ஆசிய விளையாட்டு விழாவில் தங்கம் வென்று சாதனை படைத்தார் ருமேஷ் தரங்க

Asian Games 2026

38
Asian Games 2026

ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 20ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் நேற்று (28) நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் நட்சத்திர வீரர் ருமேஷ் தரங்க பத்திரகே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை வென்ற முதல் தங்கப் பதக்கமும் இதுவாகும்.

நகோயா நகர மிசுஹோ பார்க் விளையாட்டரங்கில் மழைக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியின் மூன்றாவது முயற்சியில் 88.33 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து முதலிடத்தைப் பிடித்த பத்திரகே, இறுதிவரை தனது முன்னிலையைத் தக்கவைத்து தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார்.

தொடர்ந்து தனது கடைசி முயற்சியில் 88.55 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து, முதலிடத்தைப் பிடித்து இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்த வீரராக மாறினார்.

75 ஆண்டுகால ஆசிய விளையாட்டு விழா வரலாற்றில், தடகள போட்டி நிகழ்ச்சியில் இலங்கை வென்றெடுத்த 12ஆவது தங்கப் பதக்கத்தை ருமேஷ் தரங்க கைப்பற்றியுள்ளார்.

அதேபோல, இது ஆசிய விளையாட்டுப் விழாவில் எந்தவொரு விளையாட்டு நிகழ்ச்சியிலும் இலங்கை வென்ற 13ஆவது தங்கப் பதக்கமாகும். அத்துடன், மைதான நிகழ்ச்சிகளில் இலங்கை கைப்பற்றிய 2ஆவது தங்கப் பதக்கமும் இதுவாகும்.

இதற்கு முன்னர் மைதான நிகழ்ச்சிகளில் இலங்கைக்கான முதலாவது தங்கப் பதக்கத்தை 68 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1958-ஆம் ஆண்டில் உயரம் பாய்தலில் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் வென்றிருந்தார். அதுவே ஆசிய விளையாட்டுப் விழா வரலாற்றில் இலங்கை வென்ற முதலாவது தங்கப் பதக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், தடகள எறிதல் போட்டி நிகழ்ச்சிகளில் இலங்கை வென்ற முதலாவது தங்கப் பதக்கம் இதுவென்பதுடன், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் ஆசிய விளையாட்டுப் விழாவில் இலங்கை வென்றெடுத்த முதலாவது பதக்கமாகவும் ருமேஷ் தரங்கவின் இந்த வரலாற்றுச் சாதனை அமைந்துள்ளது.

23 வயதான ருமேஷ் தரங்க, உலக தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த வீரராகவும், நடப்பு பருவத்தின் முன்னணி ஈட்டி எறிதல் வீரராகவும் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ரோம் டைமண்ட் லீக் போட்டியில் 92.62 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து புதிய இலங்கை சாதனை படைத்ததுடன், 90 மீற்றர் எல்லையைக் கடந்த முதலாவது இலங்கை வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் நிலைநாட்டினார்.

தொடர்ந்து ஜூலை மாதம் கிளாஸ்கோவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் இந்தியாவின் நீரஜ் சோப்ராவை வீழ்த்தி தங்கப் பதக்கத்தைக் சுவீகரித்தார். மேலும், இம்மாதம் புடாபெஸ்ட்டில் நடைபெற்ற முதலாவது ‘வேர்ல்ட் அத்லெடிக்ஸ் அல்டிமேட் சம்பியன்ஷிப்’ தொடரில் சம்பியன் பட்டம் வென்றதுடன், டைமண்ட் லீக் தடகளத்தில் சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய முதலாவது இலங்கை வீரர் என்ற பெருமையையும் பெற்றார். நடப்பு பருவத்தில் 92 மீற்றருக்கும் அதிகமான தூரத்தை இரண்டு முறை எட்டிய ஒரே ஈட்டி எறிதல் வீரர் இவராவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தகைய மகத்தான சாதனைகளுடன் இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் களமிறங்கியதால், ஆசிய விளையாட்டுப் போட்டி சாதனையான 89.15 மீற்றரை அவர் முறியடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ருமேஷ் தரங்க அந்த இலக்கை நெருங்கிய போதிலும், மழை காரணமாக மைதானத்தில் நிலவிய ஈரப்பதமான காலநிலை அனைத்து எறிதல் வீரர்களுக்கும் கடும் சவாலாக அமைந்தது.

இதனிடையே, இப்போட்டியில் இந்திய வீரர்களான யஷ்வீர் சிங் 84.72 மீற்றர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும், ரோஹித் யாதவ் 84.35 மீற்றர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இலங்கையின் மற்றொரு வீரரான சுமேத ரணசிங்க 78.08 மீற்றர் தூரம் எறிந்து ஆறாவது இடத்தைப் பெற்றார்.

முன்னதாக, இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<