ரேஸ் கோர்ஸ் சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் தீர்மானம் மிக்க இறுதி ஆட்டத்தில் ரினௌன் விளையாட்டுக் கழகத்தை 3-1 என்ற கோல்கள் கணக்கில் விழ்த்தியதன் மூலம் கொழும்பு கால்பந்துக் கழக அணி சம்பியன் கிண்ணத்தை தொடர்ந்தும் தக்க வைத்துக்கொண்டது.  

தொடரில் கடந்த வாரம் வரை முன்னிலையில் இருந்த கொழும்பு கால்பந்துக் கழகம், புளு ஸ்டார் அணியுடனான போட்டியில் தோல்வியை சந்தித்ததால் தரப்படுத்தலில் பின்னடைவை சந்தித்தது. இதனால், இந்தப் போட்டியை கட்டாயம் வெற்றி பெற வேண்டுமென்ற நிலைக்கு கொழும்பு அணி தள்ளப்பட்டது.

மறுமுனையில் மிகவும் பலமான நிலையில் காணப்பட்ட ரினௌன் அணி, சுபர் 8 சுற்றில் முதல் போட்டிக்குப் பின்னர் எந்தப் போட்டியிலும் புள்ளிகளை பறிகொடுக்கவில்லை. கொழும்பு அணியுடனான தொடரின் இறுதிப் போட்டி சமநிலையில் முடிந்தாலும் கிண்ணத்தை வெற்றி பெறும் வாய்ப்பு ரினௌன் அணிக்கு இருந்தது.

இந்நிலையில் ஆரம்பமாகிய சம்பியனைத் தெரிவு செய்யும் இந்த முக்கிய போட்டியின் ஆரம்ப நிமிடங்களில் இரு அணிகளும் சமபலத்துடன் மோதின. இரு அணிகளும் மாறி மாறி வாய்ப்புகளை உருவாக்கினாலும் ஆரம்ப நிமிடங்களில் யாராலும் கோலினைப் பெற முடியாமல் இருந்தது.

இரு அணியினரும் சம பலத்துடன் மோதிக்கொண்டிருக்கையில், திடீர் என்று கொழும்பு கால்பந்துக் கழகம் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்தத் தொடங்கியது. இதன்போது மொஹமட் ரமீஸ் அடித்த ஹெடரை, ரினௌன் கோல் காப்பாளர் உஸ்மான் இறுதித் தருவாயில் தடுத்தார்.

அதேவேளை, கொழும்பு அணியின் டேவிட் ஒசாஜி சிறப்பாக விளையாடி ரினௌன் களத்தடுப்பாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தார்.

எனினும் 29வது நிமிடத்தில் ஜொப் மைக்கல், தன்னிடம் விழுந்த பந்தினை கோல் காப்பாளர் இம்ரானைத் தாண்டி அடித்து போட்டியின் முதல் கோலை ரினௌன் அணிக்காகப் பெற்றுக் கொடுத்தார்.

எதிரணி ஒரு கோலைப் பெற்றதன் பின்னரும் கொழும்பு அணி தொடர்ந்து ஆதிக்கத்தை தக்க வைத்துக்கொண்டது. அதன் பலனாக 36ஆவது நிமிடத்தில் சர்வானின் உள்ளீட்டை டேவிட் ஒசாஜி கோலாக மாற்றினார்.

எனினும், டேவிட் ஒசாஜி தனது சட்டையை உயர்த்தி கோல் மகிழ்ச்சியை கொண்டாடியதன் காரணமாக அவருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

முதலாவது பாதியின் இறுதி நேரத்தில் மொஹமட் பஸால்  அடித்த  வாய்ப்பினை இம்ரான் தடுத்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் முகமாக சர்வான் அடித்த ப்ரி கிக் வாய்ப்பு கோல் கம்பங்களில் பட்டு வெளியேறியது.

முதல் பாதிகொழும்பு கால்பந்துக் கழகம் 1 – 1 ரினௌன் விளையாட்டுக் கழகம்

முதலாவது பாதியைப் போன்றே இரண்டாவது பாதியையும் இரு அணிகளும் சம பலத்துடன் ஆரம்பித்தது. இரு அணியின் நடுக்கள வீரர்களும் பந்தினை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முட்டி மோதி விளையாடினர்.

எனினும் 56ஆவது நிமிடத்தில் கொழும்பு அணி மற்றொரு கோலினால் முன்னிலை பெற்றது. மொமாஸ் யாப்போவின் உள்ளீட்டை தனுஷ்க மதுஷங்க அருமையான முறையில் கோலாக மாற்றினார்.

தொடர்ந்து அபிஸ் ஓலயேமி அபாரமாக அடித்த பந்தை ரினௌன் கோல் காப்பாளர் அருமையாகத் தடுத்து மற்றொரு கோலில் இருந்து அணியை பாதுகாத்தார்.

நேரம் செல்லச் செல்ல ரினௌன் அணி வீரர்கள் சற்று தடுமாற்றமடையத் தொடங்கினர். அதனைப் போன்றே கொழும்பு கழகத்தின் பின்கள வீரர்களும் மிகவும் உக்கிரமாக விளையாடி உள்ளனுப்பப்பட்ட பந்துகளை தடுத்தனர்.

மொஹமட் ரிஸ்னி அருமையான முறையில் கோல் அடிக்க முயற்சி செய்தாலும் கோல் கம்பத்தினடியில் நின்ற தனுஷ்க மதுஷங்க அதனை தடுத்தார்.

இறுதி நிமிடங்களில் கோல் ஒன்றினைப் பெற ரினௌன் அணி வீரர்கள் பலமாக முயற்சி செய்த போதிலும், அவர்களால் இறுதி வரை ஆட்டத்தை சமநிலைப்படுத்துவதற்கான கோலினை போட முடியாமல் போனது.

போட்டியின் இறுதி நிமிடத்தில் ரிப்னாஸ் அடித்த பந்தை மொஹமட் இம்ரான் லாவகமாகத் தடுக்க, அடுத்த நிமிடம் அஹமட் ஷஸ்னி கொழும்பு அணிக்கு மூன்றாவது கோலினை அடித்தார்.

போட்டியை 3-1 என்ற கணக்கில் கொழும்பு கழகம் வெற்றிகொண்டு தொடர்ந்து இரண்டாவது முறையாக டயலொக் சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை தம்வசப்படுத்தியது.

முழு நேரம்: கொழும்பு கால்பந்துக் கழகம் 1 – 1 ரினௌன் விளையாட்டுக் கழகம்

ThePapare.com ஆட்ட நயகன்: சர்வான் ஜோஹர் (கொழும்பு கால்பந்துக் கழகம்)

கோல் பெற்றவர்கள்

கொழும்பு கால்பந்துக் கழகம் டேவிட் ஒசாஜி 36′, தனுஷ்க மதுஷங்க 56’, அஹமட் ஷஸ்னி 94’

ரினௌன் விளையாட்டுக் கழகம்ஜொப் மைக்கல் 29′,

மஞ்சள் அட்டை

கொழும்பு கால்பந்துக் கழகம் டேவிட் ஒசாஜி 37′

ரினௌன் விளையாட்டுக் கழகம் – பசுல் ரஹ்மான் 35′