பங்களாதேஷ் – மேற்கிந்திய தீவுகள் இடையிலான இருதரப்பு தொடர் ஜூலையில்

199
CRICKET-LCA-WIS-BAN
Image Courtesy - AFP

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் நேற்றைய (15) அறிவிப்பின்படி, மேற்கிந்திய தீவுகள் அணி வருகின்ற ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பங்களாதேஷ்  அணியுடன் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகள் (டெஸ்ட், ஒரு நாள், T20) கொண்ட இருதரப்பு தொடரில் விளையாடவிருக்கின்றது.

இரண்டு அணிகளுக்குமிடையிலான இந்த இருதரப்பு தொடரின் போட்டிகள் மேற்கிந்திய தீவுகளிலும், ஐக்கிய அமெரிக்காவிலும் இடம்பெறவிருக்கின்றன. இந்த இருதரப்பு தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று T20 போட்டிகள் என்பன அடங்குகின்றன.

இந்திய கிரிக்கெட் சபையின் அழைப்பை புறக்கணித்த சங்கக்கார

ஜூன் மாத இறுதிப் பகுதியில் இந்த இருதரப்பு தொடரில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகளுக்கு பயணிக்கும் பங்களாதேஷ் அணி, அங்கே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலில் விளையாடவுள்ளது.

இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஜூலை மாதம் 4 ஆம் திகதி தொடக்கம் 8 ஆம் திகதி வரை அன்டிகுவா நகரிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி  ஜூலை 12 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை ஜமெய்க்கா நகரிலும் விளையாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. பங்களாதேஷ் அணி மேற்கிந்திய தீவுகளின் அன்டிகுவா மைதானத்தில் டெஸ்ட் போட்டியொன்றில் இதுவரை விளையாடி இருக்கவில்லை என்பதோடு ஜமெய்க்காவில் 14 ஆண்டுகளின் பின்னர் விளையாடவிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர், இரண்டு அணிகளுக்குமிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட  ஒரு நாள் தொடர் இடம்பெறவிருக்கின்றது. ஒரு நாள் தொடரின் முதல் போட்டி ஜூலை மாதம் 22 ஆம் திகதி கயானாவில் ஆரம்பமாகின்றது. ஒரு நாள் தொடரின் இரண்டாம் போட்டியும் அதே மைதானத்தில் ஜூலை மாதம் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. தொடர்ந்து மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டியில் விளையாட இரண்டு அணிகளும் சென். கிட்ஸ் நகருக்கு பயணிக்கவுள்ளன.

ஒரு நாள் தொடரினை அடுத்து பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் அடங்கிய T20 தொடர் நடைபெறவிருக்கின்றது.

இந்த T20 தொடரின் முதல் போட்டி மூன்றாவது ஒரு நாள் போட்டி நடைபெறும் சென். கிட்ஸ் மைதானத்தில் ஜூலை மாதம் 31 ஆம் திகதி இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

அயர்லாந்தின் கன்னி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி

இவற்றை அடுத்து எஞ்சிய இரண்டு T20 போட்டிகளும் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இடம்பெறவுள்ளது. இந்த T20 தொடருடன் பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இருதரப்பு தொடர் முடிவுக்கு வருகின்றது.

இந்த தொடரின் இரண்டு T20 போட்டிகள் அமெரிக்காவில் ஒழுங்கு செய்யப்பட்டதன் காரணம் தென், வட அமெரிக்க நாடுகளில் கிரிக்கெட் விளையாட்டை பிரபல்யப்படுத்தவே என மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி ஜோன்னி கிரேவ் கூறியிருந்தார்.

“ஐ.சி.சி. இன் அமெரிக்க உறுப்பினர்களான கனடா கிரிக்கெட் சபை மற்றும் ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட் சபை ஆகியோருடன் நாங்கள் இணைந்து வேலை செய்வதன் நோக்கம், வட அமெரிக்காவில் இருந்து தென் அமெரிக்கா வரை கிரிக்கெட் விளையாட்டை பிரபல்யப்படுத்தும் நோக்கமே“

மேற்கிந்திய தீவுகள் அணி பங்களாதேஷ் அணியுடனான இருதரப்பு தொடருக்கு முன்னர் ஜூன் மாதம் இலங்கை அணியுடன் தமது நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளது. மறுமுனையில் பங்களாதேஷ் அணியும் இந்த இருதரப்பு தொடருக்கு முன்பாக இந்தியாவில் இடம்பெறவிருக்கும் T20 தொடரில் அடுத்த மாத ஆரம்பத்தில் ஆப்கானிஸ்தான் அணியுடன் விளையாடவுள்ளது.

போட்டிகள் அட்டவணை

ஜூலை 4 தொடக்கம் 8 வரை – முதலாவது டெஸ்ட் போட்டி (அன்டிகுவா)

ஜூலை 12 தொடக்கம் 16 வரை – இரண்டாவது டெஸ்ட் போட்டி (ஜமெய்க்கா)

ஜூலை 22 – முதலாவது ஒரு நாள் போட்டி (கயானா)

ஜூலை 25 – இரண்டாவது ஒரு நாள் போட்டி (கயானா)

ஜூலை 28 – மூன்றாவது ஒரு நாள் போட்டி (சென். கிட்ஸ்)

ஜூலை 31 – முதலாவது T20 போட்டி (சென். கிட்ஸ்)

ஒகஸ்ட் 4 – இரண்டாவது T20 போட்டி (புளோரிடா)

ஒகஸ்ட் 5 – மூன்றாவது T20 போட்டி (புளோரிடா)

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க