மேற்கிந்திய தீவுகள் அணியில் இணையும் ஜேசன் ஹோல்டர்

ICC T20 World Cup – 2021

109
AFP

T20 உலகக் கிண்ணத் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் அனுபவ சகலதுறை வீரரான ஜேசன் ஹோல்டர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக கடந்த 23ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் விளையாடிய வேகப் பந்துவீச்சாளர் ஒபெட் மெக்கோய், காயம் காரணமாக T20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இதையடுத்து அவருக்கு மாற்று வீரராக ஜேசன் ஹோல்டர், 15 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் குழாமில் இணைந்துள்ளார்.

இதற்கான அனுமதியை கிறிஸ் டெட்லி, கிளைவ் ஹிட்ச்காக், ராகுல் டிராவிட், தீரஜ் மல்ஹோத்ரா, சைமன் டவுல் மற்றும் இயென் பிஷப் ஆகியோரைக் கொண்ட ஐசிசியின் தொழில்நுட்பக் குழு வழங்கியுள்ளது.

>>T20 உலகக் கிண்ணத்திலிருந்து விலகும் பேபியன் அலென்

29 வயதான ஜேசன் ஹோல்டர், மேற்கிந்திய திவுகள் அணிக்காக இதுவரை 27 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

நடப்பு T20 உலகக் கிண்ண சம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணி, இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 55 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதன்பிறகு நடைபெற்ற 2ஆவது போட்டியில் தென்னாபிரிக்காவிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்த நிலையில் நாளை (29) சார்ஜாவில் நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியை மேற்கிந்திய தீவுகள் அணி எதிர்கொள்கிறது.

எனவே, மேற்கிந்திய தீவுகள் அணி அரை இறுதிக்கு முன்னேற வேண்டுமாயின் எஞ்சிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும்.

இதனிடையே, இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் உபாதையால் வெளியேறும் இரண்டாவது மேற்கிந்திய தீவுகள் அணி வீராக ஒபெட் மெக்கோய் இடம்பிடித்தார்.

>>லொக்கி பேர்கஸனை இழந்த நியூசிலாந்து! ; புதிய வீரர் இணைப்பு

இதற்குமுன் அந்த அணியின் நட்சத்திர சகலதுறை வீரரான பேபியன் அலென் காயத்தினால் வெளியேறியதுடன், அவருக்கு மாற்று வீரராக அகீல் ஹொசைன் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

இதுஇவ்வாறிருக்க, இம்முறை T20 உலகக் கிண்ணத்திலிருந்து காயம் மற்றும் உபாதை காரணமாக நான்கு வீரர்கள் வெளியேறியுள்ளனர்.

மேற்கிந்திய தீவுகளின் பேபியன் அலென் மற்றும் ஒபெட் மெக்கோய் தவிர, நியூசிலாந்தின் லொக்கி பேர்கஸன் மற்றும் பங்களாதேஷின் மொஹமட் சைபுதீன் ஆகிய வீரர்கள் T20 உலகக் கிண்ணத்திலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<