வன்னிநாயக்கவின் அரைச் சதத்தோடு வலுப்பெற்ற இலங்கை இளையோர் அணி

818
 

சுற்றுலா இலங்கை 19 வயதின்கீழ் கிரிக்கெட் அணி மற்றும் இங்கிலாந்தின் யங் லயன்ஸ் அழைப்பு XI அணி என்பவற்றுக்கிடையே நடைபெறும் பயிற்சிப் போட்டியின் முதல் நாள் ஆட்டநிறைவில், அசித வன்னிநாயக்கவின் அரைச்சதத்தோடு இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி வலுப் பெற்றிருக்கின்றது.

நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடவுள்ள குமார, சீகுகே, அசலங்க!

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி அங்கே இளையோர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்க முன்னர், மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் இங்கிலாந்தின் யங் லயன்ஸ் XI அணியுடன் விளையாடுகின்றது.

அதன்படி இந்தப் பயிற்சிப் போட்டி நேற்று (16) லோக்போரோக் ப்ரோகிங்டன் அரங்கில் ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கையின் இளம் வீரர்கள் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தனர்.

தொடர்ந்து ஆரம்பவீரர்களாக சதீஷ ராஜபக்ஷ மற்றும் அசித வன்னிநாயக்க ஆகியோர் இலங்கையின் இளம் அணிக்காக களம் வந்தனர்.

இதில் சதீஷ ராஜபக்ஷ சிறந்த ஆரம்பத்தினை பெற்ற போதும் அதனை பெரிய இன்னிங்ஸ்களில் ஒன்றாக மாற்ற தவறியிருந்தார். இதனால் அவரது இன்னிங்ஸ் 23 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது.

இதன் பின்னர் புதிதாக களம் வந்த துடுப்பாட்டவீரர்களில் செவோன் டேனியல் வெறும் 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, பவன் பதிராஜ (23) மற்றும் ரனுத சோமரட்ன (29)  ஆகியோரும் பெரிதாக சோபித்திருக்கவில்லை.

இந்நிலையில் போட்டியில் மழையின் குறுக்கீடும் ஏற்பட்டிருந்தது. மழையின் பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில் தான் பெற்றுக் கொண்ட அரைச்சதத்துடன் அசித வன்னிநாயக்க இலங்கை 19 வயது கிரிக்கெட் அணிக்கு பலம் சேர்க்க மீண்டும் மழை குறுக்கிட்டு முதல் நாள் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்ட போது, இலங்கை 19 வயது அணி வீரர்கள் 56 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்கள் பெற்றிருந்தனர்.

CPL தொடரில் விளையாடவுள்ள சமரி அதபத்து

களத்தில் ஆட்டமிழக்காது இருந்த அசித வன்னிநாயக்க 81 ஓட்டங்களை எடுத்ததோடு, ஆட்டமிழக்காமல் இருக்கும் ஏனைய வீரரான ரவீன் டி சில்வா 2 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இதேநேரம் இங்கிலாந்து யங் லயன்ஸ் அணி பந்துவீச்சில் E. ஜேக் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி – 182/4 (56) அசித வன்னிநாயக்க 81*, E. ஜேக் 22/2

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடரும்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<