இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை அதிகரித்துக்கொண்ட இந்திய அணி

250

ரெட் புல் அனுசரணையுடன் இலங்கையில் நடைபெற்று வரும் உலகின் சிறந்த பல்கலைக்கழக அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் இன்றைய (25) போட்டிகளில் ஐக்கிய அரபு இராச்சியம், இந்தியா மற்றும் இலங்கை அணிகள் வெற்றி பெற்றன.

ஜிம்பாப்வே எதிர் ஐக்கிய அரபு இராச்சியம்

மழை காரணமாக தாமதமாக ஆரம்பிக்கப்பட்ட இப்போட்டி அணிக்கு 16 ஓவர்களாக குறைக்கப்பட்டிருந்தது. SSC மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு இராச்சிய அணியினர் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தனர். அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணி 16 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழந்து 120 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக தன்டாசோ மோயோ 44 ஓட்டங்களும் ஜிங்காயே லோங்வா 29 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். பந்து வீச்சில் கரன் அசுதானந்த் இரண்டு விக்கெட்டுகளையும் மேலும் மூன்று பந்து வீச்சாளர்கள் தலா ஒரு விக்கெட் வீதமும் வீழ்ததியிருந்தனர்.

இந்தியாவிடம் தோல்வியடைந்த இலங்கை அணியினர்

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் ஓட்டமெதுவும் பெறாமல் வெளியேற, தொடர்ந்து களமிறங்கிய ரோகித் ஜம்வாலும் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழக்க ஐக்கிய அரபு இராச்சிய அணி 10 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய சந்தர்ப்பத்தில் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய சயிட் பைஸான் 22 பந்துகளில் 65 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் ஐக்கிய அரபு இராச்சிய அணி 13.4 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழந்து வெற்றி இலக்கை அடைந்து மூன்று விக்கெட்டுகளால் வெற்றி பெற்றனர்.

இந்தியா எதிர் பாகிஸ்தான்

NCC மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி இரண்டு பந்துகள் மீதமிருக்க 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று நேரடியாக இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்பபை அதிகரித்துக் கொண்டது. இப்போட்டியும் மழை காரணமாக பாதிக்கப்பட்டிருத்ததால் அணிக்கு 9 ஓவர்கள் என குறைக்கப்பட்டிருந்தது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை பாகிஸ்தான் அணிக்கு வழங்கியிருந்தது. அவ்வணி முதல் ஓவரிலே தமது முதல் இரண்டு விக்கெட்டுகளையும் இழந்த போதிலும் 9 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 109 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பாகிஸ்தான் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் அர்ஸலான் பர்ஸான்ட் ஆட்டமிழக்காமல் 21 ஓட்டங்களையும் ஹம்ஸா காதிர் மற்றும் முஹம்மத் அசாட் ஆகிய இருவரும் தலா 20 ஓட்டங்கள் வீதமும் பெற்றனர். பந்து வீச்சில் பியூஷ் சல்வி மற்றும் திவ்யங்  ஹிங்கேகர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

வெற்றி பெறுவதற்கு 54 பந்துகளில் 110 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில் களமிறங்கிய இந்திய அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 8.4 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது. இந்திய அணி வீரர்களான யாஷ் நாகர் மற்றும் திவ்யங்  ஹிங்கேகர் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தின் மூலம் இவ்வெற்றி கைகூடியது என்றால் மிகையாகாது. இவர்கள் இருவரும் ஐந்தாவது விக்கெட்டுக்காக பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 47 ஓட்டங்கள் பெற்றனர். யாஷ் நாகர் 42 ஓட்டங்களையும் திவ்யங்  ஹிங்கேகர் 22 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றிருந்தனர். பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக குராம் ஷஃஸாட் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். புள்ளிகள் அடிப்படையில் முதலாம் இடத்தை பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் ஐந்து போட்டிகளில் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு அந்த வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.

தலைமைப் பதவியை இழந்த மெதிவ்ஸின் அதிரடி அறிவிப்பு

இலங்கை எதிர் பங்களாதேஷ்

NCC மைதானத்தில் நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர் கொண்ட இலங்கை அணி ஹஷான் துமிந்துவின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில்  துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 142 ஓட்டங்களை பெற்றிருந்தது. பங்களாதேஷ் அணியில் சாபித் ஹொஸைன் அதிக பட்சமாக 50 ஓட்டங்கள் பெற்றிருந்ததோடு இன்சமாம் உல் ஹக் மற்றும் மாராஜ் நிலோய் ஆகியோர் முறையே 33 மற்றும் 26 ஓட்டங்களை பெற்றிருந்தனர். இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் பிரமோத் மதுஷான் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்ததோடு ஏனைய நானகு பந்துவீச்சாளர்கள் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.2 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது. இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் ஹஷான் துமிந்து ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களை பெற்றதுடன் பசிந்து லக்‌ஷங்க, ஜனித் லியனகே ஆகிய இருவரும் முறையே 30, 22 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றிக்கு பங்காற்றினர். பங்களாதேஷ் பந்து வீச்சாளர் மஹ்பூபுர் ரஹ்மான் இரண்டு விக்கெட்டுகளை தமது அணி சார்பாக வீழ்ததியிருந்தார்.

இத்தொடரில் நடைபெற்று முடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்தியா 6 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் தலா 4 புள்ளிகளுடன் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களிலும் பங்களாதேஷ் மற்றும் UAE அணிகள் தலா 2 புள்ளிகளுடன் முறையே நான்காம் மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளதுடன் ஜிம்பாப்வே அணி மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிகளின்றி ஆறாவது இடத்தில் உள்ளது.

இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள இத்தொடரின் மேலும் மூன்று போட்டிகள் நாளை (26) நடைபெறவுள்ளது.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<