அபுதாபி T10 லீக்கில் ஏழு இலங்கையர்

751

அபுதாபி T10 லீக் 2022 தொடரில் விளையாடுவதற்கு இலங்கை கிரிக்கெட் அணியினைச் சேர்ந்த ஏழு வீரர்கள் ஒப்பந்தமாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அபுதாபி T10 லீக் தொடரானது இந்த ஆண்டு ஆறாவது முறையாக நவம்பர் மாதம் 23ஆம் திககி தொடக்கம் டிசம்பர் மாதம் 04ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்றது. இந்த நிலையில் தொடரின் வீரர்கள் ஏலம் திங்கட்கிழமை (26) நடைபெற்றிருந்தது.

>> T20 உலகக்கிண்ணத்தை வெல்லப்போகும் அணி எது? கூறும் முரளிதரன்!

நேற்று நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சு சகலதுறை வீரரான சாமிக கருணாரட்னவும், துஷ்மன்த சமீரவும் இரு வெவ்வேறு அணிகள் மூலம் கொள்வனவு செய்யப்பட்டிருக்கின்றனர்.

இதில் துஷ்மன்த சமீரவினை நோதர்ன் வோரியர்ஸ் அணி கொள்வனவு செய்ய, சாமிக்க கருணாரட்ன மோரிஸ்வில் சேம்ப் ஆர்மி அணியின் வீரராக மாறியிருந்தார்.

இதேநேரம், ஏலத்திற்கு முன்னர் தொடரில் பங்கெடுக்கும் அணிகள் தாங்கள் விரும்பிய வீரர்களை தங்களுக்காக தக்க வைத்துக்கொள்ள முடியும் எனக் குறிப்பிடப்பட்ட நிலையில் வனிந்து ஹஸரங்க, தசுன் ஷானக்க, பானுக்க ராஜபக்ஷ, மஹீஷ் தீக்ஷன மற்றும் மதீஷ பதிரன ஆகியோர் தங்களது முன்னைய அணிகள் மூலம் தக்கவைக்கப்பட்டிருக்கின்றனர். அதன்படி இந்த ஆண்டுக்கான T10 லீக் தொடரில் ஆடும் மொத்த இலங்கை வீரர்களின் எண்ணிக்கை 7 ஆக காணப்படுகின்றது.

தக்க வைக்கப்பட்ட வீரர்களில் சென்னை பிரேவ் அணிக்காக தசுன் ஷானக்க, பானுக்க ராஜபக்ஷ மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோர் மீண்டும் ஆடவுள்ளதோடு இலங்கையின் இளம் நட்சத்திரவீரர் வனிந்து ஹஸரங்க துஷ்மன்த சமீரவினை கொள்வனவு செய்திருக்கும் நோதர்ன் வோரியர்ஸ் அணிக்காக களம் காணவிருக்கின்றார். இதேவேளை, பங்களா டைகர்ஸ் அணிக்கு மதீஷ பதிரன மீண்டும் விளையாடுகின்றார்.

>> 300 விக்கெட் மைல்கல்லை எட்டிய பிரபாத் ஜயசூரிய

அதேநேரம், இந்த ஆண்டுக்கான T10 லீக் தொடரில் அமெரிக்காவினைச் சேர்ந்த நியூயோர்க் ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் மோரிஸ்வில்லே சேம்ப் ஆர்மி அணிகள் முதன்முறையாக இணைந்திருக்கும் நிலையில், தொடரில் பங்கெடுக்கும் மொத்த அணிகள் 8 ஆக அதிகரித்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இம்முறைக்கான தொடரில் ஒவ்வொரு அணிகளும் முதல் சுற்றில் தமக்கிடையே ஒரு தடவை மோதிக்கொள்வதோடு, முதற்சுற்றுக்கு வழங்கப்படும் புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு அணிகளுக்கு தொடரின் பிளே ஒப் சுற்றில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்படவிருக்கின்றமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

>>  மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<