பொலிஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற டயலொக் ரக்பி லீக் தொடரின், பொலிஸ் விளையாட்டுக் கழகத்துடனான இரண்டாம் கட்டப் போட்டியில், இரண்டாம் பாதியில் ஆதிக்கம் செலுத்தியும் CH & FC கழகம் துரதிஷ்டவசமாக 26-21 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியினைத் தழுவியது.

அதேபோன்று, இப்போட்டியின் வெற்றியின் மூலம் பொலிஸ் விளையாட்டுக் கழக அணி இத்தொடரின் இரண்டாவது வெற்றியினை பதிவு செய்து கொள்கின்றது.

ரம்மியமான சூடான மாலைப்பொழுதில் பொலிஸ் அணியின் சொந்த மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியினை  பொலிஸ் அணி வீரர் ராஜித சன்சோனி உதைந்து ஆரம்பித்தார்.

போட்டியின் ஆரம்பத்தில் எதிர் தாக்குதல் செய்து விளையாடிய CH கழகம் பந்தினை எதிர்த் தரப்பின் எல்லைக்குள் கொண்டு போக முயற்சித்தது. இதன்போது அவர்களால் உதைக்கப்பட்ட பந்தினை பொலிஸ் அணியின் விங்கர் சுஜான் கொடித்துவக்கு பெற்றுக்கொண்டு, அதனை ட்ரை கோட்டினை நோக்கி உதைத்து கொண்டு, பந்தின் பின்னால் சென்று அதனைப் பெற்று இப்போட்டியின் முதல் ட்ரையினை பெற்றார். சன்சோனி அந்த ட்ரைக்கான கன்வேஷன் உதையையும் வெற்றிகரமான நிறைவு செய்தார். (பொலிஸ் 07 – 00 CH & FC)

போட்டியின் ஆரம்பத்திலேயே புள்ளிகளை பெற்றுக்கொண்ட பொலிஸ் அணி, முதற்பாதியிலேயே பல சாதகமான நிலைகளை தம்மகத்தே கொண்டிருந்ததுடன், ட்ரைகளை பெறுவதற்காக தொடர்ச்சியாக எதிரணியின் அசைவுகள் பலவற்றை எதிர்த்து ஆடியிருந்தது.

கடந்த தோல்விக்கு சொந்த ரசிகர்களின் முன்னிலையில் பதில் கொடுத்த கண்டி அணி

டயலொக் ரக்பி லீக் தொடரின் 2ஆம் சுற்றுப் போட்டியில், விமானப்படைஅணிக்கு எதிரான ஆட்டத்தில் ட்ரை மேல் ட்ரை வைத்து…

இருப்பினும் பொலிஸ் அணியினை சமாளித்த CH வீரர்கள் கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் வரை எதிரணி ட்ரை கோட்டை தாண்டுவதற்கு விடவில்லை.  இருப்பினும் தமது மற்றைய விங்கரான ரீஸா றபாய்தீன் மூலம் பொலிஸ் அணி தமது இரண்டாவது ட்ரையினைப் பெற்றுக்கொண்டது. எனினும் இதன்போது சன்சோனியின் உதையின்மூலம் புள்ளிகள் சேர்க்க முடியவில்லை. (பொலிஸ் 12 – 00 CH & FC)

புள்ளிகள் சேர்ப்பதில் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியிருந்த CH & FC, தமது அணியின் விங்கர் அமித் மதுசங்கவினால் பெறப்பட்ட ட்ரை மூலம் தமது முதல் புள்ளியைப் பெற்றது. பொலிஸ் அணி வீரர் ஒருவர் மேற்கொண்ட முறையற்ற தடுப்பின் காரணமாகப் பெற்ற பெனால்டி வாய்ப்பின்போது, அவர்கள் பந்தை உதையாமல் ட்ரைக்காக மேற்கொண்ட முயற்சியை மதுசங்க சிறந்த முறையில் நிறைவு செய்தார். இதன்போது ரோஹித்த ராஜபக்ஷ உதையையும் சிறந்த முறையில் மேற்கொண்டார். (பொலிஸ் 12 – 07 CH & FC)

