60 போட்டிகளைக் கொண்ட 9ஆவது ஐ.பி.எல் கிரிக்கட் போட்டித் தொடரின் 52ஆவது போட்டி நேற்று ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சஹீர் கான் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணி டேவிட் வோர்னர் தலைமையிலான சன் ரயிசஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாடியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தலைவர் சஹீர் கான் முதலில் சன் ரயிசஸ் ஹைதராபாத் அணியைத் துடுப்பெடுத்தாட அழைப்புவிடுத்தார்.

ஐ.பி.எல் தொடரில் இன்னுமொரு உபாதை

இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 158 ஓட்டங்களைப் பெற்றது. ஹைதராபாத் அணியின் சார்பில் டேவிட் வார்னர் அதிகபட்சமாக 56 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 73 ஓட்டங்களைப் பெற்றார். மற்ற வீரர்கள் 20ற்கும் குறைவான ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார்கள். டெல்லி அணியின் பந்துவீச்சில் கார்லஸ் பரத்வயிட் 2 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு 159 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. டெல்லி இனிங்ஸின் 2ஆவது ஓவரில் டி கொக் 2 ஓட்டங்களோடு ஆட்டம் இழந்தார். அதன் பின் ஜோடி சேர்ந்த பந்த் மற்றும் கருண் நைர் இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ஓட்டங்களை உயர்த்தினார்கள். பந்த் 26 பந்துகளில் 32 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார். பின்னர் நைர் அபாரமாக விளையாடினாலும் போட்டியின் வெற்றி இரு அணிகளுக்கும் சார்பாகவே இருந்தது. கடைசியில் இறுதி ஓவரில் டெல்லி அணிக்கு 11 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரின் கடைசி இரு பந்துகளை பவுண்டரிக் கோட்டை கடக்க விட்ட நைர் டெல்லி அணியை இறுதிப் பந்தில் வெற்றி பெறச் செய்தார். இதன் படி டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 161 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கட்டுகளால் இப்போட்டியில் வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில் பரிண்டர் ஸ்ரன் 2 விக்கட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக இறுதி வரை ஆட்டமிழக்காமல் 59 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை விளாசி 83 ஓட்டங்களைக் குவித்த கருண் நைர் தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்