பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு

194
PCB request for World Cup venue switch turned down

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் தமது அணி விளையாடும் மைதானங்களை மாற்றுவதற்கு விடுத்த கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) என்பன நிராகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த ஜோ ரூட்

ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் இந்த ஆண்டு (2023) இந்தியாவில் நடைபெறுகின்றது. இந்த உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடுவதற்காக தெரிவு செய்யப்பட்ட இரண்டு மைதானங்களை மாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் இந்த கோரிக்கையை உலகக் கிண்ணத் தொடரினை நடாத்தும் இந்தியாவும், ICC உம் இணைந்து மறுத்திருக்கின்றன. அத்துடன் மைதானங்களை எந்தக் காரணங்களை அடிப்படையாகக் கொண்டும் மாற்ற முடியாது என அழுத்தமாக தெரிவித்ததாகவும் கூறப்பட்டிருக்கின்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற கூட்டமொன்றில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையிடம் மைதானங்களை மாற்ற முடியாது எனத் தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

ஊடகங்களில் வெளியிடப்பட்ட தகவல்களுக்கு அமைய பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி சில வசதிகளைக் கருத்திற்கொண்டு ஆப்கானிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக முறையே சென்னை, பெங்களூர் ஆகிய இடங்களில் விளையாடவிருந்த போட்டிகளுக்குரிய மைதானங்களை மாற்றுவதற்கான கோரிக்கையை விடுத்திருந்ததாக கூறப்பட்டதோடு, குறிப்பிட்ட கோரிக்கையே தற்போது நிராகரிக்கப்பட்டிருக்கின்றது.

>> இலங்கைக்கு சவால் கொடுக்குமா ஓமான்?

ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அஹமதாபாதில் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக விளையாட முடியாது என கூறியிருந்த நிலையில் குறிப்பிட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டு தற்போது இரண்டாவது முறையாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் கோரிக்கையானது நிராகரிக்கப்பட்டிருக்கின்றமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

இதேவேளை ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் போட்டி அட்டவணை அடுத்த வாரம் மும்பையில் நடைபெறும் ஒரு நிகழ்வொன்றின் பின்னர வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<