இதற்கு உடனடியாக  பொலிஸ் அணி பதிலடி கொடுத்தது. ரோலிங் மோல் ஒன்றினை பொலிஸ் கழகம் ஏற்படுத்தி அதன் மூலம் எதிரணியின் பின்களத்தை சிறப்பாக எதிர்கொண்டு இப்போட்டியின் மூன்றாவது ட்ரையினைப் பெற்றுக்கொண்டது. இந்த ட்ரையை ரசித் சில்வா வைத்ததுடன், சன்சோனியும் சிறப்பாக உதைந்து மேலும் இரண்டு புள்ளிகளை பொலிஸ் அணிக்கு சேர்த்தார். (பொலிஸ் 19 – 07 CH & FC)

போட்டியின் முதல் பாதி முடிவடைய சற்று முன்னர், பொலிஸ் அணியின் மொஹமட் அப்சல் CH & FC யின் எதிர் தாக்குதலை சமாளித்து பந்தை சுமார் 50 மீட்டர்கள் வரை ஓடிச் சென்று அதனை ரொமேஷ் ஆராச்சிகேயிடம் கொடுக்க, அவர் போட்டியில் தமக்கான நான்காவது ட்ரையைப்  பெற்றுக்கொடுத்தார். இதனை சன்சோனி வெற்றிகரமாக உதைந்தார்.

முதல் பாதி: பொலிஸ் விளையாட்டுக் கழகம் 26 – 14 CH & FC விளையாட்டுக் கழகம்

போட்டியின் இரண்டாவது பாதி மெதுவான வேகத்திலேயே ஆரம்பித்தது. இந்தப் பாதியின் ஆரம்பத்தில் பந்தினை கையாள்வதில் பல தவறுகள் இடம்பெற்றிருந்தன. இந்த சூழ்நிலையை தமக்கு சாதமாக உபயோகித்துக்கொண்ட CH & FC அணியினர்,  லக்ஷன் ஜயபால மூலம் கம்பத்திற்கு அருகே ட்ரை ஒன்றினை வைத்தனர். ரோஹித்த ராஜபக்ஷ தனது உதையின்மூலம் மேலும் இரண்டு புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். (பொலிஸ் 26 – 14 CH & FC)

இந்தப் பாதியில்  பல ட்ரைகளை பெறுவதற்கு பொலிஸ் அணி முயற்சித்திருந்த போதும் பந்தினை கையாள்வதில் அவர்கள் சிரமத்தினை எதிர்கொண்டிந்த காரணத்தினால் அவர்களது முயற்சிகள் பயனளிக்கவில்லை.

குறித்த பாதியின் 30 நிமிடங்களுக்கும் மேலாக யாராலும் புள்ளிகளைப் பெற முடியாமல் இருந்தது. இருப்பினும் இறுதியாக CH & FC கழகத்தின் முன்வரிசை வீரர்கள்  பொலிஸ் அணியின் தடுப்பினை தகர்த்து முன்னேறி, இறுதியாக கலிந்து காரியவசம் மூலம் போட்டியின் இறுதி ட்ரையிணைப் பெற்றுக்கொண்டார். ரோஹித்த ராஜபக்ஷவின் இலகு உதை மூலம் அவ்வணி மேலதிக 2 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டது. (பொலிஸ் 26 – 21 CH & FC)

எவ்வாறிருப்பினும், போட்டியின் இறுதி நிமிடங்களில் CH & FC வீரர்கள் வெற்றிக்கான கடுமையாக முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும் அவை மிகத் தாமதமாகப் பெறப்பட்ட முயற்சிகள் என்றே சொல்ல வேண்டும்.

முழு நேரம்: பொலிஸ் விளையாட்டுக் கழகம் 26 – 21 CH & FC விளையாட்டுக் கழகம்

போட்டி நடுவர்: டிங்க பீரிஸ்

Thepapare.com இன் ஆட்ட நாயகன்: ரொமேஷ் ஆராச்சிகே (பொலிஸ் விளையாட்டுக் கழகம்)

புள்ளிகள் பெற்றவர்கள்

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 26
ட்ரை – சுஜான் கொடித்துவக்கு, ரீஷா றபாய்தீன், ரசித் சில்வா, ரொமேஷ் ஆராச்சிகே
கன்வேசன் – ராஜித சன்சோனி (03)

CH & FC விளையாட்டுக் கழகம் – 21
ட்ரை – லக்ஷன் ஜயபால, கலிந்து காரியவசம்,
கன்வேசன் – ரோஹித்த ராஜபக்ஷ