நிரோஷன், மாலிங்க மற்றும் மெதிவ்ஸின் இழப்பு குறித்து குருசிங்கவின் விளக்கம்

2628
Niroshan Dickwella

சுதந்திர கிண்ண முத்தரப்பு T-20 தொடருக்கான இலங்கை அணியில் இருந்து அதிரடி ஆட்டக்காரரும், விக்கெட் காப்பாளருமான நிரோஷன் திக்வெல்ல நீக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனையளிப்பதாக இலங்கை அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க தெரிவித்துள்ளார்.

[rev_slider LOLC]

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தையொட்டி, இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு T-20 தொடர் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ளது.

சகிப் அல் ஹசனின் மீள்வருகையில் தொடரும் சர்ச்சை

அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள சுதந்திர கிண்ண T-20 முத்தரப்பு மார்ச்

இந்த தொடருக்கான இந்திய அணி மற்றும் பங்களாதேஷ் அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தொடரை நடத்துகின்ற இலங்கை அணி வீரர்களின் விபரம் நேற்று (28) அறிவிக்கப்பட்டது. இதில் பங்களாதேஷில் இடம்பெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடரின் போது காயத்திற்கு உள்ளாகிய அஞ்செலோ மெதிவ்ஸ் உபாதையிலிருந்து மீளாத காரணத்தினால், இந்த குழாமில் உள்ளடக்கப்படவில்லை. மெதிவ்ஸ் இல்லாத இலங்கையை டெஸ்ட் அணித் தலைவரான தினேஷ் சந்திமால் வழிநடத்தவுள்ளார்.

இதேவேளை, பங்களாதேஷ் அணிக்கெதிரான T-20 தொடரில் பெரிதும் பிரகாசிக்காமையினால் அப்போதைய இலங்கை குழாமில் உள்வாங்கப்படாத வேகப்பந்து வீச்சாளர்களான சுரங்க லக்மால் மற்றும் நுவன் பிரதீப் ஆகியோர் இத்தொடருக்கான இலங்கை அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், தற்போது நடைபெற்றுவருகின்ற உள்ளூர் T-20 போட்டித் தொடரில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற நட்சத்திர வீரர் லசித் மாலிங்க தொடர்ந்தும் அணியிலிருந்து புறக்கணிப்பட்டுள்ளார்.

இதில் இலங்கை அணிக்காக அண்மைக்காலமாக விளையாடி வந்த இளம் நட்சத்திர வீரர் நிரோஷன் திக்வெல்ல மற்றும் லசித் மாலிங்க ஆகிய வீரர்கள் அணியில் இடம்பெறாதது இலங்கை கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து இலங்கை அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க க்ரிக் பஸ் இணையத்தளத்துக்கு வழங்கிய விசேட செவ்வியில், இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு இந்த அணித் தெரிவு சிறந்த உதாரணமாகும். தற்போது எமது அணியில் துடுப்பாட்ட வீரர்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் கடும் போட்டி நிலவி வருகின்றது. இதனால் வீரர்களுக்கு தமது திறமைகளை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

சுதந்திர கிண்ணத்திற்கான இலங்கை அணி இதுதான்

மார்ச் 6 ஆம் திகதி ஆரம்பமாகும் சுதந்திர கிண்ண முக்கோண T20

அதிலும், அண்மைக்காலமாக இலங்கை அணியில் இடம்பெற்று சிறப்பாக விளையாடி வருகின்ற நிரோஷன் திக்வெல்ல அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. ஆனால் குசல் ஜனித் பெரேரா உபாதையிலிருந்து குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதால் யாராவாது அணியிலிருந்து வெளியே செல்ல வேண்டும்.

எனினும், தற்போது திக்வெல்ல எமது இறுதி 15 பேர் கொண்ட அணியில் இடம்பெறாவிட்டாலும், எதிர்காலத்தில் இலங்கை அணிக்காக விளையாடவுள்ள முன்னிலை வீரராக உள்ளார்” எனத் தெரிவித்தார்.

இதில் கடந்த வருடம் முற்பகுதியில் நடைபெற்ற தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கெதிரான T-20 தொடர்களை கைப்பற்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்த நிரோஷன் திக்வெல்ல, இலங்கை அணியின் நிரந்தர வீரராக இடம்பிடித்து டெஸ்ட், ஒரு நாள் மற்றும் T-20 போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி வந்தார்.  

