லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் இரண்டாவது பருவம் ஆரம்பமாவதற்கு இன்னும் ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், ஐந்து அணிகளின் உரிமையாளர்களும் தங்கள் அணிகளின் தலைவர்கள் மற்றும் தலைமைப் பயிற்சியாளர்களை உறுதி செய்துள்ளதாக ThePapare.com இணையத்தளத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஜப்னா கிங்ஸ்
இலங்கையின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் திசர பெரேரா, கடந்த பருவத்தில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் தலைவராக செயல்பட்டு அந்த அணிக்கு சம்பியன் பட்டத்தை வென்று கொடுப்பதில் முக்கிய பங்குவகித்தார்.
அதேபோல, கடந்த பருவத்தில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் பயிற்சியாளராகச் செயல்பட்டு சிறப்பான பணியை ஆற்றிய திலின கண்டம்பி, இந்த ஆண்டும் ஜப்னா கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றவுள்ளார்.
அத்துடன், ஜெஹான் முபாரக் (துடுப்பாட்ட பயிற்சியாளர்), முத்துமுதலிகே புஷ்பகுமார (சுழல் பந்துவீச்சு பயிற்சியாளர்) மற்றும் மரியோ வில்லவராயன் (உதவி பயிற்சியாளர் மற்றும் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர்) ஹேமங் பதானி (ஆலோசகர்) ஆகியோர் ஜப்னா கிங்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழாத்தில் இடம்பெற்றுள்ளார்கள்.
தம்புள்ள ஜெயண்ட்ஸ்
இலங்கை T20 அணித்தலைவர் தசுன் ஷானக, இந்த ஆண்டு LPL தொடரில் தம்புள்ள ஜெயண்ட்ஸ் அணியின் தலைவராக செயல்படவுள்ளார். அதே நேரத்தில் முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் லோ அவ்வணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்படவுள்ளார்.
- LPL தொடரின் பங்காளராகும் டயலொக்
- ஜப்னா கிங்ஸ் பயிற்றுவிப்பு குழாத்தில் மாற்றம்
- LPL தொடரின் போட்டி மத்தியதஸ்தர், நடுவர் குழாம் அறிவிப்பு
இதனிடையே, தம்புள்ள அணியின் உதவிப் பயிற்சியாளராக சம்பத் பெரேராவும், களத்தடுப்பு பயிற்சியாளராக கௌஷல்ய கஜசிங்கவும் செயல்படவுள்ளனர்.
கோல் கிளேடியேட்டர்ஸ்
கடந்த ஆண்டு LPL தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இரண்டாவது இடத்தைப் பிடித்த கோல் கிளேடியேட்டர்ஸ் அணி, இம்முறை LPL தொடரில் இலங்கை அணியின் மத்திய வரிசை வீரரான பானுக ராஜபக்ஷ தலைமையில் களமிறங்கவுள்ளது.
இதில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் பயிற்சியாளராக செயற்பட்ட மொயின் கான் தனிப்பட்ட காரணங்களுக்காக இம்முறை LPL தொடரில் இருந்து விலகியதால், அவருக்குப் பதிலாக பாகிஸ்தானின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் உமர் குல் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, உதவிப் பயிற்சியாளராக இலங்கை முன்னாள் வீரர் இந்திக டி சேரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு ஸ்டார்ஸ்
இம்முறை LPL தொடரில் புதிய பெயருடன் களமிறங்கும் கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் தலைவராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முதல் பருவத்தில் கொழும்பு கிங்ஸ் அணியை வழிநடத்தியிருந்தார்.
இதனிடையே, இலங்கையின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் ருவன் கல்பகே கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே சமயம் சம்பக்க ராமநாயக்க (வேகப் பந்துவீச்சு பயிற்சியாளர்), மனோஜ் அபேவிக்ரம (களத்தடுப்பு பயிற்சியாளர்), ட்ரெவின் மெதிவ்ஸ் (உதவிப் பயிற்சியாளர்) மற்றும் பியல் விஜேதுங்க (சுழல் பந்துவீச்சு பயிற்சியாளர்) ஆகியோர் கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் பயிற்றுவிப்புக் குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.
கண்டி வொரியர்ஸ்
இலங்கையின் முன்னணி சகலதுறை வீரர்களில் ஒருவரான அசேல குணரட்ன, கண்டி வொரியர்ஸ் அணிக்கு தலைமை தாங்கவுள்ளார்,
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளரும், இந்திய கிரிக்கெட் வீரருமான லால்சாந்த் ராஜ்புத் இந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ருவின் பீரிஸ் கண்டி அணியின் உதவிப் பயிற்சியாளராக செயல்படவுள்ளார். இதில் முன்னாள் இந்திய டெஸ்ட் அணித்தலைவர் அதுல்வசம் கண்டி வொரியர்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநராக செயல்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
LPL தொடரின் இரண்டாவது பருவம் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் முதல் சுற்று லீக் போட்டிகள் அனைத்தும் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்திலும், பிளே ஓப் சுற்றுப்போட்டிகள் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறவுள்ளன.
தலைமைப் பயிற்சியாளர்கள்
காலி கிளேடியேட்டர்ஸ் – உமர் குல், ஜப்னா கிங்ஸ் – திலின கண்டம்பி கொழும்பு ஸ்டார்ஸ் – ருவன் கல்பகே, தம்புள்ள ஜெயண்ட்ஸ் – ஸ்டூவர்ட் லோ, கண்டி வொரியர்ஸ் – லால்சாந்த் ராஜ்பூத்
தலைவர்கள்
காலி கிளேடியேட்டர்ஸ் – பானுக ராஜபக்ஷ, ஜப்னா கிங்ஸ் – திசர பெரேரா, கொழும்பு ஸ்டார்ஸ் – அஞ்செலோ மெதிவ்ஸ், தம்புள்ள ஜெயண்ட்ஸ் – தசுன் ஷானக, கண்டி வொரியர்ஸ் – அசேல குணரட்ன
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<