தென்னாபிரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை?

1124

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளரும், ஐசிசி கிரிக்கெட் குழு உறுப்பினருமான மிக்கி ஆர்தர், கடினமான ஆண்டினை தொடர்ந்து, அடுத்த சில மாதங்களில் அதிகமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

கொவிட்-19 தொற்று காரணமாக நாடு முழுதும் ஸ்தம்பிதமாகியிருந்த நிலையில், கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து இங்கிலாந்து, இந்தியா, தென்னாபிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டன.

பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைப்பு

இந்தநிலையில், எதிர்வரும் சில மாதங்களில், முக்கியமான இரண்டு சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் விளையாட இலங்கை அணிக்கு வாய்ப்புள்ளதாக மிக்கி ஆர்தர் குறிப்பிட்டார். அந்தவகையில், அடுத்த டிசம்பர் மாதத்தில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரிலும், அதனைத் தொடர்ந்து ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் ஜனவரி மாத பிற்பகுதியிலும் நடைபெறும் எனவும் இவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“நாம் மீண்டும் கிரிக்கெட்டை ஆரம்பிக்க வேண்டும். இல்லையென்றால், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை அனைத்தையும் விட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டிய நிலை ஏற்படும். எனினும், அடுத்த டிசம்பர் மாதம் தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள எமது தொடரில் பங்கேற்க முடியும் எனவும், அதன் பின்னர் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஜனவரி மாதத்தில் விளையாட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது”

அதேநேரம், இறுதியாக இலங்கையில் நடைபெறவிருந்த பங்களாதேஷ் தொடர் ஒத்திவைக்கப்பட்டமை ஏமாற்றம் அளிப்பதாக மிக்கி ஆர்தர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அணி இந்த தொடருக்காக ஒரு மாத காலமாக பயிற்சிகளில் ஈடுபட்ட போதும், இலங்கை அரசாங்கம் தனிமைப்படுத்தலுக்காக விதிக்கப்பட்ட விதிமுறைகள் காரணமக தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

Video – சங்கக்கார சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரராக மாற காரணம் என்ன?

“நாம் தொடரை நடத்த வேண்டும். இல்லையென்றால் கிரிக்கெட் சபைகள் அதிகமான அழுத்தங்களை கொடுக்கும். இங்கிலாந்து கிரிக்கெட் சபை மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைகள் பலரை அவர்களுடைய பணிகளிலிருந்து நீக்கியுள்ளது. நான் கொவிட்-19 சூழ்நிலையை உணருகிறேன். ஆனால், பலர் தங்களுடைய வாழ்வாதாரங்களை இழந்து வருகின்றனர். அதனால், கிரிக்கெட் போட்டிகளை நடத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம் என்றார்.

இலங்கை அணி இந்த வருடத்தில் இறுதியாக இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கடந்த பெப்ரவரி மாதத்தில் விளையாடவிருந்தது. எனினும், கொவிட்-19 வைரஸ் காரணமாக குறித்த தொடர் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், பங்களாதேஷ் தொடருக்கான ஏற்பாடுகள் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட போதும், கொவிட்-19 தனிமைப்படுத்தல் விவகாரத்தின் காரணமாக தொடர் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<