பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான இலங்கை உத்தேச குழாம்!

210

பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான குழாத்தை தெரிவுசெய்யும் சந்திப்பினை நாளைய தினம் (14) இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு நடத்தவுள்ள நிலையில், அங்கு செல்லவுள்ள 16 பேர்கொண்ட உத்தேச குழாம் ஒன்றினை எமது Thepapare.com பெயரிட்டுள்ளது. 

பாகிஸ்தான் சுற்றுப் பயணத்துக்கான இலங்கை குழாம் எதிர்வரும் 8ம் திகதி பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், குறித்த தொடருக்கான உத்தேச குழாத்தில் சில புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

விளையாட்டுத்துறை ஊழலை தடுக்கும் சட்டமூலம் ஏகமனதாக நிறைவேற்றம்

இந்த நாட்டின் விளையாட்டுத்துறையில் சூதாட்டம், ஆட்டநிர்ணயம், ஊழல்கள்…

பாகிஸ்தானில் வைத்து இலங்கை அணியின் மீது 2009ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலின் பின்னர், எந்தவொரு டெஸ்ட் தொடரும் அந்நாட்டில் நடைபெறவில்லை. எனினும், இப்போது இலங்கை – பாகிஸ்தான் கிரிக்கெட் சபைகள் ஒன்றிணைந்து ஐசிசி சம்பியன்ஷிப்புக்கான இந்த தொடரை நடத்த திட்டமிட்டுள்ளது.

குறித்த தொடருக்கான இலங்கை குழாத்தை பொருத்தவரை, பாகிஸ்தானில் இறுதியாக நடைபெற்ற மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் விளையாடாத முன்னணி வீரர்கள் டெஸ்ட் தொடருக்கு செல்வதற்கான சம்மதத்தை வழங்கியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன செயற்படவுள்ளார். இந்நிலையில், திமுத் கருணாரத்னவுடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக யார் செயற்படுவார் என்ற கேள்வி எழும்பியுள்ளது. அணியின் டெஸ்ட் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக செயற்பட்டு வரும் லஹிரு திரிமான்னே, ஓட்டங்களை குவிக்க தடுமாறி வருவதுடன், இந்த ஆண்டு ஒரு அரைச் சதம் மாத்திரமே பெற்றுள்ளார்.

இவரது இந்த தடுமாற்றத்தின் காரணமாக இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சங்கீத் குரே மற்றும் பெதும் நிஸ்ஸங்க ஆகியோர் மீது கவனம் திரும்பியுள்ளது. 

லஹிரு திரிமான்னே 2011ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி, இதுவரையில் 68 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தாலும், இவரது ஓட்ட சராசரி 22.64 ஆக உள்ளது. ஆனாலும், நியூசிலாந்து அணிக்கு எதிராக இறுதியாக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இவர் அரைச் சதம் கடந்துள்ளதால், மற்றுமொரு வாய்ப்பை தேர்வுக்குழு இவருக்கு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சங்கீத் குரே மற்றும் பெதும் நிஸ்ஸங்க ஆகியோர் இதுவரை சர்வதேச போட்டிகளில் விளையாடவிட்டாலும், உள்ளூர் போட்டிகள் மற்றும் A அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் அதிகமாக ஓட்டங்களை குவித்து வருகின்றனர். குறிப்பாக பங்களாதேஷ் A அணிக்கு எதிரான தொடரில் பெதும் நிஸ்ஸங்க 3 இன்னிங்ஸ்களில் 291 ஓட்டங்களை குவித்ததுடன், சங்கீத் குரே 210 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.  

இவ்வாறு இவர்கள் பிரகாசித்து வரும் நிலையில், சங்கீத் குரே பாகிஸ்தான் தொடருக்கான டெஸ்ட் குழாத்தில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெதும் நிஸ்ஸங்க ஓட்டங்களை பெற்றிருந்தாலும், அவர் ஒரு சிறந்த மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான வீரர் என அடையாளப்படுத்தப்பட்டு வருவதுடன், சங்கீத குரே சிறந்த டெஸ்ட் வீரர் என கிரிக்கெட் சபையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

எனவே, சங்கீத் குரே மற்றும் பெதும் நிஸ்ஸங்க ஆகியோரில் ஒருவர் அல்லது இருவருமே அணியில் இணைக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது. இவ்வாறு, மேலதிகமாக ஒரு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குழாத்தில் இணைக்கப்பட்டால், ஓசத பெர்னாண்டோ அணியிலிருந்து நீக்கப்படுவார்.

அதேநேரம், மத்திய வரிசையை பொருத்தவரை, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், நிரோஷன் டிக்வெல்ல மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோர் இணைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதுடன், நியூசிலாந்துக்கு எதிரான தொடரின் 4 இன்னிங்ஸ்களில் 24 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்த குசல் பெரேராவின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தான் போன்ற சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் சிறப்பாக துடுப்பெடுத்தாடக்கூடிய தினேஷ் சந்திமாலுக்கு முன்னுரிமை வழங்க வாய்ப்புள்ளது.

மக்கள் எண்ணுவதும், எனது வாழ்க்கையும் வித்தியாசமானது – தனுஷ்க குணத்திலக்க

இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்டவீரர்களில் ஒருவரான தனுஷ்க…

சுழல் பந்துவீச்சினை பார்க்கும் போது, அகில தனன்ஜயவின் தடைக் காரணமாக சுழல் பந்துவீச்சை டில்ருவான் பெரேரா வழிநடத்துவார் என்பதுடன், லசித் எம்புல்தெனிய மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோர் ஏனைய சுழல் பந்துவீச்சாளர்களாக செயற்படுவர்.

இதேவேளை, இலங்கை அணி மீது 2009ம் ஆண்டு தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது, அணியுடன் இருந்த சுரங்க லக்மால் வேகப் பந்துவீச்சுக்கு தலைமை தாங்கவுள்ளதுடன், அவருடன் லஹிரு குமார, கசுன் ராஜித மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகியோர் இணைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான இலங்கை உத்தேச குழாம்

திமுத் கருணாரத்ன (தலைவர்), லஹிரு திரிமான்னே, சங்கீத் குரே, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், குசல் பெரேரா, தினேஷ் சந்திமால், தனன்ஜய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, டில்ருவான் பெரேரா, லசித் எம்புல்தெனிய, லக்ஷான் சந்தகன், சுரங்க லக்மால், லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ, கசுன் ராஜித

 >>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<