கண்டி அணிக்கான மற்றொரு சம்பியன் பட்டத்துடன் விடைபெற்ற பாசில் மரிஜா

222

நேற்று (11) மாலை இடம்பெற்று முடிந்த டயலொக் ரக்பி லீக் தொடரின் இந்தப் பருவகாலத்திற்கான இறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியனான கண்டி விளையாட்டுக் கழகத்திற்கு, ஹெவ்லோக் விளையாட்டுக் கழகம் அதிர்ச்சி தரும் வகையில் செயற்பட்டிருந்த போதிலும், பாசில் மரிஜாவின் இறுதிநேர அபாரத்தோடு கண்டி விளையாட்டுக் கழகம் 30 -28 என வெற்றி பெற்று 2017/18ஆம் பருவத்திற்கான டயலொக் ரக்பி லீக் சம்பியனாக நாமம் சூடியுள்ளது.    

தொடரின் மூன்றாம் இடத்தை பெற்ற CH&FC அணி

டயலொக் ரக்பி லீக் போட்டிகளில்… ThePapare.com இந்த போட்டியின் சிறந்த வீரர் …

கண்டியில் இடம்பெற்ற இந்த தீர்மானமிக்க ஆட்டம் இலங்கை ரக்பி அணியின் முன்னாள் தலைவர் பாசில் மாரிஜாவுக்கு அவரது சொந்த ஊரில் இடம்பெற்ற  கழக ரக்பி தொடர்களின் பிரியாவிடைப் போட்டியாகவும் அமைந்திருந்தது. பாசில் மரிஜா அசத்தலான முறையில் செயற்பட்டு கண்டி அணியினை வெற்றிப் பாதையில் எடுத்துச் சென்றிருந்த காரணத்தினால், மைதானச் சொந்தக்காரர்களான போட்டியின் பார்வையாளர்கள் அனைவரும் மாரிஜாவுக்கு மரியாதை செலுத்தியிருந்தனர்.
கண்டி அணி தங்களுடைய பெரும் புள்ளிகள் என அழைக்கப்படும் அனுருத்த வில்வார, புவனேக உடன்கமுவ மற்றும் ஜேசன் திஸாநாயக்க ஆகியோர் இல்லாத நிலையில் இப்போட்டியில் களமிறங்கியிருந்தது. இவர்களின் இழப்பு கண்டி அணியின் முன்களத்தினை பலவீனப்படுத்தியிருந்தது.

மறுமுனையில் தொடரில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளுடன் ஹெவ்லொக் அணியினர் இத்தொடரில் எந்தவொரு தோல்வியினையும் சந்தித்திருக்காத கண்டி விளையாட்டுக் கழகத்தினை எதிர்கொண்டிருந்தனர்.

போட்டியின் முதல் புள்ளிகள் மைதான சொந்தக்காரர்களான கண்டி அணிக்கு கிடைக்கப்பெற்றது. றிச்சர்ட் தர்மபாலவிடம் இருந்து  லாவகமாகப் பெற்றுக் கொண்ட பந்தின் மூலம் கயான் வீரரத்தவினால் அவ்வணி முதல் ட்ரை வைத்தது. எனினும், இதனை இடது மூலையில் இருந்து இலக்கு நோக்கி உதைந்த நைகல் ரத்வத்த கன்வெர்சன் செய்ய தவறியிருந்தார். (கண்டி 05-00  ஹெவ்லொக்)

பின்னர் பாசில் மரிஜா தனக்கு கிடைத்த இடைவெளிகளின் ஊடாகச் சென்று போட்டியின் இரண்டாவது ட்ரையினை வைத்திருந்தார். மரிஜாவின் ட்ரையினை இம்முறை கன்வெர்சன் செய்வது ரத்வத்தவிற்கு மிகவும் இலகுவாக இருந்தது. (கண்டி 12-00 ஹெவ்லொக்)

இதனையடுத்து கண்டி அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பு ஒன்றின் மூலம் ரத்வத்த தனது தரப்புக்கு மேலும் மூன்று புள்ளிகளை சேர்த்துக் கொடுத்தார். (கண்டி 15-00 ஹெவ்லொக்)  

தொடர்ந்து இலங்கையின் ரக்பிக்கு கிடைத்த தங்கப் பொக்கிஷம் என எல்லோரும் கொண்டாடும், பாசில் மாரிஜா மீண்டும் அபாரம் காண்பித்தார். ஸ்க்ரம் உருவாக்கப்பட்ட பின்னர் கிடைத்த பந்தினை கைப்பற்றிக் கொண்ட மரிஜா மிகவும் விரைவாக செயற்பட்டு தன்னுடைய இரண்டாவது ட்ரையினை வைத்திருந்தார். இதுவும் கன்வெர்சன் செய்யப்பட்டிருந்த நிலையில் எந்தவித புள்ளிகளையும் பெற்றுக் கொள்ள முடியாமல் ஹெவ்லொக் அணி முதற்பாதியினை நிறைவு செய்துகொண்டது.

