கரீபியன் டி20 லீக்கில் இலங்கை வீரர்கள்

1501
SL Players in CPL T20

இந்தியாவில் வருடாந்தம் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறுவது போன்று மேற்கிந்திய தீவுகளில் வருடாந்தம் கரீபியன் பிரிமியர் லீக் டி20 நடைபெற்று வருவது வழமை.

அந்த அடிப்படையில் இந்த வருடம் கரீபியன் பிரிமியர் லீக் டி20  போட்டிகள் ஜுன் மாதம் 29ஆம் திகதி ஆரம்பித்தது. இந்த தொடரின் இறுதிப் போட்டி

ஆகஸ்ட் மாதம் 07ஆம் திகதி நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இவ்வருட கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடரில் மொத்தமாக 6 அணிகள் பங்குகொள்கின்றன. பார்படாஸ் டிரைடன்ட், கயானா அமேசான் வோரியர்ஸ், ஜமைக்கா தளவாஹ்ஸ், சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பெட்ரியட்ஸ், சென்  லூசியா சௌக்ஸ், ட்ரிபாகோ நைட் ரைடர்ஸ். இவை தான் இத்தொடரில் விளையாடும் 6 அணிகள்.

இம்முறை நடைபெறும் கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடரில் 2 இலங்கை வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் இலங்கை அணிக்கு மற்றும் உலகில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான குமார் சங்கக்கார ஜமைக்கா தளவாஹ்ஸ் அணிக்கு விளையாடவுள்ளார். சங்கா விளையாடும் ஜமைக்கா தளவாஹ்ஸ் அணியில் சங்காவோடு க்ரிஸ் கெயில், எண்டர் ரசல், டெல் ஸ்டெய்ன், ஸகீப் அல் ஹஸன் மற்றும் இமாத் வசீம் ஆகிய முக்கிய வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

அத்தோடு இலங்கை அணியின் சகலதுறை வீரர் மற்றும் இரும்பு மனிதன் என்ற புனைப் பெயரைக் கொண்ட திசார பெரேராவும் இந்த வருட பிரிமியர் லீக் டி20  தொடரில்  விளையாடுகிறார். இவர் தென் ஆபிரிக்க டி20 அணித் தலைவரான பெப் டுப்ளசிஸ் தலைமையிலான சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பெட்ரியட்ஸ் அணிக்கு விளையாடுகிறார். இவர் இணைந்துள்ள சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பெட்ரியட்ஸ் அணியில் திசரவோடு லென்டில் சிமன்ஸ், தப்ரிஸ் ஸம்ஸி,  பிராட் ஹொட்ஜ், சாமுவேல் பத்ரி, கார்லோஸ் பிராத்வெய்ட் ஆகியோர் முக்கிய வீரர்களாக அணியில் இடம் பிடித்துள்ளனர்.

ஏற்கனவெ இன்று நடைபெற்ற போட்டியொன்றில் திசர விளையாடும் சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பெட்ரியட்ஸ் அணி கயானா அமேசான் வோரியர்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. ஆனால் இந்தப் போட்டியில்  கயானா அமேசான் வோரியர்ஸ் அணி 1 பந்து மீதமிருக்க 4 விக்கட்டுகளால் வெற்றிபெற்றது. இப்போட்டியில் திசர 12 பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 20 ஓட்டங்களைப் பெற்றுத் துடுப்பாட்டத்தில் கலக்கினாலும் பந்துவீச்சில் 4 ஓவர்கள் பந்துவீசி 51 ஓட்டங்களைக் கொடுத்திருந்தார். அத்தோடு அவரால் விக்கட் ஏதும் கைப்பற்ற முடியவில்லை.

இத்தொடரில் சங்கா விளையாடும் ஜமைக்கா தளவாஹ்ஸ் அணியின் முதலாவது போட்டி நாளை சனிக்கிழமை (02) இரவு 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் ஜமைக்கா தளவாஹ்ஸ் அணி திசர விளையாடும் சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பெட்ரியட்ஸ் அணியை சந்திக்க உள்ளது என்பது ஒரு சுவாரஸ்யமான விடயமாகும்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்