தென் ஆபிரிக்கா ஆதிக்கம்

236
SA v NZ

தென் ஆபிரிக்கா – நியூசிலாந்து கிரிக்கட் அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசத் தீர்மானம் செய்தது. இதன்படி முதலில் ஆடிய செய்த தென் ஆபிரிக்கா அணி டு பிளிசிஸ் (112), ஸ்டீபன் குக் (56), குயிண்டான் டி காக் (82), அம்லா (58), டுமினி (88) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இனிங்ஸில் 8 விக்கட்டுகள் இழப்பிற்கு 481 ஓட்டங்களைக் குவித்து ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.

பின்னர் முதல் இனிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணி 2-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கட்டுகள் இழப்பிற்கு 38 ஓட்டங்களைப் பெற்று இருந்தது.  ஆட்ட நேர முடிவின் போது ஆடுகளத்தில் கென் வில்லியம்சன் 15 ஓட்டங்களோடும் நிகோலஸ் 4 ஓட்டங்களோடும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

பின் நேற்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் காலையில் சிறப்பாக ஆட்டத்தை தொடங்கினார்கள்.

ஆனால் நியூசிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கை 86 ஓட்டங்கள் ஆக இருக்கும்போது நிக்கோல்ஸ் 36 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேற, வில்லியம்சன் மட்டும் சிறப்பாக விளையாடி அரைச்சதத்தை கடந்தார்.

அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த நினைத்த வில்லியம்சன் 77 ஓட்டங்களை எடுத்து கடைசி விக்கட்டாக ஆட்டம் இழந்தார்.

இதனால் நியூசிலாந்து அணி 58.3 ஓவர்களில் 214 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது.

தென் ஆபிரிக்கா அணி சார்பில் ஸ்டெயின், ரபாடா தலா 3 விக்கட்டுகளும், பிலாண்டர் 2 விக்கட்டுகளும் வீழ்த்தினார்கள்.

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 214 ஓட்டங்களுக்கு சுருண்டதால், தென் ஆபிரிக்கா அணி 267 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.

இந்த ஓட்டங்களுடன் தென்  ஆபிரிக்கா அணி 2-வது இனிங்ஸைத் தொடங்கியது. அதன் படி தமது 2ஆவது இனிங்ஸில் ஆடி வரும் தென் ஆபிரிக்க அணி 3ஆவது நாள் ஆட்ட  நேர முடிவில் 6 விக்கட்டுகளை இழந்து 105 ஓட்டங்களைப் பெற்று தடுமாறி வருகிறது.

ஆனாலும் தென் ஆபிரிக்கா அணி 4 விக்கட்டுகள் கையிருப்பில் இருக்க 372 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது. தென் ஆபிரிக்கா அணியின் 2ஆவது இனிங்ஸில் குயின்டன் டி கோக் 50 ஓட்டங்களைப் பெற மற்ற யாவரும் 10க்கும் குறைந்த ஓட்டங்களையே பெற்றனர்.

3ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் பவுமா 25 ஓட்டங்களோடும் பிளண்டர் 3 ஓட்டங்களோடும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

நியூசிலாந்து அணியின் பந்து வீச்சில் டிம் சவ்தி மற்றும் ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் தலா 2 விக்கட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

போட்டியின் சுருக்கம்

தென் ஆபிரிக்கா – 481/8d

டுப்ளசிஸ் 112*, ஜெ. பி டுமினி 88, ஸ்டிபன் குக் 56, குயின்டன் டி கொக் 82, ஹசீம் அம்லா 58

நீல் வாக்னர் 86/5, டொக் ப்ரெஸ்வெல் 98/1

நியூசிலாந்து – 214/10

கென் வில்லியம்சன் 77, நிகோலஸ் 36, நீல் வாக்னர் 31

காகிஸோ ரபடா 62/3, டேல் ஸ்டெய்ன் 66/3, பிளண்டர் 43/2

தென் ஆபிரிக்கா – 105/6

குயின்டன் டி கொக் 50, பவுமா 25*,

டிம் சவ்தி 25/2, ட்ரெண்ட் போல்ட் 38/2

தென் ஆபிரிக்கா அணி 372 ஓட்டங்கள் முன்னிலையில்