சிக்ஸர் அடித்து பேரூந்தின் கண்ணாடியை உடைத்த ரோஹித் சர்மா

220
Rohit Sharma
Image Courtesy - mumbai indians twitter

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் சர்மா பயிற்சியின் போது அடித்த சிக்ஸர் பாதையில் சென்ற பேரூந்தைத் தாக்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. 

ஐ.பி.எல் தொடரில் நான்கு தடவைகள் சம்பியன் பட்டம் வென்ற நடப்புச் சம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, அபுதாபியில் பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. இதில் நேற்று (9) நடைபெற்ற பயிற்சிகளில் ரோஹித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.

>> மற்றொரு இக்கட்டான சூழ்நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ்

மின்னொளியில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் ரோஹித் சர்மா துடுப்பெடுத்தாட, சுழல்பந்துவீச்சாளர் ஒருவர் பந்துவீசியிருந்தார். அப்போது ரோஹித் சர்மா அடித்த பந்தானது நேராக வெளியே சென்று சாலையில் பயணித்த பேரூந்து ஒன்றின் மேல் பகுதியில் பட்டது.

இதற்கான வீடியோவை மும்பை அணி நிர்வாகம் டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளதுடன், ரோஹித் சர்மா அடித்த சிக்ஸர் சுமார் 95 மீற்றர் தூரம் சென்றதாக அதில் பதிவாகியுள்ளது.

இதனிடையே, குறித்த வீடியோவுடன் மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ள பதிவில், துடுப்பாட்ட வீரர்கள் சிக்ஸர்கள் அடிப்பார்கள், லெஜண்ட்கள் மைதானத்துக்கு வெளியே அடிப்பார்கள். 

ஆனால், ஹிட்மேன் அடித்த சிக்ஸ் மைதானத்தையும் தாண்டி ஓடும் பேரூந்தைத் தாக்கியது என்ற வாசகத்துடன் அந்த சிக்ஸரின் வீடியோவைப் பகிர்ந்துள்ளது. 

முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவரான எம்.எஸ் டோனி உள்ளிட்ட வீரர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற பயிற்சியில் கலந்துகொண்ட வீடியோவை அந்த அணி நிர்வாகம் வெளியிட்டிருந்தது. 

>> இலங்கை டெஸ்ட்டுக்காக ஐ.பி.எல். தொடரை நிராகரித்தார் தர்மசேன

இதில் டோனி, ஷேன் வொட்சன், ஜடேஜா, பியுஷ், சவ்லா, கரன் சர்மா, ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதில் ஒரு இடத்தில் டோனி சக துடுப்பாட்ட வீரர் ஒருவர் குறித்து கருத்து தெரிவிக்கின்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அதில் ‘DRS இல்லை.. அதனால் கவலைப்பட வேண்டாம்’ என டோனி கிண்டல் செய்துள்ளார்.

இந்த வீடியோவில் டோனி எப்போதும் போல மகிழ்ச்சியாக இருப்பதை சுட்டிக் காட்டி பல இரசிகர்களும் இதை பகிர்ந்து வருகின்றனர். 

இதேவேளை, 19ஆம் திகதி நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<