விளையாட்டுத்துறை அமைச்சரை சந்தித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்

966
SLC technical committee

இலங்கை கிரிக்கெட்டை வளப்படுத்தவும், அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்லும் நோக்கிலும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் கடந்த வாரம் நியமிக்கப்பட்ட அரவிந்த டி சில்வா தலைமையிலான கிரிக்கெட் தொழில்நுட்ப குழு விளையாட்டுத்துறை அமைச்சரை சந்தித்துள்ளது. 

விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது கிரிக்கெட் தொழில்நுட்ப குழுவின் உறுப்பினர்களான ரொஷான் மஹானாம, முத்தையா முரளிதரன், தேசிய விளையாட்டுப் பேரவையின் தலைவர் மஹேல ஜயவர்தன, இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சிலவா மற்றும் நிறைவேற்று அதிகாரி ஷ்லி டி சில்வா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

>> இலங்கையின் கிரிக்கெட்டை கட்டியெழுப்ப ஐந்து வருடங்கள் செல்லும் – நாமல் ராஜபக்

இதனிடையே, கிரிக்கெட் தொழில்நுட்ப குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான குமார் சங்கக்கார, அபுதாபி T10 லீக்கில் பங்கேற்ற பிறகு நாடு திரும்பியுள்ளதால் அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு இந்த சந்திப்பில் கலந்துகொள்ள முடியவில்லை

இந்த சந்திப்பின் போது கிரிக்கெட் விளையாட்டின் தற்போதைய அவலநிலை, பாடசாலை கிரிக்கெட் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணியை மீண்டும் வெற்றிப் பாதையில் கொண்டு செல்வது எவ்வாறு என்பது குறித்து அமைச்சரும், முன்னாள் வீரர்களும் நீண்ட நேரம் கலந்துரையாடியிருந்தனர்.

அதுமாத்திரமின்றி, உள்ளூர் முதல்தரப் போட்டிகளின் தரத்தை மேலும் வலுப்படுத்தவும், கழகங்களின் எண்ணிக்கையை குறைக்கவும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது

குறிப்பாக, கிரிக்கெட் தொழில்நுட்ப குழுவினால் முன்வைக்கப்படுகின்ற பரிந்துரைகளை இலங்கை கிரிக்கெட் சபை நடைமுறைப்படுத்தும் எனவும் இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி நடக்கும் எனவும், குறித்த தொடரானது பெரும்பாலும் ஒரு வாரத்தினால் பிற்போடப்படலாம் எனவும் கிரிக்கெட் சபை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<