ஜிம்பாப்வேயுடனான தொடருக்கு இலங்கை அணித் தலைவராக ஹேரத்

2854
Rangana Herath to captain Sri Lanka in Zimbabwe

ஜிம்பாப்வே அணியுடன் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணியின் தலைவர் அஞ்செலோ மெத்திவ்ஸ் காயமடைந்துள்ளமையினாலேயே ஹேரத்திற்கு இந்த தற்காலிக தலைமைப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அஞ்செலோ மெத்திவ்ஸின் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அவுஸ்திரேலியாவுடனான கடந்த சுற்றுத் தொடரின் பாதியில் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற பயிற்சிகளின்போது, அவர் மீண்டும் உபாதைக்குள்ளானார்.

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட உடற்தகுதி பரிசோதனைகளின்போது, அவருக்கு ஏற்கனவே காயம் ஏற்பட்ட இடத்தில் பாதிப்பு அதிகரித்துள்ளமையினால் விளையாட முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்தே ஹேரத் அணியின் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த தலைமைப் பதவியின் மூலம் இலங்கை தேசிய அணியை தலைமை தாங்கும் முதல் சந்தர்ப்பத்தை ஹேரத் பெற்றுள்ளார். எனவே, 1982ஆம் ஆண்டு இலங்கை அணி டெஸ்ட் அந்தஸ்தை பெற்றதன் பின்னர் நியமிக்கப்படும் 13ஆவது டெஸ்ட் அணித் தலைவராக ஹேரத்தின் பெயர் பதிவாகின்றது.

அதேபோன்று, ஜிம்பாப்வே தொடருக்கு துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த தினேஷ் ஷந்திமலும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் அண்மையில் இடம்பெற்ற வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான போட்டியின்போது காயமடைந்தமையினாலேயே இத்தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மெத்திவ்சிற்கு மாற்றீடாக, இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக நீண்ட காலம் விளையாடிய உபுல் தரங்க அணிக்குள் மீண்டும் உள்வாங்கப்பட்டுள்ளார்.