கிரிக்கெட் விளையாட்டுக்கு பிரபல்யமான பாடசாலைகள் இடையில் இன்றைய நாளில் (24) மூன்று மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட வருடாந்த கிரிக்கெட் சமர்கள் இடம்பெற்றிருந்தன.

புனித ஜோசப் கல்லூரி எதிர் புனித பேதுரு கல்லூரி2l

கொழும்பினைச் சேர்ந்த பாடசாலைகள் இடையில் 44 ஆவது தடவையாக இடம்பெற்றிருந்த இந்த ஆண்டுச் சமரில் புனித ஜோசப் கல்லூரி 87 ஓட்டங்களால் பேதுரு கல்லூரியினை வீழ்த்தியிருந்தது.

கொழும்பு SSC மைதானத்தில் தொடங்கிய அணிக்கு 50 ஓவர்கள் கொண்ட இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற புனித ஜோசப் கல்லூரி முதலில் துடுப்பாடி ரெவான் கெல்லி (59) மற்றும் நிபுண சுமணசிங்க (53) ஆகியோரின் அட்டகாசமான அரைச்சதங்களுடன் 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 259 ஓட்டங்களினைக் குவித்திருந்தது.

மொஹமட் அமீன், லக்ஷான் கமகே மற்றும் சிவான் பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் புனித பேதுரு கல்லூரிக்காக கைப்பற்றியிருந்தனர்.

தொடர்ந்து வெற்றி இலக்கான 260 ஓட்டங்களை பெற பதிலுக்கு ஆடிய புனித பேதுரு கல்லூரி 172 ஓட்டங்களோடு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியுற்றது.

பேதுரு கல்லூரியின் துடுப்பாட்டத்தில் சந்துஷ் குணத்திலக்க 49 ஓட்டங்களினையும், ரண்மித் ஜயசேன 48 ஓட்டங்களினையும் குவித்து போராடியிருந்த போதிலும் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் அவ்வணிக்காக ஜொலிக்கத் தவறியிருந்தனர்.

புனித ஜோசப் கல்லூரியின் பந்துவீச்சில், ஜெஹான் டேனியல் மற்றும் அஷான் டேனியல் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது அணியின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்திருந்தனர்.

இந்த வெற்றியுடன் புனித ஜோசப் கல்லூரியானது, கடந்த மூன்று வருடங்களாக ஒரு நாள் சமரில் வெற்றியாளராகி வந்த பேதுரு கல்லூரியிடம் இருந்து இம்முறை கிண்ணத்தினை தமக்கு சொந்தமாக்கி கொண்டுள்ளது.

போட்டிச் சுருக்கம்

புனித ஜோசப் கல்லூரி – 259 (49.2) ரெவான் கெல்லி 59, நிபுண் சுமணசிங்க 53, துனித் வெல்லால்கே 37, ஜெஹான் டேனியல் 26, சிவன் பெரேரா 2/32, சந்துஷ் குணத்திலக்க 2/44, அமீன் மிப்லால் 2/60

புனித பேதுரு கல்லூரி – 172 (38.4) சந்துஷ் குணத்திலக்க 49, ரண்மித் ஜயசேன 48, ஜெஹான் டேனியல் 4/21, அஷான் டேனியல் 4/32


மஹிந்த கல்லூரி எதிர் றிச்மண்ட் கல்லூரி

தென்மாகாணத்தை சேர்ந்த பாடசாலைகளுக்கான இந்த வருடாந்த ஒரு நாள் போட்டியில் றிச்மண்ட் கல்லூரியானது மஹிந்த கல்லூரியை 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்கடிந்திருந்தது.

காலி சர்வதேச மைதானத்தில் தொடங்கிய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற றிச்மண்ட் கல்லூரி அணியினர் முதல் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை மஹிந்த கல்லூரி வீரர்களுக்கு வழங்கினர்.

