உலக முப்படைகள் விளையாட்டு விழாவில் பங்கேற்கும் சபான் மற்றும் பாசில் உடையார்

157

சீனாவின் வூஹான் நகரில் இம்மாதம் 21 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள உலக முப்படைகள் விளையாட்டு விழாவுக்கான இலங்கை மெய்வல்லுனர் அணியில் வட மத்திய மாகாணத்தைச் சேர்ந்த மொஹமட் சபான் மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பாசில் உடையார் ஆகிய இருவரும் இடம்பிடித்துள்ளனர்.

ஏழாவது உலக முப்படைகள் விளையாட்டு விழா (7th CISM World Games) சீனாவின் வூஹான் நகரில் இம்மாதம் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் சுமார் 100 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் அதிகமான முப்படை வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

அத்துடன், 23 வகையான போட்டி நிகழ்ச்சிகளை உள்ளடக்கியதாக நடைபெறவுள்ள இம்முறை போட்டித் தொடரில் இலங்கையிலிருந்து சுமார் 102 வீர, வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். 

இந்த நிலையில், இம்முறை போட்டிகளில் பங்கேற்கவுள்ள 18 பேர் கொண்ட இலங்கை மெய்வல்லுனர் அணியின் தலைவராக கோலூன்றிப் பாய்தல் தேசிய சம்பியனான இஷார சந்துருவன் செயற்படவுள்ளார்.

அத்துடன், இம்முறை போட்டிகளில் அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகளில் பிரகாசித்து வருகின்ற இளம் குறுந்தூர ஓட்ட வீரர்களான மொஹமட் சபான் மற்றும் பாசில் உடையார் ஆகிய இருவருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இராணுவ மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இராணுவ பீரங்கி படைப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட மொஹமட் சபான், போட்டித் தூரத்தை 21.48 செக்கன்களில் நிறைவு செய்து வெண்கலப் பதக்கம் வென்றார். 

எனவே, இராணுவ மெய்வல்லுனரில் தனது முதலாவது பதக்கத்தை சுவீகரித்த சபான், உலக முப்படைகள் விளையாட்டு விழாவில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றுக் கொண்டார்.

இதேநேரம், இராணுவ மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 200 மீற்றரில் நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்ட கிழக்கு மாகாண வீரர் பாசில் உடையார், இம்முறை உலக முப்படைகள் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 4 x 100 அஞ்சலோட்ட அணியில் இடம்பிடித்தார். 

எனினும், கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டத்தில் பாசில் உடையார் வெண்கலப் பதக்கத்தினை வென்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இம்முறை உலக முப்படைகள் விளையாட்டு விழாவுக்கான இலங்கை மெய்வல்லுனர் குழாத்தில் 14 வீரர்களும், 4 வீராங்கனைகளும் இடம்பிடித்துள்ளனர்.

இதில் இலங்கையின் தேசிய மட்ட சம்பியன்களான ஹிமாஷ ஏஷான் (100 மீற்றர்), அருண தர்ஷன (400 மீற்றர்), பிரசாத் விமலசிறி (நீளம் பாய்தல்), கிறேஷன் தனஞ்சய (முப்பாய்ச்சல்), சுமேத ரணசிங்க (ஈட்டி எறிதல்), விதூஷா லக்ஷானி (முப்பாய்ச்சல்), நிமாலி லியானாரச்சி (800 மீற்றர்), சாரங்கி சில்வா (100 மீற்றர்), நதீகா லக்மாலி (ஈட்டி எறிதல்), உபமாலி ரத்னகுமாரி (400 மீற்றர்) உள்ளிட்ட முன்னணி வீர, வீராங்கனைகள் இலங்கை சார்பாக போட்டியிடவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். 

இதுவரை நடைபெற்ற உலக முப்படைகள் விளையாட்டு விழாவில் இலங்கை அணி 9 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 2 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்துள்ளது. 

இந்த நிலையில், இறுதியாக 2015 ஆம் ஆண்டு தென் கொரியாவில் நடைபெற்ற உலக முப்படைகள் விழாவில் இலங்கை அணி ஓரேயொரு வெண்கலப் பதக்கத்தினை சுவீகரித்தது. 

ஆண்களுக்கான 4 x 100 அஞ்சலோட்டத்தில் பங்குகொண்ட வினோஜ் சுரன்ஜய, மொஹமட் அஷ்ரப், ரஜாஸ் கான் மற்றும் யுபுன் அபேகோன் உள்ளிட்ட வீரர்கள் இலங்கை அஞ்சலோட்ட அணியில் இடம்பிடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>>மேலும்பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<