இந்தியாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள உலகின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்குபற்றும் வீதியோர பாதுகாப்பு இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் 1996 உலகக் கிண்ணத்தில் வினையாடிய இலங்கை அணியின் முன்னாள் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரரும், முன்னாள் தலைவருமான சனத் ஜயசூரிய இலங்கை லெஜண்ட்ஸ் அணியுடன் இணைந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா வீதி பாதுகாப்பு அமைப்பு மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் ‘Road Saftey World Series’ என்ற பெயரில் மும்பையில் வீதியோர பாதுகாப்பு இருபதுக்கு 20 தொடர் கடந்த வருடம் மார்ச் மாதம் நடத்தப்பட்டது.
இதில் இந்தியா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ‘லெஜண்ட்ஸ்‘ அணிகள் பங்கேற்றன.
Legends T20 தொடரிலிருந்து இலங்கையின் முக்கிய வீரர்கள் விலகல்
எனினும், கொரோனா வைரஸுக்கு வெறும் நான்கு லீக் ஆட்டங்களுடன் இந்தப் போட்டிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்ப்டது.
இந்நிலையில் இத்தொடரை எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான போட்டிகள் ராய்பூரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.
இதனிடையே, குறித்த தொடரில் இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான ரஸல் ஆனோல்ட், நுவன் குலசேகர மற்றும் தம்மிக பிரசாத் ஆகிய வீரர்கள் இணைந்து கொள்ளவார்கள் என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.
இதுஇவ்வாறிருக்க, இலங்கை அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சனத் ஜயசூரியவும் இலங்கை லெஜண்ட்ஸ் அணிக்காக விளையாடுவார் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Video – மீண்டும் கிரிக்கெட் களத்தில் Russel, Kulasekara & Dhammika…! | Sports Roundup – Epi 149
இதன்படி, குறித்த தொடரில் திலகரட்ன டில்ஷானுடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக சனத் ஜயசூரிய களமிறங்கவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
எதுஎவ்வாறாயினும், முன்னதாக இந்தத் தொடரில் விளையாடிய முத்தையா முரளிதரன், ரொமேஷ் களுவிதாரன, சமிந்த வாஸ், உபுல் சந்தன மற்றும் மார்வன் அத்தபத்து உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏனெனில், எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை அணி ஒருநாள் உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டு 25 வருடங்கள் பூர்த்தியாகவுள்ள நிலையில், அதைமுன்னிட்டு 1996 உலகக் கிண்ணத்தில் விளையாடிய வீரர்கள் கலந்துகொள்ளும் விசேட கிரிக்கெட் போட்டியொன்று யாழ்ப்பாணத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாகத் தான், இந்தியாவில் நடைபெறவுள்ள வீதியோர பாதுகாப்பு இருபதுக்கு 20 தொடரில் முரளிதரன் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<