ஏழாவது முறையாக உலகக் கிண்ணத்தை சுவீகரித்த ஆஸி. மகளிர் கிரிக்கெட் அணி

124

இன்று (03) நடைபெற்று முடிந்திருக்கும் 2022ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில், அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தினை 71 ஓட்டங்களால் வீழ்த்தியிருக்கின்றது.

>> யாழ்ப்பாண அணிக்கு சதம் அடித்து பலம் சேர்த்த சமிந்த

மேலும் இந்த வெற்றியுடன் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 07ஆவது முறையாக மகளிர் உலகக் கிண்ணத்தினை சுவீகரித்து வரலாறு படைத்திருக்கின்றது.

2022ஆம் ஆண்டுக்கான மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி கிறைஸ்ட்சேர்ச் நகரில் நடைபெற்றிருந்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து மகளிர் அணித்தலைவி ஹீத்தர் நைட் போட்டியில் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை அவுஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு வழங்கினார்.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய மங்கைகள் அலீசா ஹீலியின் அபார ஆட்டத்தோடு 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை 356 ஓட்டங்களை எடுத்தனர்.

அவுஸ்திரேலிய மகளிர் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அபார ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த அலீசா ஹீலி வெறும் 138 பந்துகளுக்கு 26 பௌண்டரிகள் அடங்கலாக 170 ஓட்டங்களை எடுத்திருந்தார். மறுமுனையில் ஆஸி. மகளிர் அணிக்காக அரைச்சதம் தாண்டியிருந்த ரச்சேல் ஹேய்னஸ் 68 ஓட்டங்களையும், பெத் மூனி 62 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

இங்கிலாந்து மகளிர் அணியின் பந்துவீச்சு சார்பில் அன்யா சுருப்சுளே வெறும் 46 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 357 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து மகளிர் அணி 43.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 285 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது.

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பில் இறுதிவரை போராட்டம் காட்டிய நட்டாலி ஸ்கைவர் வெறும் 121 பந்துகளுக்கு 15 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 148 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் நின்றிருந்தார்.

இதேநேரம் அவுஸ்திரேலிய மகளிர் அணியின் பந்துவீச்சில் அலானா கிங் மற்றும் ஜெஸ் ஜொனஸ்ஸேன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் தமது தரப்பின் உலகக் கிண்ண வெற்றியினை உறுதி செய்தனர்.

போட்டியின் ஆட்டநாயகியாகவும், தொடர் நாயாகியாகவும் அவுஸ்திரேலிய அணி வீராங்கனை அலீசா ஹீலி தெரிவாகினார்.

போட்டியின் சுருக்கம்

அவுஸ்திரேலியா – 356/5 (50) அலீசா ஹீலி 170, ரச்சேல் ஹேய்னஸ் 68, பெத் மூனி 62, அன்யா ஸ்ரூப்சோலே 46/3

இங்கிலாந்து – 285 (43.4) நட்டாலி ஸ்கீவர் 148*, அலானா கிங் 64/3, ஜெஸ் ஜொனஸ்ஸன் 57/3

முடிவு – அவுஸ்திரேலிய அணி 71 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<