சிறையிலும் கால்பந்து தொடரை வென்ற ரொனால்டினோ

86
Ronaldinho

பரகுவே சிறையில் இருக்கும் பிரேசில் முன்னாள் கால்பந்து நட்சத்திரம் ரொனால்டினோ கைதிகளுக்கு இடையிலான கால்பந்து தொடர் ஒன்றில் விளையாடி தனது அணி கிண்ணத்தை வெல்ல உதவியுள்ளார். 

2002 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற பிரேசில் அணியில் இடம்பிடித்த 39 வயதுடைய ரொனால்டினோ மோசடி ஆவணங்களை வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக தற்போது பரகுவே தலைநகருக்கு வெளியில் இருக்கும் உயர் பாதுகாப்பு அளிக்கப்பட்ட சிறை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.   

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (13) சிறைக்குள் நடைபெற்ற புட்சால் (futsal) கால்பந்து தொடரில் சக கைதிகளுடன் ரொனால்டினோ பங்கேற்றார். அதில் அவர் ஐந்து கோல்களை பெற்று தனது அணி 11-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இறுதிப் போட்டியில் வெற்றிபெற உதவினார்.

ரொனால்டினோ பார்சிலோனா அணிக்காக 70 கோல்கள் மற்றும் 50 கோல் உதவிகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   

முன்னதாக பார்சிலோனா முன்னாள் நட்சத்திரம் ரொனால்டினோவை தமது அணிக்குள் சேர்ப்பதற்கு பல கைதிகள் கால்பந்து அணிகளும் போட்டியிட்டதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

ரொனால்டினோ தனது வழக்கமான புன்னகையோடு சக அணியினருடன் இணைந்து வெற்றிக் கிண்ணத்துடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த வெற்றிக் கிண்ணத்துடன் வெற்றி பெற்ற அணிக்கு 16 கிலோகிராம் பன்றி ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அதனை வெற்றிபெற்ற அணியினர் சமைத்து சாப்பிட்டுள்ளனர். 

ரொனால்டினோ தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறை அரசியல்வாதிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் திட்டமிட்ட குற்ற கும்பல்களைச் சேர்ந்த கைதிகள் என முக்கிய புள்ளிகள் இருக்கும் சிறையாகும். 

போலியான பரகுவே கடவுச்சீட்டை வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே ரொனால்டினோ அவரது சகோதரர் அசிஸ் உடன் கடந்த மார்ச் 4 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். இவர்கள் கடந்த மார்ச் 6 ஆம் திகதி தொடக்கம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பரகுவே மேன்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்க மறுத்த நிலையில் சிறைக்குள் ஒரு மகிழ்ச்சியான செய்தியாக அவருக்கு இது உள்ளது. 

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க