மீண்டும் IPL இல் விளையாடும் வாய்ப்பை பெற்ற க்ரிஸ் கிரீன்

166
cricket.com.au

அவுஸ்திரேலிய அணியின் சுழல் பந்துவீச்சாளர் க்ரிஸ் கிரீன் இந்த வருட ஆரம்பத்தில் விதிமுறையை மீறி பந்துவீசும் குற்றச்சாட்டுக்கு முகங்கொடுத்திருந்த போதும், தற்போது அவர் மீண்டும் பந்துவீச அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்பேஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர்ஸ் அணிக்காக 2019-20 பருவகாலத்தில் விளையாடிவந்த போது, க்ரிஸ் கிரீனின் பந்துவீச்சு விதிமுறைக்கு மாறானது எனவும், அதனால், 90 நாட்கள் அவர் பந்துவீச முடியாது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

“சிறந்த உடற்தகுதியுடன் அடுத்த தொடருக்காக தயாராக வேண்டும்” – மெதிவ்ஸ்

இந்த நிலையில், இன்றைய தினம் க்ரீஸ் கிரீனின் பந்துவீச்சு குறித்து அறிவித்த சிட்னி தண்டர்ஸ், பூபா தேசிய கிரிக்கெட் அமைவிடத்தில் கடந்தவாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் படி, க்ரீஸ் கிரீனின் பந்துவீச்சு பாணி சரியானது எனவும், அவர் 15 பாகைக்கும் அதிகமாக முழங்கையை மடித்து பந்துவீசவில்லை எனவும் தெரியவந்துள்ளதாக அறிவித்துள்ளது. 

சிட்னி தண்டர்ஸ் அணியின் இந்த அறிவித்தலானது, க்ரிஸ் கிரீனின் கன்னி ஐ.பி.எல் ஒப்பந்தத்திற்கு வலுசேர்த்துள்ளது. கிரீன் கடந்த ஐ.பி.எல். ஏலத்தில் 20 இலட்சம் இந்திய ரூபாவுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக வாங்கப்பட்டிருந்தார். எனினும், பந்துவீச்சு தடை காரணமாக அவருக்கு விளைாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. எனினும், இப்போது தடை நீங்கியுள்ளதால் குறித்த ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு தோன்றியுள்ளது.

அத்துடன், ஐ.பி.எல். தொடரானது அட்டவணைப்படுத்தப்பட்ட நேரத்தில் நடைபெற்றிருந்தால், கிரீன் வாய்ப்பை இழந்திருக்க கூடும். எனினும், ஐ.பி.எல். தொடர் கொவிட்-19 காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், இவ்வருடத்தின் பிற்பகுதியில் தொடர் நடைபெற்றால் கிரீனால் பங்கேற்க முடியும்.

தனது தடை நீங்கியது குறித்து கருத்து வெளியிட்ட க்ரிஸ் கிரீன், “அணிக்காக விளையாட முடியாமலும், அணிக்கு உதவ முடியாமலும் ஒரு ஓரத்தில் இருப்பது கடினமான விடயம். அதேநேரம், எனக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தவும், மேலும் பலமானவராக மாறவும் இதுவொரு நல்ல சந்தர்ப்பம். அத்துடன், எனக்கு குறித்த தருணத்தில் உதவிய தண்டர்ஸ்  அணி மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கு நன்றி கூறுகிறேன்.

உடற்தகுதியை பொருத்தவரை நான் நன்றாக இருப்பதாக உணர்கிறேன். அத்துடன், துடுப்பாட்டத்திலும் சற்று முன்னேறியுள்ளேன். எனவே, மீண்டும் போட்டித்தன்மையுடன் முன்வருவேன். என்னால் விளையாடுவதற்காக காத்திருக்க முடியவில்லை. அதேநேரம், மீண்டும் புத்துணர்ச்சியுடன் விளையாடி, என் மீது வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். எனவே, என்னுடைய முழு பலத்தையும் வெளிக்காட்டுவேன்” என கிரீன் குறிப்பிட்டார்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<