பாரிஸ் பராலிம்பிக்கில் சரித்திரம் படைத்தார் சமித்த துலான்

Paris Paralympics 2024

67

பிரான்ஸில் நடைபெற்றுவரும் பாரிஸ் 2024 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் F44 பிரிவில் பங்குகொண்ட இலங்கை வீரர் சமித்த துலான் கொடிதுவக்கு, புதிய உலக சாதனையுடன் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.  

இம்முறை பாராலிம்பிக்கில் இலங்கை வென்ற முதலாவது பதக்கம் இதுவாகும் 

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மாற்றுத்திறனாளிகளுக்கான பராலிம்பிக் விளையாட்டு விழா நடைபெற்று வருகின்றது. இம்முறை பராலிம்பிக்கில் இலங்கையிலிருந்து 8 வீரர்கள் பங்குபற்றியுள்ளனர். 

இந்த நிலையில், நேற்று (02) இரவு நடைபெற்ற ஆண்களுக்கான F44 ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை சார்பில் போட்டியிட்ட சமித்த துலான், 67.03 மீட்டர் தூரத்தை எறிந்து வெள்ளிப்  பதக்கம் வென்றார். இதன்மூலம் F44 வகைப்படுத்தல் பிரிவுக்கான தனது சொந்த உலக சாதனையை முறியடித்து சமித்த புது வரலாறு படைத்தார். 

முதல் நான்கு முயற்சிகளில் முறையே 63.14 மீற்றர், 63.61 மீற்றர், 55.01 மீற்றர், 63.73 மீற்றர் ஆகிய தூரங்களைப் பதிவுசெய்த அவர், ஐந்தாவது முயற்சியில், 67.03 மீட்டர் தூரத்துக்கு ஈட்டிறை எறிந்து உலக சாதனையுடன் வெள்ளிப் பதக்கம் வென்று இலங்கைக்கு கௌரவத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளார். 

முன்னதாக கடந்த மே மாதம் ஜப்பானில் நடைபெற்ற உலக பரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பதிவு செய்த உலக சாதனையை (66.49 மீற்றர்) இம்முறை பராலிம்பிக்கில் வைத்து அவர் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதுமாத்திரமின்றி, இறுதியாக டோக்கியோ 2020 பராலிம்பிக் விளையாட்டு விழாவிலும்; சமித்த துலான் கொடிதுவக்கு வெண்கலப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

34 வயதான சமித்த துலான், இலங்கையின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர்களான சுமேத ரணசிங்க மற்றும் டில்ஹானி லேகம்கே ஆகிய இரண்டு வீரர்களுக்கு பயிற்சியளித்த பிரதீப் நிஷாந்தவின் கீழ் பயிற்சி பெற்றுள்ளார். அத்துடன், இலங்கைக்காக பராலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற தினேஷ் பிரியந்தவின் பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார் 

ஒரு சோகமான மோட்டார் சைக்கிள் விபத்துக்குப் பிறகு சமித்த துலான் தனது வலது காலில் பாதிப்பை அடைந்தார். இதனையடுத்து 2017 இல் பரா விளையாட்டுகளில் ஈடுபட ஆரம்பித்தார். இது அவரது விளையாட்டு வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. தற்போது, அவர் இலங்கை இராணுவ பொலிஸ் பிரிவில் வோரண்ட் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். 

இதனிடையே, சமித்த துலான் வெள்ளிப் பதக்கம் வென்ற போட்டியில் இந்திய வீரர் சுமித் அன்தில் 70.59 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து புதிய பராலிம்பிக் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரிக்க, அவுஸ்திரேலியாவின் மைக்கல் பியூரியன் (F44 வகைப்படுத்தல் பிரிவு) 64.89 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார். 

>>மேலும்பலமெய்வல்லுனர்செய்திகளைப்படிக்க<<