“இலங்கை வருவதற்கு முன்னணி பயிற்றுவிப்பாளர்கள் தயக்கம்” – மஹேல

Sri Lanka Cricket

1488

இலங்கை கிரிக்கெட்டுடன் இணைந்து பணியாற்றுவதற்கு சர்வதேசத்தின் முன்னணி பயிற்றுவிப்பாளர்கள் தயக்கம் காட்டிவருவதாக இலங்கை அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து மிக்கி ஆர்தர் விலகியதை தொடர்ந்து, புதிய பயிற்றுவிப்பாளர் ஒருவரை தேடும் பணியில் இலங்கை கிரிக்கெட் சபை இறங்கியுள்ளது.

‘மஹேல இணைவது எமக்கு கூடுதல் பலம்’ – அவிஷ்க

அடுத்து நடைபெறவுள்ள ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டி தொடருக்கான இலங்கை அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக ருமேஷ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இந்த விடயம் தொடர்பில் எமது இணையத்தளத்துக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் போது, மஹேல ஜயவர்தன பயிற்றுவிப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டமை மற்றும் இலங்கை அணிக்கான புதிய பயிற்றுவிப்பாளர் தெரிவு போன்ற விடயங்கள் தொடர்பில் கருத்து பகிர்ந்துக்கொண்டார்.

இந்தநிலையில், இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் தலைமை பயிற்றுவிப்பாளர்களுக்கு இடையில் கடந்த 10 வருட காலங்களில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக, முன்னணி பயிற்றுவிப்பாளர்கள் இலங்கை வருவதற்கு தயக்கம் காட்டுவதாக மஹேல ஜயவர்தன தெரிவித்தார்.

“நாம் கடைசி 10 வருடங்களில் சர்வதேச பயிற்றுவிப்பாளர்களை கவனித்த விதம் முரண்பாடுகளை தந்திருந்ததுடன், சிறந்த விடயமாகவும் இருக்கவில்லை. குறிப்பிட்ட இந்த காரணத்தால், நாம் பயிற்றுவிப்பாளர்களை தேடிவரும் நிலையில், முன்னணி

பயிற்றுவிப்பாளர்கள் இலங்கை வருவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.

கடந்தகால வரலாற்றை எவ்வாறு எதிர்காலத்தில் மாற்றுவது என்பது தொடர்பில் நாம் சிந்திக்கவேண்டும். எனவே இலங்கை கிரிக்கெட் தொழிநுட்ப குழுவுடன் இணைந்து முன்னோக்கி செல்வதற்கு எதிர்பார்க்கிறேன். அதுமாத்திரமின்றி, எனது அனுபவத்துடன்  எம்முடைய சூழலையும் முடிந்தளவு முன்னேற்றுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும்” என்றார்.

அதேநேரம், வெளிநாட்டு பயிற்றுவிப்பாளர்களை இலங்கை கிரிக்கெட் சபை தேடிவந்தாலும், அதே அளவிலான அனுபவத்தையும் திறனையும் இலங்கையின் பயிற்றுவிப்பாளர்களுக்கு கொடுக்கும் வகையிலான  நடவடிக்கை எடுத்துவருவதாக மஹேல ஜயவர்தன சுட்டிக்காட்டினார்.

“இலங்கை பயிற்றுவிப்பாளர்களை எடுத்துக்கொண்டால் சிறந்த பயிற்றுவிப்பாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு சரியான வாய்ப்புகள் இல்லை என்பதுடன், அதற்கான சரியான அனுபவமும் இல்லை. அதனால் அவர்களுக்கான அனுபவத்தை கொடுத்து, வாய்ப்பினையும் கொடுப்பதன் மூலம் பயிற்றுவிப்பாளர்களுடைய திறமையை கண்டறிவதும் மிக முக்கியமாகும்.

குறித்த இந்த விடயம் சரியாக நடைபெறுமானால் எமது எதிர்காலத்துக்கும், வீரர்களுக்கும் சிறந்த விடயமாக இருக்கும். எவ்வாறாயினும், இதற்கான சரியான நபர் ஒருவரை கண்டறிந்து இந்த வாய்ப்பினை கொடுப்பது மேலும் முக்கியமான ஒன்றாகும்” என்றார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<