உலகின் முதல் 50 இடங்களில் இடம்பிடித்த இலங்கை நீச்சல் வீரர்

137

சர்வதேச நீச்சல் சம்மேளனத்தின் சமீபத்திய தரவரிசையின்படி, ஆண்களுக்கான பின்நோக்கிய நீச்சல் (Backstroke) போட்டியில் உலகின் முதல் 50 வீரர்களில் இலங்கை நீச்சல் வீரர் அகலங்க பீரிஸ் இடம்பிடித்துள்ளார்.

21 வயதுடைய அகலங்க பீரிஸ், 2018 ஆசிய விளையாட்டு விழா மற்றும் பொதுநலவாய விளையாட்டுப் விழாக்களில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

இதில் பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 4X100 அஞ்சலோட்டத்தில் இலங்கை சார்பில் பங்குகொண்ட, அவர் உள்ளிட்ட இலங்கை அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்குத் தெரிவாகி சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், இறுதியாக 2019ஆம் ஆண்டு நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்,

எனினும், உலகம் முழுவதும் வேகமாகப் பரவிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒரு வருடத்திற்கும் மேலாக அவரால் எந்தவொரு போட்டியிலும் பங்குபற்ற முடியாமல் போனது. இதனால் சிறிது காலம் நீச்சல் விளையாட்டிலிருந்து விலகியிருந்தார்.

உலக நீச்சல் தின கொண்டாட்டங்கள் மட்டக்களப்பில்

இதனிடையே, ஏறக்குறைய இரண்டு மாத பயிற்சிகளுக்குப் பிறகு, தற்போது அபுதாபியில் நடைபெற்று வருகின்ற FINA உலக சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 50 மீட்டர் மற்றும் 100 மீட்டர் பின்நோக்கிய நீச்சல் போட்டிகளில் அகலங்க பீரிஸ் பங்குகொண்டார். ஆனால், அவரால் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற முடியாமல் போனது.

இருப்பினும், அவர் வெளிப்படுத்திய திறமை காரணமாக 50 மீட்டர் மற்றும் 100 மீட்டர் பின்நோக்கிய நீச்சல் போட்டியில் உலக தரவரிசையில் முதல் 50 இடங்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.

அது மாத்திரமன்றி, இங்கு வெளிப்படுத்திய திறமையின் மூலம் அடுத்த வருடம் சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பையும் அவருக்குப் பெற்றுக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<