இலங்கை அணியை காயப்படுத்தும் உபாதைகள் ; தடுமாறும் தேர்வுக்குழு!

India tour of Sri Lanka 2021

505
SLC

இலங்கை கிரிக்கெட் அணி தங்களுடைய கடைசி 14 T20I போட்டிகளில் ஒரு போட்டியில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளதுடன், தங்களுடைய தொடர்ச்சியான 6வது T20I தொடர் தோல்வியை நோக்கிய நெருக்கடியை சந்திக்க வேண்டிய ஒரு நிலைமை நேரிட்டுள்ளது.

சுற்றுலா இந்திய அணிக்கு எதிரான முதல் T20I போட்டியில் 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியை தழுவிய நிலையில், இரண்டாவது T20I போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது.

எனது வெற்றியில் சமிந்த வாஸுக்கு முக்கிய பங்கு உண்டு: துஷ்மன்த சமீர

முதல் போட்டியில் தோல்வியிலிருந்து தங்களுடைய முன்னேற்றிக்கொள்வதற்கான இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை அணியின் முக்கிய சில வீரர்கள் உபாதைக்கு முகங்கொடுத்துள்ளமை அணிக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணிசார்பாக சிறந்த துடுப்பாட்டத்தை சரித் அசலங்க வெளிப்படுத்தியிருந்தார். இவர், 26 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 44 ஓட்டங்களை பெற்றிருந்தார். எனினும், குறித்த இந்த போட்டியின் போது, தசைப்பிடிப்பு உபாதைக்கு முகங்கொடுத்த சரித் அசலங்க, T20I தொடரில் எஞ்சிய போட்டிகளில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதேநேரம், இந்திய அணிக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியில் சிறப்பாக ஆடியிருந்த பானுக ராஜபக்ஷ, விரல் உபாதைக்கு முகங்கொடுத்திருந்ததுடன், அதிலிருந்து முழுமையாக குணமாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது. எனவே, இவரும் இந்த தொடரிலிருந்து முழுமையாக வௌியேறுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இருவரையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்ற பயிற்சியின் போது, இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்கவின் கையின் மேற்பகுதியில் பந்து தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், இந்தப்போட்டிக்கான தெரிவில் இவர் இடம்பெறமாட்டார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த போட்டிக்கான துடுப்பாட்ட வீரர்களை தெரிவுசெய்வதில் இலங்கை அணி கடும் சவாலை எதிர்கொண்டுள்ளது.

அத்துடன், முதல் T20I போட்டியில் 19 பந்துகளுக்கு 9 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்ட அஷேன் பண்டார, இரண்டாவது போட்டிக்கான குழாத்திலிருந்து நீக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், தேர்வுக்குழுவினர் லக்ஷான் தனன்ஜய மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சதீர சமரவிக்ரம ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்க எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

உபாதைகள் மற்றும் இடைநீக்கங்கள் காரணமாக அதிகமான வீரர்கள் அணித்தெரிவுக்கு தயாராக இல்லாத நிலையில், சரியான பதினொருவரை அமைப்பதற்கு இலங்கை அணி முகாமைத்துவம் தடுமாறி வருகின்றது. அதேநேரம், தேர்வுக்குழுவினர் ஏன் அதிகமான துடுப்பாட்ட வீரர்களை குழாத்தில் இணைக்கவில்லை? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

இலங்கை கிரிக்கெட் சபை தற்போது அனுபவ வீரர்கள் மற்றும் இலங்கை இளையோர், இலங்கை ஏ போன்ற அணிகளுக்கு என மேலும் இரண்டு உயிரியல் பாதுகாப்பு வலயங்களை உருவாக்கி வைத்துள்ளது. இந்த குழாம்களில் அஞ்செலோ பெரேரா, அசேல குணரத்ன மற்றும் அஷான் பிரியன்ஜன் போன்ற முக்கிய துடுப்பாட்ட வீரர்கள் உள்ளனர். எனினும், இவர்கள், குழாத்துக்குள் வரவழைக்கப்படவில்லை.

அஞ்செலோ பெரேரா, கடைசியாக நடைபெற்ற LPL தொடரில் தம்புள்ள வைகிங் அணிக்காக விளையாடி 7 இன்னிங்ஸ்களில் 140 என்ற ஓட்டவேகத்தில் 227 ஓட்டங்களை பெற்றிருந்ததுடன், அசேல குணரத்ன கண்டி டஸ்கர்ஸ் அணிக்காக 8 இன்னிங்ஸ்களில் விளையாடி 168 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<