இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையதளமான ThePapare.com தொடர்ந்து இரண்டாவது வருடமாகவும் 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான ‘A’ பிரிவு (டிவிஷன் A) பாடசாலை அணிகளுக்கு இடையிலான தேசிய கூடைப்பந்து சம்பியன்ஷிப் போட்டித் தொடரை ஏற்பாடு செய்துள்ளது.

இலங்கையின் முன்னணி பாடசாலை அணிகள் மோதும் ”ThePapare கூடைப்பந்து சம்பியன்ஷிப் – 2017” தொடரின் பெண்களுக்கான போட்டிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு கொழும்பு கேட்வே கல்லூரியில் ஆரம்பமாகும். ஆண்களுக்கான போட்டிகள் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு கல்கிஸ்சை புனித தோமியர் கல்லூரியில் ஆரம்பமாகும்.

அடுத்த தலைமுறையை சிறந்த நட்சத்திரமாக்குவதற்கான அடித்தளத்தை அமைத்தல் எனும் தொனிப்பொருளில் இடம்பெறும் இந்த தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் குழு மட்டத்தில் இடம்பெறும். பின்னர் அதில் முதல் இரண்டு இடங்களையும் பெறும் அணிகள் அடுத்த சுற்றான காலிறுதிக்கு தெரிவாகும். பின்னர் இடம்பெறும் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி என்பன ஹென்றி பெட்ரிஸ் கூடைப்பந்து அரங்கில் மின்னொளியின் கீழ் இடம்பெறும். இறுதிப் போட்டி செப்டம்பர் 17ஆம் திகதி இடம்பெறும்.

ThePapare கூடைப்பந்து சம்பியன்ஷிப் தொடரானது, இலங்கையில் பாடசாலை மட்ட கூடைப்பந்து விளையாட்டினை தேசிய அளவில் மேம்படுத்தும் குறிக்கோளுடன் 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 26 பாடசாலைகள் பங்குபற்றிய அத்தொடரின் ஆண்கள் பிரிவில் புனித ஜோசப் கல்லூரியை வீழ்த்திய கல்கிஸ்சை புனித தோமியர் கல்லூரியும், பெண்கள் பிரிவில் நுகேகொட புனித ஜோசப் பெண்கள் கல்லூரியை வீழ்த்திய நல்லாயன் பெண்கள் கல்லூரியும் சம்பியன்ஷிப் பட்டத்தை சுவீகரித்திருந்தன.

இம்முறை இடம்பெறும் தொடரின் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் ThePapare.com, டயலொக் சனல் 01, MyTV என்பவற்றில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். செப்டம்பர் 10ஆம் திகதி ஆரம்பமாகும் காலிறுதிப் போட்டிகள் முதல் அனைத்துப் போட்டிகளும் ஹென்றி பெட்ரிஸ் கூடைப்பந்து அரங்கில் இருந்து நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

இத்தொடர் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று டயலொக் தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அங்கு கருத்து தெரிவித்த டயலொக் ஆசியாட்ட நிறுவனத்தின் Business, Global Content and Services பிரிவின் தலைவர் மங்கள ஹெட்டியாரச்சி,

இவ்வருடம் எமது முக்கிய நோக்கமானது இவ்விளையாட்டின் விறுவிறுப்பினை அனைவருக்கும் உணரச் செய்வதாகும். அதன்படி இம்முறை போட்டித் தொடருக்கு மேலும் ஒரு சில பாடசாலைகளையும் நாம் இணைத்துக் கொண்டுள்ளமையினால் போட்டித்தொடர் மேலும் மெருகூட்டப்படும் என நினைக்கின்றேன்எனத் தெரிவித்தார்.