முதற்பாதி: கண்டி விளையாட்டுக் கழகம் 22 (3T 2C 1P) – ஹெவ்லொக் விளையாட்டுக் கழகம்

முதற்பாதி இடைவேளை முடிந்து சிறிது நேரத்துக்குள்ளேயே மீண்டும் கிடைத்த பெனால்டி வாய்ப்பு மூலம் கண்டி அணிக்கு நைகல் ரத்வத்த புள்ளிகளை அதிகரித்திருந்தார். (கண்டி 25 – 00 ஹெவ்லொக்)

இதனையடுத்து ஹெவ்லொக் அணியின் விஷ்வரூப ஆட்டம் ஆரம்பமாகியது. ரீசா முபாரக், தாபரே போன்றோரின் உதவியோடு ஹெவ்லொக் அணிக்கு மிகவும் தேவையாக இருந்த அவ்வணியின் முதல் ட்ரை சுதம் சூரியாரச்சியினால் பெறப்பட்டிருந்தது. இதற்கான கன்வெர்சன் உதையினை மேற்கொண்டிருந்த ரீசா முபாரக் மேலதிகமான புள்ளிகளைப் பெற்றுத் தந்திருந்தார். (கண்டி 25-07 ஹெவ்லொக்)

சில நிமிடங்களில் அதிகமாக முயற்சிகளினை மேற்கொண்டிருந்த லிஸ்டன் ப்ளெட்னியினால் ஹெவ்லொக் அணிக்கு இரண்டாவது ட்ரை கிடைத்திருந்தது. இதனை கடினமான உதை ஒன்றின் மூலம் ரீசா முபாரக் கன்வெர்சன் செய்திருந்தார். (கண்டி 25-14 ஹெவ்லொக்)

2018 பாடசாலைகள் ரக்பி போட்டி அட்டவணை வெளியீடு

இலங்கையின் மிகப்பெரிய பாடசாலை விளையாட்டு போட்டித் தொடரான …

லசிந்து இசானின் முயற்சியின் மூலம் தொடர்ச்சியாக மூன்றாவது ட்ரையினை ஹெவ்லொக் விளையாட்டுக் கழகம் பெற்றுக் கொண்டது. இவரின் ட்ரையும் வெற்றிகரமாக கன்வெர்சன் செய்யப்பட ஹெவ்லொக் அணிக்கும், கண்டி அணிக்கும் இடையிலான புள்ளிகள் வித்தியாசம் வெறும் நான்காக மாறியிருந்தது. (கண்டி 25-21 ஹெவ்லொக்)

இப்படியாக போட்டி விறுவிறுப்பாக மாறிய நிலையில் அபாரமான முறையில் செயற்பட்ட பாசில் மரிஜா அழகிய முறையில் ரத்வத்தவினால் பரிமாற்றப்பட்ட பந்து மூலம் ஹட்ரிக் ட்ரையினை வைத்திருந்தார். இது கன்வெர்சன் செய்வது தவறவிடப்பட்டிருந்தாலும் கண்டி அணி அதன் முன்னிலையினை அதிகரித்துக் கொண்டது. (கண்டி 30-21 ஹெவ்லொக்)

எனினும், ஹெவ்லொக் அணி  போட்டியினை இதோடு முடித்துக் கொள்ளவில்லை. அவ்வணிக்காக இரண்டாவது தடவையாகவும் லசிந்து இஷான் ட்ரை வைத்திருந்தார். இந்த ட்ரை நான்காவது தடவையாக ரீசா முபாரக்கினால் கன்வெர்சன் செய்யப்பட்டிருந்தது. (கண்டி 30-28 ஹெவ்லொக்)

எனினும், இந்த ட்ரையோடு போட்டியின் நிறைவு நேரம் நெருங்கியிருந்த காரணத்தினால்,  கண்டி ரக்பி கழகம் 2017/18 ஆம் ஆண்டிற்கான டயலொக் கழக ரக்பி தொடரின் சம்பியனாக முடிசூடியது.

முழு நேரம்: கண்டி விளையாட்டுக் கழகம் 30 (4T 2C 2P)- 28 (4T 4C) ஹெவ்லொ க் விளையாட்டுக் கழகம்

ஹொங்கொங் T-20 யில் சங்காவின் அதிரடி ஆட்டம் வீணானது

ஹொங்கொங் T-20 பிளிட்ஸ் போட்டித் தொடரில் குமார்..

இந்தப் பருவகாலத்திற்கான டயலொக் கழக ரக்பி லீக் தொடரில் அதிக புள்ளிகள் பெற்ற வீரருக்கான விருதினையும், அதிக ட்ரைகளை வைத்த வீரருக்கான விருதினையும் திலின வீரசிங்க பெற்றுக் கொண்டார்.

இதேவேளை, ThePapare.com, இந்த தொடர் ஆரம்பித்தில் இருந்து நடாத்திய கருத்துக் கணிப்பின்படி கோரப்பட்ட வாக்குகளின் மூலம் மிகப் பிரபல்யமான வீரருக்கான விருது திலின வர்ணகுலசூரியவுக்கு வழங்கப்பட்டிருந்தது.

புள்ளிகள் பெற்றோர்

கண்டி விளையாட்டுக் கழகம்
பாசில் மாரிஜா (3T)
கயான் வீரரத்ன (1T)
நைகல் ரத்வத்த(2C, 2P)

ஹெவ்லொக் விளையாட்டு கழகம்
லிஸ்டன் ப்ளெட்னி (1T)
சுதம் சூரியாரச்சி (1T)
லசிந்து இஷான் (2T)
ரீசா முபாரக் (4C)