பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ணம் சீசெல்ஸ் வசம்

Mahinda Rajapaksa trophy four nations tournament

415
Seychelles

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை பெனால்டியில் 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்ட சீசெல்ஸ் அணி தொடரின் வெற்றிக் கிண்ணத்தை வென்றுள்ளது.

போட்டியின் 75 நிமிடங்கள் வரை 3-1 என பின்னிலையில் இருந்த சீசெல்ஸ் வீரர்கள் முழு நேரம் முடிவடையும்போது போட்டியை 3-3 என சமப்படுத்தி, ஆட்டத்தை பெனால்டிக்கு கொண்டு சென்றமை இலங்கைக்கு பெறும் ஏமாற்றமாகவே இருந்தது.

ஏற்கனவே நடந்து முடிந்த இந்த தொடரின் லீக் சுற்றின் நிறைவில் எந்தவித தோல்விகளும் இன்றி ஒரு வெற்றி மற்றும் இரண்டு சமநிலையான முடிவுகளுடன் சீசெல்ஸ் அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியிருந்தது. இலங்கை அணி ஒரு வெற்றி, ஒரு சமநிலை மற்றும் ஒரு தோல்வியுடன் இரண்டாவது அணியாக இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.

இதன்படி, பங்களாதேஷ் மற்றும் மாலைதீவுகள் அணிகள் தொடரின் முதல் சுற்றுடன் வெளியேறியிருந்தன.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை கொழும்பு குதிரைப் பந்தயத்திடல் அரங்கில் இடம்பெற்ற இறுதிப் போட்டியின் பிரதம அதிதியாக பிஃபாவின் தலைவர் ஜியான்னி இன்பான்டினோ பங்கேற்றிருந்தார்.

இலங்கை முதல் பதினொருவர்

அரங்கு முழுவதும் நிறைந்திருந்த இலங்கை ரசிகர்களுக்கு முன் ஆரம்பமாகிய இந்தப் போட்டியின் முதல் 5 நிமிடங்களுக்குள் மத்திய களத்தில் இலங்கை அணிக்கு கிடைத்த ப்ரீ கிக்கை மார்வின் ஹமில்டன் பெற்றார். அவர் உயரத்தை குறைத்து கோல் நோக்கி உதைந்த பந்து சீசெல்ஸ் தடுப்பு வீரரின் உடம்பில் பட்டு கோலுக்குள் செல்ல, ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே இலங்கை அணி முன்னிலை பெற்றது.

போட்டியின் 30 நிமிடங்கள் கடந்த நிலையில் இலங்கையின் இளம் பின்கள வீரர்கள் அப்துல் பாசித் உபாதைக்கு உள்ளாகி மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட, அனுபவ வீரர் ரொஷான் அப்புஹாமி மாற்று வீரராக மைதானத்திற்குள் நுழைந்தார்.

முதல் பாதியில் சீசெல்ஸ் வீரர்கள் கோலுக்கு எடுத்த அனைத்து முயற்சிகளையும் இலங்கை பின்கள வீரர்கள் இலகுவாகத் தடுத்தனர். எனினும், முதல் பாதியின் உபாதையீடு நேரத்தில் சீசெல்ஸ் வீரர் ஒரு திசையில் இருந்து உள்ளனுப்பிய பந்தை இம்மானுவெல் ஜோன் கோலுக்கு முன்னே இருந்து ஹெடர் செய்ய, பந்து வலது பக்க கம்பத்திற்கு அருகாமையினால் கோலுக்குள் சென்றது.

எனவே, முதல் பாதி நிறைவடையும்போது ஆட்டம் தலா ஒரு கோல்களுடன் சமநிலை பெற்றது.

முதல் பாதி: இலங்கை 1 – 1 சீசெல்ஸ்

இரண்டாம் பாதி ஆரம்பமாகி 5 நிமிடங்களில் சீசெல்ஸ் வீரர்கள் மைதானத்தின் மத்தியில் இருந்து சிறந்த முறையில் மேற்கொண்ட பந்துப் பரிமாற்றங்களின் பின்னர் கோலுக்கு எடுத்த முயற்சியை சுஜான் பெரேரா சிறப்பாகத் தடுத்தார்.

அடுத்த இரண்டு நிமிடங்களில் இலங்கை வீரர்களிடையே இடம்பெற்ற சிறந்த பந்துப் பரிமாற்றங்களின் பின்னர், ரொஷான் அப்புஹாமி கோல் எல்லைக்கு வெளியில் இருந்து செலுத்திய பந்தை சீசெல்ஸ் கோல் காப்பாளர் ரொட்டி மிச்செல் கோல் எல்லையில் இருந்து பிடித்தார்.

