இலங்கையுடனான முதல் டெஸ்டில் வைரஸ் காய்ச்சலால் ராகுல் நீக்கம்

496

காலியில் வரும் புதன்கிழமை (26) ஆரம்பமாகவுள்ள இலங்கையுடனான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லோகேஷ் ராகுல் வைரஸ் காய்ச்சல் காரணமாக விலகியதாக இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று திங்கட்கிழமை (24) உறுதிசெய்தது.

சுகவீனம் காரணமாக திங்களன்று பயிற்சியில் பங்கேற்காத ராகுல், கொழும்பில் தொடர்ந்து தங்கி இருந்து சிகிச்சை பெறவுள்ளார். இந்திய அணியின் ஏனைய வீரர்கள் முதல் டெஸ்டில் விளையாடுவதற்காக தெற்கு இலங்கையை நோக்கி பயணிக்கின்றனர்.    

இந்த ஆண்டு பெப்ரவரிமார்ச் மாதங்களில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோள்பட்டை காயத்திற்கு உள்ளான நிலையில் அதில் இருந்து மீண்டே இலங்கை சுற்றுப்பயணத்தில் அவர் பங்கேற்றுள்ளார்.

இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக ஹஷான் திலகரட்ன

குறிப்பாக அவர் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் வலியை பொருட்படுத்தாமல் விளையாடி அதிக ஓட்டங்களை பெற்றபோதும் .பி.எல். தொடர், பின்னர் இடம்பெற்ற சம்பியன்ஸ் கிண்ணம் மற்றும் மேற்கிந்திய தீவுகளுடனான சுற்றுப் பயணங்களில் விளையாட முடியாமல்போனது. அணிக்குத் திரும்பிய அவர் மொரடுவையில் நடைபெற்ற இரண்டு நாள் பயிற்சிப் போட்டியில் வேகமாக அரைச் சதம் ஒன்றை எடுத்திருந்தார்.  

அவரது உடல் நிலை கவலைப்படும்படி இல்லை. வேகமாக முன்னேற்றம் கண்டு வருவது குறித்து மருத்துவக் குழு திருப்தி அடைந்துள்ளதுஎன்று இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.    

காலியில் ஜுலை 26 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்வு செய்யப்படும் அணியில் அவர் இடம்பெற மாட்டார் என்று அந்த அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.  

இந்திய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் காயங்கள் மற்றும் சுகவீனத்தால் அண்மைக் காலமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவுஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின்போது மணிக்கட்டில் காயத்திற்கு உள்ளான முரளி விஜய் சத்திர சிகிச்சைக்கு முகம்கொடுத்த நிலையில் அவர் இன்னும் மீண்டு வரவில்லை

இந்திய அணிக்காக 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் 25 வயதான லோகேஷ் ராகுல் 4 சதங்கள் மற்றும் 7 அரைச் சதங்களுடன் 1,200 ஓட்டங்களை பெற்றுள்ளார். இதன் ஓட்ட சராசரி 44.44 ஆகும்.

முதல் டெஸ்டில் ராகுல் இல்லாத நிலையில் ஷிகார் தவானுடன் அபினேவ் முகுந்த் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.