முதலில் துடுப்பாடிய மஹிந்த கல்லூரிக்கு ஓட்டங்கள் சேர்ப்பது சிரமமாக இருந்தது. எனினும், அவ்வணிக்காக ஹன்சிக்க வெலிகிந்த மாத்திரம் அரைச்சதம் தாண்டி 51 ஓட்டங்கள் குவித்திருந்தார். இதன் துணையுடன், மஹிந்த கல்லூரியானது 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. றிச்மண்ட் கல்லூரி வீரர் சந்துன் மெண்டிஸ் சிறந்த முறையில் 37 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தார்.

தொடர்ந்து வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 190 ஓட்டங்களினை றிச்மண்ட் கல்லூரியினர் பதிலுக்கு துடுப்பாடி வெறும் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து அடைந்தனர்.

இரண்டு கைகளின் மூலமும் பந்துவீசும் ஆற்றல் கொண்ட இலங்கை 19 வயதின் கீழான அணித் தலைவர் கமிந்து மெண்டிஸ் 64 ஓட்டங்களைப் பெற்று றிச்மண்ட் கல்லூரியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தார்.

போட்டியிச் சுருக்கம்

மஹிந்த கல்லூரி – 189 (49.1) ஹன்சிக்க வெலிஹிந்த 51, கவிந்து எதிரிவீர 28, சந்துன் மெண்டிஸ் 5/37, அவிந்து தீக்ஷன 2/22

றிச்மண்ட் கல்லூரி – 190/4 (39) கமிந்து மெண்டிஸ் 64, தனன்ஞய லக்ஷான் 43, சுபானு ராஜலக்ஷ 2/45


டி.எஸ். சேனநாயக்க கல்லூரி எதிர் மஹாநாம கல்லூரி

“தங்கச் சமர்“ என அழைக்கப்படும் டி.எஸ். சேனநாயக்க கல்லூரி மற்றும் மஹாநாம கல்லூரிகள் இடையிலான 12 ஆவது மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட வருடாந்த கிரிக்கெட் போட்டியில், டக்வெத் லூயிஸ் முறையில் மஹநாம கல்லூரி 2 ஓட்டங்களால் வெற்றி பெற்றுக் கொண்டது.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் முதலில் வென்ற மஹநாம கல்லூரி  டி.எஸ். சேனநாயக்க கல்லூரி அணியினரை முதலில் துடுப்பாட பணித்தனர். முதலில் துடுப்பாடிய டி.எஸ். சேனநாயக்க கல்லூரி வீரர்கள் 50 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 236 ஓட்டங்களினைப் பெற்றுக் கொண்டனர்.

டி.எஸ். சேனநாயக்கவின் துடுப்பாட்டத்தில் பசிந்து அதித்ய 77 ஓட்டங்களினையும், முதித லக்ஷன் 58 ஓட்டங்களினையும் பெற்றிருக்க ஹேசான் ஹெட்டியாரச்சி 3 விக்கெட்டுக்களை மஹாநாம கல்லூரிக்காக கைப்பற்றியிருந்தார்.

தொடர்ந்து, போட்டியின் வெற்றி இலக்கான 237 ஓட்டங்களை துடுப்பாடிய மஹநாம கல்லூரி 47 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 213 ஓட்டங்களுடன் காணப்பட்டிருந்த போது வெளிச்சமின்மை காரணமாக போட்டியின் முடிவினை நடுவர்கள் டக்வெத் லூயிஸ் முறையில் தீர்மானித்தனர். அந்த வகையில், மஹநாம கல்லூரி 2 ஓட்டங்களால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மஹநாம கல்லூரியின் துடுப்பாட்டத்தில் பவான் ரத்நாயக்க 74 ஓட்டங்களுடனும், பவன்த வீரசிங்க 65 ஓட்டங்களினையும் சேர்த்து தமது அணியின் வெற்றிக்கு உதவயிருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டிச் சுருக்கம்

டி.எஸ். சேனநாயக்க கல்லூரி – 236 (50) பசிந்து அதித்யா 77, முதித லக்ஷன் 58, ஹெசான் ஹெட்டியாரச்சி 3/34

மஹாநாம கல்லூரி – 213/5 (47) பவன் ரத்னயநாக்க 74, பவன்த வீரசிங்க 65, சசிந்த ஹெட்டிகே 2/40