23 வயதுக்கு உட்பட்ட இலங்கை தேசிய கால்பந்து அணிக்கான தேர்வு அடுத்த வாரம்

1182

23 வயதுக்கு உட்பட்ட ஆடவர் தேசிய கால்பந்து அணியை தேர்வு செய்வதற்காக இலங்கை கால்பந்து சம்மேளனம் பெத்தகான தேசிய கால்பந்து பயிற்சி மையத்தில் விசேட பயிற்சி முகாம் ஒன்றை நடத்தவுள்ளது.

ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் 23 வயதுக்கு உட்பட்ட சம்பியன்ஷிப் தொடர் மற்றும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் இந்த ஆண்டில் நடைபெறவுள்ள நிலையிலேயே இளம் வீரர்களுக்காக இந்த தேர்வு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதியில் இருந்து நடைபெறவுள்ள இந்த தேர்வு தொடர்பில் இணை கால்பந்து லீக்குகள் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்த லீக்குகளில் இருந்து திறமையான இளம் வீரர்களை அனுப்பும்படி கால்பந்து சம்மேளனம் கோரியுள்ளது. இவ்வாறு தேர்வுக்கு உட்படும் வீரர்கள் 1997 ஜனவரி முதலாம் திகதி அல்லது அற்குப் பின் பிறந்தவர்களாக இருப்பது கட்டாயமாகும்.

குசல் மெண்டிஸுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு என்கிறார் சந்திமால்

நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் தோல்வியைத் தழுவினாலும்…

இலங்கை கால்பந்து சம்மேளனம் அண்மைக் காலத்தில் தேசிய அணியை பலப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. கடந்த ஆண்டு லித்துவேனியா மற்றும் மலேசிய அணிகளுடன் பயிற்சி போட்டிகளை நடத்தியதோடு இரண்டு ஆண்டுகளின் பின் கடந்த ஆண்டிலேயே இலங்கை கால்பந்து அணி சர்வதேச போட்டிகளில் ஆடியமை குறிப்பிடத்தக்கது.

இதில் 23 வயதுக்கு உட்பட்ட இலங்கை அணிக்கு இந்த ஆண்டில் முக்கியமான போட்டிகள் உள்ளன. குறிப்பாக 2020 ஆம் ஆண்டு 23 வயதுக்கு உட்பட்ட ஆசிய சம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் இந்த ஆண்டு இலங்கை அதற்கான தகுதிகாண் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்த தகுதிகாண் சுற்றில் B குழுவில் இடம்பெற்றிருக்கும் இலங்கை அணி எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் திகதி பலஸ்தீன அணியை எதிர்கொள்ளவிருப்பதோடு மார்ச் மாதம் 24 ஆம் திகதி பஹ்ரைன் அணியுடனும், மார்ச் மாதம் 26 ஆம் திகதி பங்களாதேஷ் அணியுடனும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. பஹ்ரைனில் நடைபெறும் இந்தப் போட்டிகள் இலங்கை இளம் அணியின் திறமையை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பாக உள்ளது.

இந்நிலையில் இலங்கை தேசிய மற்றும் கழக மட்டத்தில் எதிர்பார்ப்புக் கொண்ட பல இளம் வீரர்கள் உள்ளனர். தேசிய குழாமில் இணைய எதிர்பார்க்கும் இளம் வீரர்கள் தமது லீக்கின் பரிந்துரையுடன் இந்த தேர்வு முகாமில் பங்கேற்கும்படி இலங்கை கால்பந்து சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது பற்றிய மேலதிக விபரங்களை தேசிய அணியின் முகாமையாளர் சுனில் சேனவீரவுடன் 077 727 0244 என்ற தொலைபேசி இலகத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ள முடியும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க