எனினும், அண்மையில் நிறைவுக்குவந்த பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தின் முதல் T-20 போட்டியில் 11 ஓட்டங்களைப் பெற்றக்கொண்ட திக்வெல்ல, 2ஆவது போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார். இதன்படி, அவர் இறுதியாகப் பங்கேற்ற 5 T-20 போட்டிகளில் 13.4 என்ற துடுப்பாட்ட சராசரியுடன் முறையே 17, 13, 25, 1 மற்றும் 11 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இவ்வாறு திக்வெல்ல தொடர்ந்து மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்துவதற்கு முக்கிய காரணமாக அவரை ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறக்காமல் அடிக்கடி துடுப்பாட்ட வரிசையை மாற்றுவது என தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம், அண்மைக்காலமாக இலங்கை அணியில் வாய்ப்பு கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டுவரும் லசித் மாலிங்க தொடர்பில் அசங்க குருசிங்க கருத்து வெளியிடுகையில், ”மாலிங்க தற்போது இடம்பெற்றுவருகின்ற உள்ளூர் T-20 போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றமை மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் கடந்த 2 மாதங்களாக அவர் எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடியிருக்கவில்லை. அதிலும் கடந்த காலங்களில் அவரால் திறமைகளை வெளிப்படுத்த முடியாது போனமை தொடர்பில் அவர் நன்கு அறிந்தும் வைத்துள்ளார். நான் மாலிங்கவுடன் பேசியபோது அவர் மனவேதனையுடன் இருப்பதை அறிய முடிந்தது.

எனினும், சுரங்க லக்மாலும், நுவன் பிரதீப்பும் மீண்டும் அணிக்குள் திரும்பியுள்ளதால் மாலிங்கவை இணைத்துகொள்வது கடினமாக உள்ளது. நாம் ஒரு போட்டித் தொடரை மாத்திரம் கருத்திற்கொண்டு அணித் தேர்வினை மேற்கொள்வதில்லை. எமது இலக்கு 2019 உலகக் கிண்ணப் போட்டிகளாகும். எனவே, மாலிங்க தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி திறமைகளை வெளிப்படுத்தினால் நிச்சயம் அணியில் இணைத்துகொள்ளப்படுவார்” என தெரிவித்தார்.

இந்நிலையில் அஞ்செலோ மெதிவ்ஸ் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், மெதிவ்ஸ் எமது அணியில் உள்ள சிறந்த வீரராவார். அவர் அணியில் இடம்பெறாதது மிகப் பெரிய இழப்பாகும். உண்மையில் எம்மைப் போல மெதிவ்ஸும் தனது உபாதை குறித்து அதிகம் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றார்.

இதேவேளை, முத்தரப்பு T-20 தொடரை முன்னிட்டு இலங்கை வீரர்களுக்காக நடத்தப்பட்டு வருகின்ற பயிற்சி முகாமில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான மஹேல ஜயவர்தனவும் இணைந்துகொண்டதாகத் தெரிவித்த அசங்க குருசிங்க, மஹேலவின் அனுபவம் நிச்சயம் இலங்கை வீரர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என தான் நம்புவதாகத் தெரிவித்தார்.

”உண்மையில் எமது பயிற்சி முகாமுடன் இணைந்துகொள்ளுமாறு நாம் மஹேலவிடம் கேட்டிருந்தோம். அவர் அதற்கு உடனே சம்மதமும் தெரிவித்திருந்தார். அதிலும் T-20 போட்டியில் சிறப்பாக விளையாடி அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக மாத்திரமல்லாது, ஒரு பயிற்றுவிப்பாளராகவும் அவருக்கு நிறைய அனுபவம் இருக்கின்றது. எனவே, இப்பயிற்சி முகாமின் போது T-20 போட்டியில் முதல் 6 ஓவர்களில் எவ்வாறு துடுப்பெடுத்தாட வேண்டும் என்பது தொடர்பிலும் வீரர்களுக்கு ஆலோசனை வழங்கினார்” எனவும் அவர் தெரிவித்தார்.