எனினும், 55 நிமிடங்கள் கடந்த நிலையில் இலங்கை அணிக்கு கிடைத்த த்ரோ இன் வாய்ப்பை ஹர்ஷ உள்நோக்கி எறிய, பின்கள வீரர்களை விட்டு தனித்திருந்த ஆகிப் பந்தை கோலுக்குள் செலுத்தி, போட்டியில் இலங்கையை முன்னிலைப்படுத்தினார்.

மீண்டும் 70ஆவது நமிடத்தில் இலங்கை அணியின் திசையில் இருந்து உயர்த்தி செலுத்திய பந்தை முன்னோக்கிச் சென்று பெற்ற வசீம், எதிரணியின் பின்கள வீரர்களைத் தாண்டி கோலுக்கு எடுத்த முயற்சியின்போது பந்து வெளியே சென்றது.

அடுத்த இரண்டு நிமிடங்களில் சீசெல்ஸ் கோல் எல்லையில் வைத்து வசீம் ராசீக் எதிரணி தடுப்பு வீரரால் முறையற்ற விதத்தில் வீழ்த்தப்பட இலங்கைக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை வசீம் கோலாக்கி, இலங்கை அணியை 2 கோல்களால் முன்னிலைப்படுத்தியதோடு, இந்த தொடரில் தனது ஏழாவது கோலையும் பதிவு செய்தார்.

அடுத்த சில நிமிடங்களில் சீசெல்ஸ் வீரர் தம்போ இலங்கை அணியின் கோல் எல்லையில் இருந்து கோலின் எதிர் திசையினால் செலுத்திய பந்தை சக வீரர் ஹென்ரி கோலுக்குள் தட்டிவிட தவறியமையினால் பந்து வெளியே சென்றது.

எனினும், 88ஆவது நிமிடத்தில் பெர்ரி இலங்கை தடுப்பு வீரர்களைத் தாண்டி எடுத்துச் சென்று உள்ளனுப்பிய பந்தை பென்வோ மெரி கோல் நோக்கி உதைய, இலங்கை வீரரின் உடம்பில் பட்டு பந்து கோலுக்குள் சென்றது.

மீண்டும் 90ஆவது நிமிடத்தில் சீசெல்ஸ் பின்கள வீரர் உயர்த்தி இலங்கை அணியின் திசைக்கு செலுத்திய பந்தை ஒரு வீரர் ஹெடர் செய்ய, தம்போ பந்தைப் பெற்று சுஜானைத் தாண்டி எடுத்து கோலுக்குள் தட்டிவிட, ஆட்டம் மீண்டும் 3-3 என சமநிலையடைந்தது.

எனவே, முழு நேர நிறைவில் போட்டி சமநிலையாகியமையினால் வெற்றியாளரைத் தீர்மானிக்க ஆட்டம் பெனால்டி சூட் அவுட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இதன்போது இலங்கை அணிக்காக கோல் காப்பாளர் சுஜான் பெரேரா மட்டுமே கோலை அடித்தார். அவர் சீசெல்ஸ் அணியின் முதல் பெனால்டி உதையையும் தடுத்தார். ஏனைய வீரர்களான ஹமில்டன், அசிகுர் ரஹ்மான் மற்றும் ஷரித்த ரத்னாயக்க ஆகியோர் தமது வாய்ப்புக்களை தவறவிட்டனர்.

மறுமுனையில் சீசெல்ஸ் வீரர்கள் முதல் உதை தவிர்ந்த அடுத்த மூன்று உதைகளையும் தொடர்ந்து கோலாக்கியமையினால் 3-1 என்ற கோல்கள் கணக்கில் பெனால்டி முறையில் வெற்றி பெற்று, தொடரின் வெற்றியாளர்களாக மகுடம் சூடிக்கொண்டனர்.

தொடரில் 4 போட்டிகளில் 7 கோல்களைப் பெற்ற வசீம் ராசீக் அதிக கோல்களைப் பெற்றவர்களுக்கான தங்கப் பாதணியைப் பெற்றுக்கொள்ள, தொடரின் சிறந்த வீரருக்கான விருதினை இலங்கை அணியின் சுஜான் பெரேரா பெற்றார்.

முழு நேரம்: இலங்கை 3 – 3 சீசெல்ஸ்

பெனால்டி நிறைவு: இலங்கை 1 – 3 சீசெல்ஸ்

 கோல் பெற்றவர்கள்

  • இலங்கை – மார்வின் ஹமில்டன் 4’, மொஹமட் ஆகிப் 56’, வசீம் ராசீக் 73’,
  • சீசெல்ஸ் – இம்மானுவெல் ஜோன் 45+1’, பென்வோ மெரி 88, வுட்லி தம்போ 90’

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<