9ஆவது ஐ.பி.எல் கிரிக்கட் போட்டித் தொடரின் 25ஆவது போட்டி நேற்று பூனேயில் அமைந்துள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் சுரேஷ் ரயினா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணி மஹேந்திர சிங் டோனி தலைமையிலான றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணியை எதிர் கொண்டது. இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் லயன்ஸ் அணியின் தலைவர் சுரேஷ் ரயினா முதலில் களத்தடுப்பை தீர்மானித்தார்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணி  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கட்டுகளை இழந்து 195 ஓட்டங்களைப் பெற்றது. சுப்பர்ஜையன்ட்ஸ் அணி சார்பாக ஸ்டீவ் ஸ்மித் மிக அற்புதமாக விளையாடி 54 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கலாக 104 ஓட்டங்களையும், அஜின்கியா ரஹானே 45 பந்துகளில் 53 ஓட்டங்களையும், மஹேந்திர சிங் டோனி ஆட்டம் இழக்காமல் 18 பந்துகளில் 30 ஓட்டங்களையும் பெற்றனர். குஜராத் லயன்ஸ் அணியின் சார்பாகப் பந்து வீச்சில் டுவயின் பிராவோ ஒரு விக்கட்டை வீழ்த்தினார்.

பதிலுக்கு 196 என்ற இமாலய வெற்றி இலக்கோடு துடுப்பெடுத்தாடிய குஜராத் லயன்ஸ் அணி குறிப்பிடப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கட்டுகளை 196 ஓட்டங்களைப் பெற்று றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணியை 3 விக்கட்டுகளால் தோல்வி அடையச் செய்தது.

குஜராத் லயன்ஸ் அணி சார்பாக டுவயின் ஸ்மித் 37 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடங்கலாக  63 ஓட்டங்களையும், ப்ரெண்டன் மெக்கலம் 22 பந்துகளில் 43 ஓட்டங்களையும், சுரேஷ் ரயினா 28 பந்துகளில் 34 ஓட்டங்களையும், தினேஷ் கார்த்திக் 20 பந்துகளில் 33 ஓட்டங்களையும் பெற்றனர். பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணியின் சார்பாகப் பந்து வீச்சில் அஷோக் டிண்டா மற்றும் திசர பெரேரா ஆகியோர்  தலா 2 விக்கட்டுகளை கைபற்ற, ரஜட் பாதியா 1 விக்கட்டைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக குஜராத் லயன்ஸ்  அணியின் டுவயின் ஸ்மித் தெரிவுசெய்யப்பட்டார்.

மேலும் கிரிக்கட் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்