2024 T20 உலகக் கிண்ணத்துக்கு எப்படி தகுதிபெறுவது?

2922

2024 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐசிசி இன் 9ஆவது T20 உலகக் கிண்ணத் தொடருக்கு அணிகள் எவ்வாறு தகுதி பெறும் என்பதை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) அறிவித்துள்ளது.

துபாயில் நேற்று (10) நிறைவடைந்த ஐசிசி இன் செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு ஐசிசி இந்த அறிவிப்பை வெளியிட்டது.

ஐசிசி இன் அங்குரார்ப்பண T20 உலகக் கிண்ணத் தொடர் 2007ஆம் ஆண்டு ஏழு அணிகளின் பங்குபற்றளுடன் நடைபெற்றது. இந்த நிலையில், ஐசிசி இன் 8ஆவது T20 உலகக் கிண்ணத் தொடர் இந்த ஆண்டு அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. அந்த அனைத்து போட்டிகளிலும் 12 மற்றும் 16 அணிகள் போட்டியிட்டன,

இந்த நிலையில், எதிர்வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடரில் 20 அணிகள் போட்டியிடும். ஐசிசி இன் T20 உலகக் கிண்ண வரலாற்றில் அதிக அணிகள் பங்கேற்கும் தொடர் இதுவாகும்.

அதன்படி, T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் 20 அணிகளில் 12 அணிகள் தகுதிச் சுற்றுப் போட்டியின்றி நேரடியாக உலகக் கிண்ணத்துக்குத் தகுதி பெறும்.

அவுஸ்திரேலியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடரில் முதல் எட்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்துக்கு நேரடியாகத் தகுதி பெறும்.

இதில் போட்டிகளை நடாத்தும் வரவேற்பு நாடுகளான மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் ஏற்கனவே T20 2024 உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற்றுவிட்டன.

மேலும், இந்த ஆண்டு நவம்பர் 14ஆம் திகதிக்குள், ஐசிசி இன் T20 அணிகளுக்கான தரவரிசையில் உள்ள ஒருசில முன்னணி அணிகள் 2024

T20 உலகக் கிண்ணத்துக்கு நேரடியாகத் தகுதி பெறும் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்த ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் எட்டு இடங்களுக்குள் இடம்பிடித்தால், T20 அணிகளின் தரவரிசையின் அடிப்படையில் மேலும் மூன்று அணிகள் 2024 T20 உலகக் கிண்ணத்துக்குத் தகுதி பெறும் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும்.

எனினும், மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்த ஆண்டு T20 உலகக் கிண்ணத்தில் முதல் எட்டு இடங்களுக்குள் இடம்பெறத் தவறினால், T20 அணிகளின் தரவரிசையில் மேலும் இரண்டு அணிகள் மட்டுமே 2024 T20 உலகக் கிண்ணத் தொடருக்குத் தகுதி பெறும்.

மற்ற 8 நாடுகள் 2024 T20 உலகக் கிண்ணத்துக்காக நடத்தப்படுகின்ற தகுதிகாண் போட்டிகள் மூலம் தகுதி பெறும்.

இதில் ஆபிரிக்க, ஆசிய மற்றும் ஐரோப்பிய பிராந்தியங்களில் இருந்து தலா இரண்டு அணிகளும், அமெரிக்கா மற்றும் கிழக்கு ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இருந்து தலா ஒரு அணியும் T20 உலகக் கிண்ணத்துக்குத் தகுதி பெறும்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<