ஜூலை மாதத்துக்கான ICCயின் சிறந்த வீரர்களுக்கான பட்டியலில் பிரபாத்!

859
Prabath Jayasuriya

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) ஜூலை மாதத்துக்கான சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கான பட்டியலில் இலங்கை அணியின் பிரபாத் ஜயசூரிய பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்தி வரும் வீரர்களை ஒவ்வொரு மாதமும் தேர்வுசெய்து ஐசிசி கௌரவித்து வருகின்றது.

>> ஆசியக் கிண்ணத் தொடருக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு

அந்தவகையில் ஜூலை மாதத்துக்கான சிறந்த வீரர்களாக இலங்கை அணியின் பிரபாத் ஜயசூரிய, ஜூன் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை வென்ற இங்கிலாந்தின் ஜொனி பெயார்ஸ்டோவ் மற்றும் பிரான்ஸின் இளம் துடுப்பாட்ட வீரர் குஸ்டாவ் மெக்கியோன் ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

மேற்குறித்த மூவரிலிருந்து ஒருவரை பத்திரிகையாளர்கள், முன்னாள் வீரர்கள், ஒளிப்பரப்பாளர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவொன்று சிறந்த வீரராக தெரிவுசெய்வார்கள். அத்துடன், இதில் ரசிகர்களின் 10 சதவீத வாக்கு பதிவும் வீரர்களை தெரிவுசெய்ய உதவுகிறது.

குறிப்பாக கடந்த மாதத்தின் பிரகாசிப்புகளின் அடிப்படையிலேயே, குறித்த இந்த மூவரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். பிரபாத் ஜயசூரிய அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியதுடன், முதல் போட்டியில் ஒவ்வொரு இன்னிங்ஸ்களில் தலா 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்தப்போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் வெற்றியையும் பதிவுசெய்தது.

அதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணி தோல்வியடைந்த போதும், பிரபாத் ஜயசூரிய முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார். தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மற்றுமொரு 5 விக்கெட் குவிப்பினை கைப்பற்றியது மாத்திரமின்றி, மொத்தமாக 8 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.

ஜொனி பெயார்ஸ்டோவை பொருத்தவரை இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 106 ஓட்டங்களை பெற்றதுடன், இரண்டாவது இன்னிங்ஸில் ஜோ ரூட்டுடன் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார். இவர் 114 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றதுடன், இங்கிலாந்து அணி 378 என்ற வெற்றியிலக்கையும் அடைந்தது.

அதுமாத்திரமின்றி தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 63 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த இவர், முதல் T20I போட்டியில் 53 பந்துகளுக்கு 90 ஓட்டங்களையும் விளாசியிருந்தார்.

இதேவேளை, 2024ம் ஆண்டு T20I உலகக்கிண்ணத்துக்கான ஐரோப்பியா தகுதிச்சுற்றில் விளையாடிவரும் பிரான்ஸ் அணி வீரர் குஸ்டாவ் மெக்கியோன் செக்குடியரசுக்கு எதிரான தன்னுடைய அறிமுகப் போட்டியில் 76 ஓட்டங்களை குவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து சுவிஸ்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 109 ஓட்டங்களையும், நோர்வே அணிக்கு எதிரான போட்டியில் 101 ஓட்டங்களையும் குவித்திருந்தார். இதில் T20I போட்டிகளில் அடுத்தடுத்து சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்ற இவர், அதற்கு அடுத்ததாக நடைபெற்ற எஸ்டோனியா அணிக்கு எதிரான போட்டியில் 87 ஓட்டங்களை விளாசினார். அதுமாத்திரிமின்றி பந்துவீச்சில் 5 போட்டிகளில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

மேற்குறித்தவாறு பிரகாசிப்புகளை வழங்கியுள்ள இவர்கள் ஜூலை மாதத்துக்கான சிறந்த வீரர்களாக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இதிலிருந்து ஒரு வீரரை ஜூலை மாதத்துக்கான சிறந்த வீரராக ஐசிசி விரைவில் அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<