இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் முதல்தர கிரிக்கெட் சுற்றுப்போட்டியான பிரீமியர் லீக் தொடரின் ‘A’ மட்டத்திற்கான 5 போட்டிகள் இன்று இடம்பெற்றன.
ராகம கிரிக்கெட் கழகம் எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்
இவ்விரண்டு அணிகளுக்குமிடையிலான போட்டி இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றது. முதல் நாள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 370 ஓட்டங்களை பெற்றிருந்த செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் இன்று தொடர்ந்து துடுப்பெடுத்தாடியது.
ராகம் கிரிக்கெட் கழகம் இறுதி விக்கெட்டுகளை துரிதமாக வீழ்த்த, செரசன்ஸ் அணியானது சகல விக்கெட்டுகளையும் இழந்து 401 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கௌஷல்ய கஜசிங்க மற்றும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சங்கீத் குரே ஐந்தாவது விக்கெட்டுக்காக 245 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்து கொண்டனர்.
அபாரமாக துடுப்பெடுத்தாடிய சங்கீத் குரே 18 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 189 ஓட்டங்களை விளாசினார். கௌஷல்ய கஜசிங்க 99 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார். பந்து வீச்சில் அமில அபொன்சோ 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்,
அடுத்து களமிறங்கிய ராகம விளையாட்டுக் கழகத்தினால் சிறப்பான ஆரம்பத்தினை பெற முடியவில்லை. எனினும் ரொஷேன் சில்வா மற்றும் உதார ஜயசுந்தர ஆகியோரின் நிதானமான ஆட்டத்தின் காரணமாக, அவ்வணி இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 5 விக்கெட்டுகளை இழந்து 263 ஓட்டங்களை பெற்றிருந்தது.
உதார ஜயசுந்தர சதம் கடந்த நிலையில் 109 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததுடன், சதத்தை தவறவிட்ட ரொஷேன் சில்வா 95 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். பந்து வீச்சில் மொஹமட் டில்ஷாட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
நாளை போட்டியின் மூன்றாவதும் இறுதியுமான நாளாகும்.
போட்டியின் சுருக்கம்
செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 401 (98.3) – சங்கீத் குரே 189, கௌஷல்ய கஜசிங்க 99, அமில அபொன்சோ 4/100
ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 263/5 (76.2) – உதார ஜயசுந்தர 109, ரொஷேன் சில்வா 95, மொஹமட் டில்ஷாட் 3/43
தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்
இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அபாரமான துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட தரங்க பரணவிதான மற்றும் ஜீவன் மெண்டிஸ் முறையே 100 மற்றும் 115 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தனர். அதிரடியாக ஆடி வரும் மனோஜ் சரத்சந்திர ஆட்டமிழக்காது 82 ஓட்டங்களை பெற்று களத்திலுள்ளார். இதன்படி, தமிழ் யூனியன் அணி இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 6 விக்கெட்டுகளை இழந்து 397 ஓட்டங்களை பெற்றிருந்தது.
நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.
போட்டியின் சுருக்கம்
தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 397/6 (91) – தரங்க பரணவிதான 100, ஜீவன் மெண்டிஸ் 115, மனோஜ் சரத்சந்திர 82
NCC எதிர் SSC
இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற SSC முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய NCC ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. எனினும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சதுரங்க டி சில்வா 95 ஓட்டங்களையும் ஜெஹான் முபாரக் 81 ஓட்டங்களையும் பெற்றுக் கொள்ள, அவ்வணி 8 விக்கெட்டுகளை இழந்து 339 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணித்தலைவர் பர்வீஸ் மஹ்ரூப் அரைச்சதம் கடந்த நிலையில் ஆட்டமிழந்தார். பந்து வீச்சில் SSC அணியின் கசுன் மதுஷங்க 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.
போட்டியின் சுருக்கம்
NCC (முதல் இன்னிங்ஸ்) – 339/8 (90) – சதுரங்க டி சில்வா 95, ஜெஹான் முபாரக் 81, பர்வீஸ் மஹ்ரூப் 59, நிமேஷ குணசிங்க 47, கசுன் மதுஷங்க 3/65
சோனகர் விளையாட்டுக் கழகம் எதிர் இராணுவ விளையாட்டுக் கழகம்
இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற சோனகர் விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அசத்தலாக துடுப்பெடுத்தாடிய ஷானுக விதானவசம் 16 பௌண்டரிகள், 5 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காது 152 ஓட்டங்கள் விளாச, சோனகர் விளையாட்டுக் கழகம் 8 விக்கெட்டுகளை இழந்து 320 ஓட்டங்களை பெற்றிருந்தது. பந்து வீச்சில் சீக்குகே பிரசன்ன 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.
போட்டியின் சுருக்கம்
சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 320/8 (90) – ஷானுக விதானவசம் 152*, ருவிந்து குணசேகர 45, பபசர வடுகே 40, சீக்குகே பிரசன்ன 3/111
கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்
இப்போட்டியின் நாணய சுழற்சியை வென்ற கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.
நிதானமாக துடுப்பெடுத்தாடிய ஹஷான் துமிந்து 105 ஓட்டங்கள் குவிக்க, அவ்வணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 276 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. கீழ்வரிசை வீரர் அகில தனஞ்சய ஆட்டமிழக்காது 42 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் லஹிரு மதுஷங்க, லக்ஷன் சந்தகன் மற்றும் சச்சித் பதிரன ஆகியோர் 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.
தொடர்ந்து களமிறங்கிய கொழும்பு கிரிக்கெட் கழக அணி இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது 2 விக்கெட்டுக்களை இழந்து 28 ஓட்டங்களை பெற்றிருந்தது.
நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.
போட்டியின் சுருக்கம்
கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 276 (81.4) – ஹஷான் துமிந்து 105, அகில தனஞ்சய 42*, சச்சித் பதிரன 3/37, லஹிரு மதுஷங்க 3/45, லக்ஷன் சந்தகன் 3/63
கொழும்பு கிரிக்கெட் கழகம் – 28/2 (6)