T20 உலகக் கிண்ணத்தை எந்த அணி வெற்றிக்கொள்ளும்?: கூறும் அத்தபத்து!

ICC Men’s T20 World Cup 2021

124

ஐசிசி T20 உலகக் கிண்ணத்தை வெற்றிக்கொள்வதற்கான அதிக வாய்ப்பு பாகிஸ்தான் அணிக்கு இருப்பதாக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மார்வன் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியை ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) வைத்து வெற்றிக்கொள்வது கடினமான விடயம். UAE ஆடுகளங்கள், பாகிஸ்தானை ஒத்தவையாகும். அவர்கள் பந்துவீசும் இடங்கள் மற்றும் துடுப்பெடுத்தாடும் முறைகள் என்பவையை, உறக்கத்திலும் அவர்களால் செய்ய முடியும். எனவே, மிகவும் பழக்கமான ஆடுகளங்களில் அவர்கள் விளையாடுகின்றனர். என உலகக் கிண்ண செய்திகளை சேகரிக்கும் இலங்கை ஊடகவியலாளர்களிடம் மார்வன் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

>>ஆறுதல் வெற்றியுடன் T20 உலகக் கிண்ணத்தினை நிறைவு செய்த இந்தியா

சுபர் 12 சுற்றில் தோல்விகளை அடையாத அணியாக, பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. பாகிஸ்தான் இறுதியாக 2009ஆம் ஆண்டு இங்கிலாந்தில் வைத்து இலங்கை அணியை வீழ்த்தி T20 உலகக் கிண்ணத்தை வெற்றிக்கொண்டிருந்தது.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணி இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், அவுஸ்திரேலிய அணியை அபு தாபியில் எதிர்கொள்ளவுள்ளதுடன், முதல் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.

நான் பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் ரவுப் டேப் பந்து கிரிக்கெட் ஆடுவதை யூடியூப் வீடியோ ஒன்றில் பார்த்தேன். UAE ஆடுகளங்களில் அவர்களுக்கு பந்துவீசுவது மற்றும் துடுப்பெடுத்தாடுவது புதிய விடயமல்ல. எனவே, பாகிஸ்தானை வீழ்த்துவதற்கு, இந்த ஆடுகள தன்மைகளில் ஒரு சிறந்த அணிக்கு மிகச்சிறந்த நாள் அமையவேண்டும் என்பது என்னுடைய கருத்து.

இந்தியா போன்ற அணி இவ்வளவு விரைவாக வெளியேறும் என நான் நினைக்கவில்லை. அத்துடன், இலங்கை அணி விளையாடிய விதம் ஆச்சரியத்தை கொடுத்தது. எனவே, போட்டிகளில் ஆச்சரியங்கள் காத்திருக்கலாம். இங்கிலாந்து அணியும் மிகச்சிறந்த அணி. ஆனால், இலங்கை அணியானது, சிலவேளை இங்கிலாந்தை வீழ்த்தியிருக்கும். இங்கிலாந்து அணியும், இந்த தொடரில் இலங்கை அணி மாத்திரம் கடுமையான போட்டி கொடுத்ததாக கூறியிருந்தது. எனவே, அரையிறுதிக்கான நான்கு அணிகளில் என்னை ஒரு அணியை தெரிவுசெய்யுமாறு கூறினால், பாகிஸ்தானை தெரிவுசெய்வேன்என்றார்.

பாகிஸ்தான் தங்களுடைய சுபர் 12 சுற்றில் இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்கொட்லாந்து மற்றும் நமீபியா போன்ற அணிகளை வீழ்த்தி, அரையிறுதிக்கு தகுதிபெற்றிருந்தது. குறித்த ஐந்து போட்டிகளிலும் வெவ்வேறு ஐந்து வீரர்கள் ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்தனர். எனவே, அணியாக மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்தி வருவதுடன், UAEயில் விளையாடிய 16 போட்டிகளில் ஒரு போட்டியிலும் தோல்வியடையவில்லை. எனவே, பாகிஸ்தான் அணி அதிகமான கவனத்தை ஈர்த்துள்ளது.

அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள அணிகளில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் 2009 மற்றும் 2010ம் ஆண்டுகளில் T20 உலகக் கிண்ணங்களை வென்றிருந்ததுடன், அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இதுவரை கிண்ணத்தை வெற்றிக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<