பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் முடிவுக்கு பாகிஸ்தான் ஆதரவு

1

2026 ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடர் தொடங்க இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சியிருக்கும் நிலையில், பங்களாதேஷ் இந்தியாவில் விளையாடுவது குறித்த சர்ச்சை பூதாகரமாகியுள்ளது.  

அயர்லாந்தையும் வீழ்த்தி இளையோர் உலகக் கிண்ணத்தில் இலங்கை அபார வெற்றி

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் T20 உலகக் கிண்ணத் தொடரில், பங்களாதேஷ் அணி தனது லீக் போட்டிகளில் விளையாட இந்தியா வர வேண்டும். ஆனால் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் அரசியல் பதற்றத்தைக் காரணம் காட்டி, இந்தியாவுக்கு தமது கிரிக்கெட் அணியினை அனுப்ப பங்களாதேஷ் அரசு மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (BCB) ஆகியவை மறுப்புத் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் தங்கள் நாட்டு வீரர்களை இலங்கைக்கு மாற்றி அங்கு விளையாட வைக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் (ஐ.சி.சி.) பங்களாதேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக  இன்று (21) ஐ.சி.சி இறுதி முடிவெடுக்க உள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி பங்களாதேஷின் கோரிக்கையை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, அண்டை நாடுகளுக்கு இடையே அரசியல் அமைதியின்மை நிலவும் சூழலில், பங்களாதேஷின் அச்சம் நியாயமானது என்று குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் சாத்தியப்பாடுகள் உருவாகும் சந்தர்ப்பத்தில் பங்களாதேஷின் T20 உலகக் கிண்ணப் போட்டிகளைப் பாகிஸ்தானில் நடாத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முன்வந்துள்ளதாகவும் சில நம்பத்தகுந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.   

பங்களாதேஷ் – இந்தியா இடையிலான விவகாரம் 2026 ஐ.பி.எல். தொடரில் இருந்து தொடங்கியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை நீக்குமாறு BCCI உத்தரவிட்டது. இதற்கான தெளிவான காரணங்கள் கூறப்படாத நிலையில், இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்தே பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தனது அணியை இந்தியாவுக்கு அனுப்ப முடியாது என அறிவித்தது.

எனினும் தற்போது வரை ஐ.சி.சி திட்டமிட்டபடி போட்டிகள் இந்தியாவிலேயே நடக்கும் என்றும், அட்டவணையில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்றும் தெரிவித்துள்ளது. இலங்கையில் பங்களாதேஷின் போட்டிகளை நடத்துவது குறித்த கோரிக்கையையும் இதுவரை ஐ.சி.சி ஏற்கவில்லை. இந்த விவகாரத்தால் பங்களாதேஷ் கிரிக்கெட்டிலும் குழப்பம் நீடிக்கின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<