விதுதய – ரிட்ஸ்பரி நீச்சல் சம்பியன்ஷிப்புடன் கைகோர்க்கும் Ritzbury

21

இலங்கையின் புகழ்பெற்ற சொக்லட் வர்த்தக நாமமும், சிலோன் பிஸ்கட் லிமிடெட் நிறுவனத்தின் முன்னணி சொக்லட் உற்பத்தியுமான Ritzbury,  விதுதய – ரிட்ஸ்பரி நீச்சல் சம்பியன்ஷிப் 2023 தொடருக்கு தொடர்ச்சியாக 3ஆவது ஆண்டாகவும் அனுசரணை வழங்க முன்வந்துள்ளது.

இதுதொடர்பில் ஊகடங்களை தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு செவ்வாய்க்கிழமை (16) ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் செனட் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சிக் கல்வித் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போட்டித் தொடரானது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நீச்சல் தொகுதியில் இம்மாதம் 26ஆம், 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இம்முறை போட்டித் தொடரில் நாடளாவிய ரீதியில் இருந்து 300 இற்கும் அதிகமான பாடசாலைகள் மற்றும் நீச்சல் கழகங்களிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ளனர். இம்முறை போட்டித் தொடரில் 12, 14, 16 மற்றும் 18 வயதுக்குட்பட்ட வீரர்கள் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதுமாத்திரமின்றி, ஒவ்வொரு வயதுப்பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கின்ற வீரர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது. அத்துடன், போட்டிகளில் பங்குபற்றுகின்ற அனைவருக்கும் பங்குபற்றதலுக்கான சான்றிதழ் வழங்குவதற்கும் போட்டி ஏற்பாட்டுக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நிலையில், நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் CBL International Foods சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் நிலுபுல் டி சில்வா கருத்து தெரிவிக்கையில்,

”இலங்கையின் இளைஞர்கள் மத்தியில் விளையாட்டின் பெறுமதிகளை ஊக்குவிப்பதில் ரிட்ஸ்பரி பெருமளவு கவனம் செலுத்துகின்றது. தொடர்ச்சியாக இந்தப் பெறுமதிகளை நாம் பல்வேறு செயற்பாடுகளினூடாக கட்டியெழுப்பியுள்ளோம். இலங்கையில் சொக்லட் தயாரிப்புகளின் சந்தை முன்னோடி எனும் வகையில் 3ஆவது ஆண்டாகவும் ஸ்ரீ ஜயவர்தபுர பல்கலைக்கழகத்துடன் கைகோர்ப்பதையிட்டு பெருமை கொள்கின்றோம். இது பெரும் வெற்றியாக அமைந்திருக்கும் என நாம் நம்புகின்றோம்” என்றார்.

அங்கு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சிக் கல்வித் திணைக்களத்தின் பணிப்பாளர் நிஷாந்தி விதானகே கருத்து தெரிவிக்கையில், ”கூட்டான்மைத் துறையைச் சேர்ந்த சமூகப் பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களிடமிருந்து இதுபோன்ற அனுசரணைகளினூடாக இதுபோன்ற விளையாட்டு நிகழ்வுகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதில் ரிட்ஸ்பரி தொடர்ச்சியாக எமக்கு அனுசரணை வழங்குகின்றது. இந்த ஆண்டும் எமக்கு அனுசரணை வழங்க முன்வந்துள்ளமை பெருமளவில் வரவேற்கத்தக்க விடயமாகும். இலங்கையின் விளையாட்டுத்துறைக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ள ரிட்ஸ்பரி போன்ற உள்நாட்டுப் பங்காளருடன் பணியாற்றுவதையிட்டு நாம் பெருமிதம் கொள்கின்றோம்” என தெரிவித்தார்.

இலங்கையின் முன்னணி சொக்லட் நாமமான Ritzbury இலங்கையின் பல முன்னணி விளையாட்டு நிகழ்வுகளுக்கு அனுசரணை வழங்கி வருகின்றது. இதில் ரிட்ஸ்பரி சேர் ஜோன் டார்பர்ட் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர், ரிட்ஸ்பரி கனிஷ்ட தேசிய ஸ்காஷ் சம்பியன்ஷிப், ரிட்ஸ்பரி கனிஷ்ட தேசிய றக்பி களியாட்டம் மற்றும் SLTA அகில இலங்கை பாடசாலை சிறுவர் டென்னிஸ் விளையாட்டு தினம் உள்ளிட்டவை அடங்குகின்றன.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<