உலகக் கிண்ண வெற்றியுடன் தனது முடிவை மாற்றிய மெஸ்ஸி

FIFA World Cup 2022

212

பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடருடன் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த லியோனல் மெஸ்ஸி, ஆர்ஜன்டீனா அணிக்காகத் தொடர்ந்து விளையாடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் விளையாடின. இதில் பிரான்ஸை பெனால்டி ஷூட்-அவுட்டில் வீழ்த்திய மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜன்டீனா அணி 36 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கிண்ணத்தை வென்றது.

அதேபோல, லியோனல் மெஸ்ஸி ஆர்ஜன்டீனாவுக்காக பல சம்பியன் பட்டங்களை வென்று கொடுத்திருந்தாலும், உலகக் கிண்ணத்தை வெல்வது இதுவே முதல்முறையாகும். அதுமாத்திரமின்றி, தனது 5ஆவது உலகக் கிண்ணத்தில் ஆடிய மெஸ்ஸி, இம்முறை போட்டித் தொடரின் மிகச் சிறந்த வீரருக்கான தங்கப்பந்து விருதையும் வென்றார்.

இந்த நிலையில், உலகக் கிண்ண இறுதிப் போட்டியே தனது கடைசி சர்வதேச கால்பந்து போட்டி என இப்போட்டிக்கு முன்னர் மெஸ்ஸி அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார்.

நடப்புச் சம்பியனை வீழ்த்தி மெஸ்ஸியின் ஆர்ஜன்டீனாவுக்கு உலகக் கிண்ணம்

எவ்வாறாயினும், பிரான்ஸ் அணியுடனான இறுதிப் போட்டிக்குப் பின்னர் பேசிய மெஸ்ஸி,

”இதை நம்பவே முடியவில்லை. ஆனாலும் எனக்குத் தெரியும் இறைவன் இந்த சம்பியன் கிண்ணத்தை எனக்கு அளிப்பார் என்று. இதில் நான் உறுதியாக இருந்தேன். இந்த நாள் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் நாள். இந்த கனவை நான் நீண்ட நாள் கொண்டிருந்தேன். நான் எனது தொழில்சார் கால்பந்து வாழ்க்கையை கத்தார் உலகக் கிண்ணத்துடன் நிறைவு செய்யவே ஆசைப்பட்டேன். ஆனால் இப்போது அதை முடித்துக் கொள்ளப் போவதில்லை என்று முடிவு செய்கிறேன்.

இதற்குப் பின் வேறு என்ன இருக்கிறது? கோபா அமெரிக்கா, உலகக் கிண்ணத்தை என்னால் வெல்ல முடிந்துள்ளது. ஏறத்தாழ கடைசியில் தான் அது எனக்கு கிடைத்துள்ளது. தேசிய அணியில் இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். உலக சம்பியனாக இன்னும் சில போட்டிகளில் விளையாட விரும்புகிறேன்” என்றார்.

‘ஒவ்வொரு சிறு பிள்ளையினதும் கனவாக இது (உலகக் கிண்ணம்) உள்ளது.  நான் தவறவிட்ட அனைத்தையும் இங்கு அடைவதற்கு எனது அதிஷ்டம் கிடைத்துள்ளது’ என்று மெஸ்ஸி கூறியுள்ளார்.

எனவே, மெஸ்ஸி தொடர்ந்து ஆர்ஜன்டீனா அணிக்காக விளையாட உள்ளதாக அறிவித்துள்ளது அவரது ரசிகர்களையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<