உள்ளூர் போட்டிகளில் பிரகாசிக்கும் லஹிரு திரிமான்ன

60

இலங்கை கிரிக்கெட் சபை (SLC), இலங்கையின் பிரிவு A உள்ளூர் கழகங்கள் இடையே நடாத்தும் மூன்று நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இன்று (28) ஆறு போட்டிகள் ஆரம்பமாகியிருந்தன.

இன்றைய நாளுக்கான போட்டிகளில் பல உள்ளூர் கழக வீரர்கள், தேசிய அணி வீரர்களுடன் இணைந்து துடுப்பாட்டம் பந்துவீச்சு என சகலதுறைகளிலும் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தனர்.

ஒருநாள் அணியில் ஒரு மாற்றத்துடன் T20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையில் இடம்பெறவுள்ள இரண்டு…

துடுப்பாட்டத்தை எடுத்து நோக்கும் போது றாகம கிரிக்கெட் கழகத்திற்காக விளையாடும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரரான லஹிரு திரிமான்ன சதம் விளாசும் வாய்ப்பை தவறவிட்டிருந்தார். அந்தவகையில், திரிமான்ன சிலாபம் மேரியன்ஸ் அணிக்கு எதிராக 97 ஓட்டங்களைப் பெற்று  ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்திற்காக விளையாடும் இலங்கை கிரிக்கெட் அணியின் மற்றுமொரு வீரரான சதீர சமரவிக்ரம BRC அணிக்கு எதிரான மோதலில் அரைச்சதம் தாண்டி 66 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

இதேநேரம், பதுரெலிய கிரிக்கெட் கழகத்திற்காக விளையாடும் பாகிஸ்தான் வீரரான சஹிட் யூசுப் சதம் விளாசி 133 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

இவர்கள் தவிர, கோல்ட்ஸ் கிரிக்கெட் அணி வீரரான பெரேரா 99 ஓட்டங்கள் பெற்று இன்றைய நாளில் பெறப்படவிருந்த இரண்டாவது சதத்தினை ஒரு ஓட்டத்தினால் தவறவிட்டார்.

பந்துவீச்சை எடுத்து நோக்கும் போது, சிலாபம் மேரியன்ஸ் அணியின் இடதுகை சுழல் பந்துவீச்சாளரான நிமேஷ் விமுக்தி, 62 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களைச் சாய்க்க, BRC அணியின் சுழல் வீரரான துவிந்து திலகரட்ன 8 விக்கெட்டுக்களைச் சாய்த்து அசத்தல் பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார்.

முதல் நாள் போட்டிகளின் சுருக்கம்

றாகம கிரிக்கெட் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 

இடம் – சோனகர் கிரிக்கெட் கழகம்

றாகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 204 (62.2) – லஹிரு திரிமான்ன 97, நிமேஷ் விமுக்தி 6/62

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 117/2 (25) – லசித் குரூஸ்புள்ளே 55*

SSC எதிர் இராணுவப்படை கிரிக்கெட் கழகம்

இடம் – கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம், கொழும்பு

SSC (முதல் இன்னிங்ஸ்) – 229 (71) – சம்மு அஷான் 77*, M. மதுஷங்க 2/30

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 54/0 (16)

கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் சோனகர் கிரிக்கெட் கழகம் 

இடம் – கொழும்பு கிரிக்கெட் கழக மைதானம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 385/8 (90) – பவன் ரத்நாயக்க 94*, லஹிரு மதுஷங்க 89, சசித்ர சேரசிங்க 2/37

பதுரெலிய கிரிக்கெட் கழகம் எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்

இடம் – சர்ரே மைதானம், மக்கோன

பதுரெலிய கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 347/8 (88) – சஹீட் யூசுப் 133*, K. அமரசிங்க 4/54

NCC எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் 

இடம் – NCC மைதானம், கொழும்பு

NCC (முதல் இன்னிங்ஸ்) – 339 (69.2) – பெதும் நிஸ்ஸங்க 94, M. லியனகமகே 3/54

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 62/1 (18)

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் BRC 

இடம் – BRC மைதானம், கொழும்பு

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 366 (86.1) – P. பெரேரா 99, சதீர சமரவிக்ரம 66, துவிந்து திலகரட்ன 8/147

இன்று ஆரம்பமாகிய அனைத்து போட்டிகளினதும் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<