்துவீச்சாளர் யாஸிர் ஷாஹ் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

12 ஆவது உலகக்கிண்ண தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் ஆரம்பமாவதற்கு முன்னர் அதற்காக இங்கிலாந்து நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணி தொடர் ஆரம்பமாவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னராக பயணத்தினை மேற்கொண்டு உலகக்கிண்ண தொடருக்காக பயிற்சிகளில் ஒன்றாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடன் ஒரு டி20 சர்வதேச போட்டி மற்றும் ஐந்து ஒருநாள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.

குறித்த டி20 சர்வதேச மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் 17 பேர் அடங்கிய குழாம் கடந்த வியாழக்கிழமை (18) அதன் தேர்வுக்குழு தலைவர் இன்ஸமாம் உல் ஹக்கினால் வெளியிடப்பட்டிருந்தது.

பாகிஸ்தான் உலகக் கிண்ண குழாமில் அமீருக்கு இடமில்லை

அதன்படி, உலகக்கிண்ண தொடருக்கான குழாமில் அறிவிக்கப்பட்டுள்ள 15 பேருக்கும் மேலதிகமாக இன்னும் இரண்டு வீரர்கள் சேர்க்கப்பட்டு டி20, ஒருநாள் குழாம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கடந்த காலங்களில் சிறந்த பெறுபேறுகளை வெளிக்காட்டாமையினால் உலகக்கிண்ண தொடருக்கான குழாமில் தவறவிடப்பட்டிருந்த வேகப்பந்துவீச்சாளராக மொஹம்மட் ஆமிர் இணைக்கப்பட்டுள்ளார்.

மேலும் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரரான ஆசிப் அலியும் இங்கிலாந்து அணிக்கெதிரான இரு தொடருக்கான குழாமிலும் இடம்பெற்றுள்ளார். இதேவேளை அறிவிக்கப்பட்டிருந்த குழாமில் இடம்பெற்றிருந்த நம்பிக்கை பந்துவீச்சு சகலதுறை வீரராக சதாப் கான் குறித்த குழாமிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு ஒரு வகையான வைரஸ் தாக்கப்பட்டுள்ளமையால் இவ்வாறு குறித்த தொடரிலிருந்து ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. சதாப் கான் குறித்த வைரஸிருந்து பூரணமாக விடுபடுவதற்கு குறைந்த பட்சம் நான்கு வாரங்கள் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவரின் இடத்தை நிரப்புவதற்கான 32 வயதுடைய   சுழல் பந்துவீச்சாளரான யாஸிர் ஷாஹ் குழாமிற்கு அழைக்கப்பட்டுள்ளார். 2011 ஆம் ஜிம்பாப்வே அணியுடன் நடைபெற்ற போட்டியில் ஒருநாள் சர்வதேச அறிமுகம் யாஸிர் ஷாஹ் இதுவரையில் 24 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், இரண்டு டி20 சர்வதேச போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ளார்.

இங்கிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் அணியின் ஒருநாள் மற்றும் டி20 குழாம்.

சர்ப்ராஸ் அஹமட் (அணித்தலைவர்), ஆபித் அலி, பாபர் அஸாம், பஹீம் அஷ்ரப், பகார் ஸமான், ஹரிஸ் சொஹைல், ஹசன் அலி, இமாட் வஸீம், இமாம் உல் ஹக், ஜூனைட் கான், முஹம்மட் ஹபீஸ், முஹம்மட் ஹஸ்னைன், யாஸிர் ஷாஹ், ஷஹீன் அப்ரிடி, சுகைப் மலிக், முஹம்மட் ஆமிர், ஆசிப் அலி

தொடர் அட்டவணை

  • 5 மே – டி20 சர்வதேச போட்டி – காடிப்
  • 8 மே – முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி – ஓவல்
  • 11 மே – இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி – ஹம்ப்சியர்
  • 14 மே – மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டி – பிரிஸ்டொல்
  • 17 மே – நான்காவது ஒருநாள் சர்வதேச போட்டி – ட்ரென் பிரிட்ஜ்ட்
  • 19 மே – ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டி – லீட்ஸ்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<