ஒருநாள் தரவரிசையில் உலகின் முதலிடத்தில் சமரி

ICC Rankings

38
ICC Rankings

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மகளிர் ஒருநாள் சர்வதேச துடுப்பாட்ட வீராங்கனைகளுக்கான தரவரிசையில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித்தலைவி சமரி அத்தபத்து முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

இதன்மூலம் ஐசிசி ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் 2 தடவைகள் முதலிடத்தைப் பிடித்த முதல் இலங்கை வீராங்கனை என்ற பெருமையை சமரி பெற்றுக் கொண்டார். இதற்கு முன் 2023 ஜுலை மாதமும் மகளிர் ஒருநாள் துடுப்பாட்ட வீராங்கனைகளுக்கான தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட T20i தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் டெஸ்ட் தொடர்களில் விளையாடியது. இதில் T20i தொடரை 2 – 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி கைப்பற்ற, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1 – 1 என சமநிலையிலர் முடிந்தது.

இதில் இலங்கைக்கும் தென்னாபிரிக்காவுக்கும் இடையிலான முதலாவது போட்டி மழையினால் இடையில் கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்கா 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றிருந்தது. இதனையடுத்து கடந்த புதன்கிழமை நடைபெற்ற மூன்றாவதும், கடைசியுமான ஒருநாள் போட்டியில் பல முக்கிய உலக சாதனைகளுடன் இலங்கை மகளிர் அணி 6 விக்கெட்டுகளால் மகத்தான வெற்றியீட்டி வரலாறு படைத்தது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணியால் நிர்ணயிக்கப்பட்ட இமாலய வெற்றி இலக்கான 302 ஓட்டங்ளை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 44.3 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 305 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இலங்கை மகளிர் அணி 300க்கும் மேற்பட்ட மொத்த எண்ணிக்கையைக் குவித்தது இதுவே முதல் தடவையாகும்.

நோர்த் சிட்னி மைதானத்தில் 2012ஆம் ஆண்டு நியூஸிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 289 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை அவுஸ்திரேலியா கடந்திருந்ததே இதற்கு முந்தைய மிகப் பெரிய வெற்றி இலக்காக இருந்தது.

இதன்போது அபாரமாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து ஆட்டமிழக்காது 195 ஓட்டங்களை பெற்று மகளிர் கிரிக்கெட்டில் மூன்றாவது அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றார்.

அவரது இந்த ஓட்டம் நியூசிலாந்தின் அமெலி கெர் (2018 இல் அயர்லாந்துக்கு எதிராக ஆட்டமிழக்காது 232) மற்றும் அவுஸ்திரேலியாவின் பெலின்டா கிளார்ச் (1997 இல் டென்மார்க்கிற்கு எதிராக ஆட்டமிழக்காது 229) ஆகியோரின் இரட்டைச் சதத்திற்குப் பின்னர் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் பெறப்பட்ட மூன்றாவது அதிகூடிய ஓட்டங்களாகும்.

இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் பேரவை மகளிர் ஒருநாள் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கான புதிய தரவரிசைப் பட்டியலை இன்று (23) வெளியிட்டுள்ளது. அதன்படி, மகளிர் ஒருநாள் துடுப்பாட்ட வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இலங்கை அணியின் தலைவி சமரி அத்தபத்து முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

தென்னாபிரிக்காவுடனான 2ஆவது ஒருநாள் போட்டியில் அரைச் சதமடித்த சமரி, 3ஆவது ஒருநாள் போட்டியில் சதமடித்து பல சாதனைகளை முறியடித்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் மகளிர் துடுப்பாட்ட வீராங்கனைகளுக்கான தரவரிசையில் 773 புள்ளிகளைப் பெற்று 2ஆவது இடத்தில் இருந்து முதலிடத்திற்கு அவர் முன்னேறியுள்ளார்.

மேலும், சகலதுறை வீராங்கனைகளுக்கான தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறி 9ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இதனிடையே, ஒருநாள் போட்டிகளில் மகளிர் துடுப்பாட்ட வீராங்கனைகளுக்கான தரவரிசையில் 764 புள்ளிகளுடன் இங்கிலாந்தின் Nat Sciver-Brunt இரண்டாவது இடத்திலும், தென்னாபிரிக்கா வீராங்கனை லோரா வுல்வாட் 718 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<