இங்கிலாந்து அணியின் 3 வீரர்கள் உட்பட எழுவருக்கு கொவிட்-19

Pakistan tour of England 2021

333
Seven members of the England
@Getty Images

இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்கள் மற்றும் முகாமைத்துவ குழாத்தின் 4 உறுப்பினர்கள் உட்பட எழுவருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

பிரிஸ்டோலில் வைத்து நேற்று (5) மேற்கொள்ளப்பட்ட கொவிட்-19 தொற்று பரிசோதனையின் போது, இந்த எழுவருக்கும் கொவிட்-19 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

>> LPL தொடரில் ஆலோசகராக நியமிக்கப்படுகிறாரா? கூறும் மாலிங்க!

தொற்று ஏற்பட்டுள்ள ஏழு பேரையும், பிரிஸ்டோலின் சுகாதார பாதுகாப்பு விதிமுறையின் அடிப்படையில், தனிமைப்படுத்தலில் வைத்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், மேற்குறித்தவர்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்த ஏனைய உறுப்பினர்களையும் தனிமைப்படுத்தலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான றோயல் லண்டன் ஒருநாள் தொடர் நடைபெறும் என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது. 

அதன்படி, பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில், இங்கிலாந்து அணியின் தலைவராக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதுடன், முழுமையான குழாத்தின் விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி புதிதாக அறிவிக்கப்படும் குழாத்தின் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் சரியான பாதுகாப்புடன் கூடிய கொவிட்-19 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் பின்னரே குழாத்தில் இணைக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான றோயல் லண்டன் ஒருநாள் தொடர் நாளை மறுதினம் (8) ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<