திரித்துவக் கல்லூரியை வென்று கிண்ணத்தை கைப்பற்றிய ரோயல் கல்லூரி

134
Winners under 19 Royal Hockey
Winners under 19 Royal Hockey

திரித்துவக் கல்லூரி மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரிகளுக்கிடையிலான  12ஆவது வருடாந்த ஹொக்கி போட்டியில் ரோயல் கல்லூரி அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று ஜெ.சி..குரே கிண்ணத்தை மீண்டும் ஒரு முறை கைப்பற்றியது.

18 வயதிற்குட்பட்ட  இலங்கை தேசிய விளையாட்டு சம்பியன்ஷிப் பட்டம் பெற்ற ரோயல் கல்லூரி போட்டியின் ஆரம்பம் முதல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. மறுமுனையில் வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த திரித்துவக் கல்லூரி பந்தை அடித்து ஆடி வந்தது.

முதல் பாதியின் முதல் சில நிமிடங்களில் ரோயல் அணியே அதிக நேரம் பந்தை தமது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது. என்றாலும், ரோயல் கல்லூரி அணியால் கோல் எதையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. திரித்துவக் கல்லூரியின் உப தலைவர் தராதரன் பின் வரிசையில் சிறப்பாக விளையாடி, ரோயல் அணி கோல் எதுவும் அடிக்காதவாறு பாதுகாத்தார்.

Schools Hockeyரோயல் அணியின் முன் வரிசை வீரர்களாகிய புர்கான் இர்பான் மற்றும் டிலான் காவிந்த டி சில்வாவிற்கு கோல் அடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தாலும் திரித்துவக் கல்லூரி கோல் காப்பாளர் அவினாஷ் பெர்னாண்டோவினால் அவை முறியடிக்கப்பட்டன. ரோயல் அணிக்கு முதல் பெனால்டி கோர்னர் வாய்ப்பு கிடைத்தும் அதில் அவர்கள் பயனை பெற்றுக்கொள்ளவில்லை.

முதல் பாதியின் இறுதி நேரத்தில் ரோயல் அணிக்கு கோல் அடிக்க கிடைத்த இலகு வாய்ப்பினை திரித்துவக் கல்லூரி தவறான முறையில் தடுத்ததால், ரோயல் அணிக்கு பெனால்டி வாய்பொன்று வழங்கப்பட்டது. கிடைத்த வாய்ப்பில் காவிந்த டி சில்வா கோல் அடித்து ரோயல் அணியை முன்னிலை அடையச் செய்தார்.

பாதி நேரம் : ரோயல் கல்லூரி 1- 0 திரித்துவக் கல்லூரி

இரண்டாம் பாதியில் திரித்துவக் கல்லூரி அணிக்கு கோல் பெறுவதற்கு பல இலகுவான வாய்ப்புகள் கிடைத்த பொழுதும் அவ்வணியால் அவை அனைத்தும் தவறவிடப்பட்டன. 43ஆவது நிமிடத்தில் ரோயல் அணியின் புர்கான் இர்பான் கோல் அடிக்க எடுத்த முயற்சி கோல்காப்பாளரால் தடுக்கப்பட்ட பொழுதும் திருப்பி அனுப்பப்பட்ட பந்தை சிறப்பாக பயன்படுத்தி காவிந்த டி சில்வா கோல் அடித்து 2-0 என ரோயல் அணியை முன்னிலை அடையச் செய்தார்.

போட்டியின் இறுதி நேரத்தில் திரித்துவக் கல்லூரியின் தலைவர் கசுன் எதிரிசிங்க 80 மீட்டர் தூரம் பந்தை கொண்டுவந்து கோல் அடிக்க முயன்ற பொழுதும் அந்தப் பந்து கோல் கம்பத்தில் மோதி வெளியேறியது. எனவே இரண்டாவது பாதியில் காவிந்தவின் கோலுக்கு மேலதிகமாக எந்த கோல்களும் பெறப்படவில்லை.

முழு நேரம் :  ரோயல் கல்லூரி 2 – 0 திரித்துவக் கல்லூரி

அதேவேளை, 15 வயத்திற்குட்பட்ட போட்டியில் திரித்துவக் கல்லூரி 1-0 என வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்தது. இப்போட்டியில் திரித்துவக் கல்லூரியின் தனுஷன் கோல் அடித்து தனது அணியை வெற்றிப்பெறச் செய்தார்.

மேலும் பல விளையாட்டு செய்திகளுக்கு